Header Ads



ஜனாதிபதி மைத்திரி, மஹிந்தவை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது - டிலான் பெரேரா

யுத்த குற்றச்சாட்டுகள் மூலம் மஹிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரைக்கு கொண்டுசெல்லும் முயற்சிகள் பலமடைந்து வருகின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்தவை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. ஆனால் ரணில் மீது துளியளவேனும் நம்பிக்கை இல்லை என முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

நேற்று கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

போர்க்குற்ற விசாரணைகளின் மூலம் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதும், மின்சாரக் கதிரை கதைகளும் பொய்யான கூற்றுக்கள் என்றே நாம் நினைத்தோம். ஆனால் இப்போதிருக்கும் நிலைமைகளை பார்க்கும்போது மின்சாரக் கதிரை கதைகள் பொய்யானது அல்ல என்று தோன்றுகின்றது.

யுத்தத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க் குற்றச்சாட்டுகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய நபர்களை தண்டிக்க வேண்டும் என சர்வதே புலம்பெயர் அமைப்புகள் மற்றும் இங்குள்ள இனவாத தரப்புக்கள் தெரிவித்து வருகின்றன.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கையின் அண்மைக்கால செயற்பாடுகள் அமைந்துள்ளன. குறிப்பாக யுத்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் சர்வதேச விசாரணையே அவசியம் என்றும், சர்வதேச விசாரணை அறிக்கையின் மூலம் குற்றங்கள் கண்டறியப்படுதல் அவசியம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் தெரிவித்துள்ளது.

எனினும் சர்வதேச விசாரணைக்கு அனுமதிப்பதில்லை என அரசாங்கம் குறிப்பிட்டாலும் உள்ளக பொறிமுறைகள் மூலம் போர்க்குற்ற விசாரணைகளை முன்னெடுப்பதாக கூறுகின்றது. அதேபோல் உள்ளக விசாரணைப் பொறிமுறையின் போது வடமாகாண சபைக்கு முக்கிய பங்கினை வழங்கப்போவதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இலங்கை மீதான சர்வதேச விசாரணைகள் தொடர்பில் சனல் 4ன் அறிக்கை கசிந்துள்ளது. இதிலும் போர்க்குற்றவாளிகளை தண்டிப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் கூறப்படுகின்றது. மிகவும் முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அண்மைக்கால செயற்பாடுகள் மோசமானதாகவே அமைந்துள்ளன.

எமது ஆட்சியில் 13ம் திருத்தச் சட்டத்தில் அதிகாரங்கள் போதுமென கூறியவர்கள் இப்போது 13க்கு அப்பால் சென்று சுயநிர்ணய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். ஆகவே மஹிந்தவை மின்சாரக் கதிரைக்கு கொண்டு செல்லும் தீவிர முயற்சிகளை இவர்கள் மேற்கொள்கின்றனர்.

கேள்வி :- மஹிந்தவை தண்டிக்க அனுமதிக்கமாட்டோம் என பிரதமர் கூறியுள்ளாரே?

பதில் :- மஹிந்த ராஜபக்சவை மின்சாரக் கதிரைக்கு கொண்டுசெல்ல ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த பல சந்தர்ப்பங்களில் தெரிவித்துள்ளார். யுத்த காலகட்டத்தில் எம்முடன் இணைந்து வெற்றிக்கு வித்திட்டவர்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பங்கும் உள்ளது. கடந்த ஜனாதிபத் தேர்தலின் போதும் அவர் மஹிந்தவை மின்சாரக் கதிரைக்கு கொண்டுசெல்ல ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை என்பதை குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நாம் ஒருபோதும் நம்பப்போவதில்லை. ரணில் விக்கிரமசிங்க அனைத்து சந்தர்ப்பங்களிலும் சர்வதேச பிரிவினைவாத அமைப்புகளுடனும் புலிகளுடனுமே செயற்பட்டவர். ஆகவே இப்போதும் அவர் சர்வதேச விசுவாசியாகவே செயற்பட்டு வருகின்றார். மஹிந்தவை மின்சாரக் கதிரைக்கு அனுமதிக்க அவர் நினைத்தாலும் இந்த நாட்டின் சிங்கள மக்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அதை தெரிந்துகொண்டே ரணில் இவ்வாறு கூறுகின்றார் என்றார்.

No comments

Powered by Blogger.