Header Ads



நாடு திரும்புவோரின் அவதானத்திற்கு..! கட்டாரிலிருந்து வந்தவருக்கு ஏற்பட்ட பயங்கரம்

கட்டாரிலிருந்து நாடு திரும்பிய பொத்துவில் பிரதேசத்தை சேர்ந்த ஒருவரை கடுமையாகத் தாக்கி அவரிடமிருந்து பெறுமதியான பொருட்களை அபகரித்துச் சென்றதாகக் கூறப்படும் மூவரை கைதுசெய்துள்ளதாக தெல்தெனிய பொலிஸார் தெரிவித்தார். 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

'கட்டாரிலிருந்து கடந்த 28ஆம் திகதியன்று நாடு திரும்பிய பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், கட்டுநாயக்கவிலிருந்து வானொன்றில் பொத்துவில்  நோக்கிப் பயணித்துள்ளார். அந்த வானில் சாரதி உட்பட மேலும் நால்வர் பயணித்துள்ளனர். 

தெல்தெனிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒருதொட்டப் பகுதியில் வான் பயணித்துக்கொண்டிருந்தபோது, அவருக்கு ஒருவகையான பாணத்தை பருகக் கொடுத்துள்ளனர். அதனை பருகியவுடன் அவருக்கு மயக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில், அவரிடமிருந்து ஒரு இலட்சத்து ஆறாயிரம் ரூபாய் பணம் மற்றும் 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச்சங்கிலி, 04 அலைபேசிகளை கொள்ளையடித்துக்கொண்டு அவரையும் நன்றாகத் தாக்கி, வானிலிருந்து கீழே தள்ளிவிட்டு அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளனர். 

இந்தச் சம்பவம் தொடர்பில் தெல்தெனிய பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து, சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடியை வசிப்பிடமாகக் கொண்ட மூவரை கொள்ளையடிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் வானுடன் ஹுன்னஸ்கிரிய பகுதியில்  பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் தெல்தெனிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருகின்றார் என்று தெரிவித்த பொலிஸார், தப்பிச்சென்றவரை தேடி வலை விரித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.