Header Ads



ஒரு முஸ்லிமின் பார்வையில், தகவல் தொழில்நுட்ப சாதனங்களின் பாவனை

-அபூ உமர் அன்வாரி BA மதனீ-

 இன்று தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து அது ஓர் உச்சகட்டத்தை அடைந்து முழு உலகையும் ஒரு கைக்குள் சுருட்டிவிட்டது என்றால் அது மிகையாகாது ,இது இவ்வாறு இருக்க இதை பயன்படுத்துவோர் பல்வேறுபட்டவர்களாக  இருக்கின்றனர். பயனளிக்கும் விதத்திலும்,நல்ல விளைவுகளை உலகுக்கு கொடுக்க கூடியவர்களாகவும் இருக்கின்றனர்.இன்னும் சிலர் இதை எத்தகைய  நாசகார  செயல்களுக்கு பயன் படுத்த முடியும் என  விடா முயற்சியுடன் செயற்படுகின்றனர். இது இவ்வாறு இருக்க ஒரு முஸ்லிமின் வாழ்வில் அதன் பாவனை எவ்வாறு அமைய  வேண்டும் என நோக்குவது கட்டாயம்,ஏனெனில் இன்று இந்த தகவல் தொழில் நுட்பம் ஒரு சிலரின் உயிரைக்கூட பலியெடுத்துள்ளதை காணலாம.

01 ஆரம்பமாக  இது அல்லாஹ்வால் தனக்கு அளிக்கப்பட்ட ஒரு அருட்கொடை என்றும் இதை நல்ல முறையில் பயன் படுத்தும் போது இதை வசப்படுத்தி தந்த அல்லாஹவுக்கு நன்றிசெலுத்தக்கூடியவனாக மாற முடியும் என உறுதிகொள்ளல் வேண்டும்.அல்லாஹ் கூறிப்படும் போது – “பின்னர் அன்றைய  தினத்தில் திடமாக நீங்கள் உங்களது அருட்கொடைகள் பற்றி வினவப்படுவீர்கள்”-(102:08) என்கிறான்.

02 மானம்,மரியாதை ஆகியன மாசுபடும் விதத்தில் அதை பயன் படுத்துவதை விட்டும் தன்னையும் பிறரையும் பாதுகாத்துக்கொள்வான்,அல்லாஹவின் வசனமாகிய  -“பிறரை குறைகூறி புறம் பேசி திரியும் ஒவ்வொருவருக்கும் கேடுதான்”- (104:1) எனும் வசம் கண்முன்னே இருப்பதனால் அவன் அதை விட்டும் தன்னை பாதுகாத்துக்கொளவான்.

03 தனக்கும் பிறருக்கும் பயனுள்ள விததில் அதை நல்ல முறையில் பயன்படுத்துவதன் மூலம் ஈருலகிலும் ஈடேற்றமடைகின்றான்,நபிகளார் (ஸல்) கூறும் போது யார் ஒருவர் நல்லதின் பால் அழைக்கின்றாரோ அவரை பின் பற்றியவர்களுக்குரிய நன்மையின் கூலி அழைத்தவருக்கும் இருக்கின்றது,இன்னும் எவர் தீயதின் பால் அழைக்கின்றாரோ அதை பின்பற்றுவோரின் தீமை அதன் பால் அழைத்தவருக்கும் உண்டு என்றார்கள். (நூல்:முஸ்லிம்:174) இன்னும் நான் மரணித்தாலும் நான் விட்டு சென்ற தடயங்கள் நிலைபெறும் என ஒரு முஸ்லிம் நல்லதை மாத்திரம் தெரிவு செய்வான் இதில் தான் அவனது ஈடேற்றமும் உண்டு.

04 தான் அறிந்தவை அனைத்தையும் சமூகமயப்படுத்தாது முக்கியமானதில் மிகவும் முக்கியமானதை முன்வைப்பான்,இது பிறர் அசெளகரியங்களுக்கு உள்ளாவதை விட்டும் தடுக்கும்.தான் பொய்யன் என தூற்றப்படுவதை விட்டும் தடுக்கும், இதை நபிகளார் )ஸல்( அவர்கள்  கூறும் போது ஒரு தான் கேட்டவை அனைத்தையும் கூறுவதானது தான் பொய்யன் என்பதற்கு போதுமானது. (இதை  இமாம் முஸ்லிம் அவர்கள் தமது கிரந்தத்தின் முன்னுரையில் பதிவு செய்துள்ளார்கள்). 

05 நம்பகத்தன்மையை பேணுதல் ஒரு தகவலை நகர்த்தும் போது அதனை பல கோணங்களில் ஆராய்ந்து அதன் உண்மைத்தன்மை என்ன என உறுதிப்படுத்தியதன் பின் அதை பிறருக்கு முன் வைப்பான்.இது அல்லாஹவின் கட்டளை என்பதை உள்ளத்தில் உறுதிக்கொள்வான் முஃமின்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால், அதைத் தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள்; (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம்; பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள்.- . 49:6. 

06 பிறரது மானத்தை பறிக்கும் செயற்பாடுகள் வெளிப்படும் போது அதில் தானும் பங்கு கொள்ளாது தனது சகோதர,சகோதரியை பற்றிய  நல்லெண்ணத்தை வளரத்துக்கொள்வதுடன் இதற்கு மேலும் வலுவூட்டும் செயற்பாடுகளை விட்டும் தவிந்து கொள்வான்.நல்லதின் பால் தனது கவனத்தை திருப்புவான்,அல்லாஹ் கூறும் போது- நீங்கள்  நன்மைக்கும் அல்லாஹ்வின் உள்ளச்சத்தின் பாலும் ஒருவருக்கொருவர் உதவி ஒத்தாசையாக இருங்கள்,மேலும் பாவத்தின் மீதும் பகைமை மீதும் ஒருவருக்கொருவர் உதவியாக  இருக்க வேண்டாம்.(5:2 )

07 தகவல்களை பதிவிரக்கம் செய்தல்,பதிவேற்றம் செய்தல் ஆகிய  கருமங்களின் போது தனக்கு எதிராக  நாளைய தினம் சாட்சி சொல்லாத விதத்தில் நடந்து கொள்வான்.. அந்நாளில் அவர்களுடைய நாவுகளும், அவர்களுடைய கைகளும், அவர்களுடைய கால்களும் அவர்களுக்கெதிராக, அவர்கள் செய்ததை பற்றி சாட்சியம் கூறும். 24:24 .மேலும் அல்லாஹ குரிப்பிடும் போது 41:19. மேலும், அல்லாஹ்வின் பகைவர்கள் (நரகத்)தீயின் பால் ஒன்று திரட்டப்படும் நாளில், அவர்கள் (தனித் தனியாகப்) பிரிக்கப்படுவார்கள். இறுதியில், அவர்கள் (அத்தீயை) அடையும் போது, அவர்களுக்கு எதிராக அவர்களுடைய காதுகளும், அவர்களுடைய கண்களும், அவர்களுடைய தோல்களும் அவை செய்து கொண்டிருந்தவை பற்றி சாட்சி கூறும். அவர்கள் தம் தோல்களை நோக்கி, “எங்களுக்கு எதிராக நீங்கள் ஏன் சாட்சி கூறினீர்கள்?” என்று கேட்பார்கள்; அதற்கு அவை: “எல்லாப் பொருட்களையும் பேசும் படிச் செய்யும் அல்லாஹ்வே, எங்களைப் பேசும்படிச் செய்தான்; அவன்தான் உங்களை முதல் தடவையும் படைத்தான்; பின்னரும் நீங்கள் அவனிடமே கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள்” என்று கூறும். “உங்கள் காதுகளும், உங்கள் கண்களும், உங்கள் தோல்களும், உங்களுக்கு எதிராகச் சாட்சி சொல்லாமலிருக்கும் பொருட்டு, உ (ங்கள் பாவ)ங்களை நீங்கள் மறைத்துக் கொள்ளவில்லை; அன்றியும், நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றில் மிகுதமானதை நிச்சயமாக அல்லாஹ் அறியமாட்டான் என்று நீங்கள் எண்ணிக்கொண்டீர்கள். ஆகவே, உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் எண்ணிய உங்களுடைய (தவறான) இந்த எண்ணம்தான் உங்களை அழித்து விட்டது; ஆகவே நீங்கள் நஷ்டமடைந்தவர்களில் ஆகிவிட்டீர்கள் (என்றும் அவை கூறும்). (அத்தியாயம் 41 வசனங்கள் 20 முதல் 23 வரை)

இவற்றை பேணிய முஸ்லிமுக்கு இருவிதமான வெற்றிகள் காத்துக் கொண்டுள்ளன,அவற்றை வெகு விரைவில் அடைந்து கொள்வான் என்பது திண்ணம் இதுவை நிஜம்.

No comments

Powered by Blogger.