Header Ads



'நாம் செய்து காட்டியிருக்கிறோம்' அப்துர் ரஹ்மான்

'மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களால் செய்ய முடியாது போன சமூகக் கடமைகளை அதற்கு வெளியே இருந்து நாம் செய்து காட்டியிருக்கிறோம்' என நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் அண்மையில் காத்தான்குடியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றும்போது தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மரச் சின்னத்தில் 2ம் இலக்க வேட்பாளராக போட்டியிடும் பொறியியலாளர் அப்துர் ரஹ்மான் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது,

"மக்கள் ஆணையைப்பெற்று பாராளுமன்றம் சென்றவர்கள் சமூகத்திற்கு ஆற்ற வேண்டிய பணிகளை மறந்து செயற்படுவது விசனத்துக்குரியதாகும். கடந்த காலங்களில் இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக இன மதவாத வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டபோது, அதனை எதிர்த்து குரல்கொடுக்காது தமது அரசியல் இருப்புகளையும் அதன் மூலம் கிடைக்கும் சுய இலாபங்களையும் பாதுகாத்துக்கொள்ளும் நோக்கில் செயற்பட்டமையை மக்கள் அறிவர்.

தம்புள்ளை மற்றும் ஏனைய பிரதேசங்களில் மஸ்ஜிதுகள் தாக்கப்ட்டபோதும், மத விவகாரங்களை சுதந்திரமாக நிறைவேற்ற விடாமல் தடுத்த போதும் பர்தா, ஹலால் போன்ற பல்வேறு விவகாரங்கள் தலைதூக்கிய போதெல்லாம் அவற்றை எதிர்த்து குரல் கொடுக்காமல், தாம் சார்ந்த அரசியலை ஸ்திரப்படுத்துவதில்தான் பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அக்கறை காட்டி வந்தனர். கிரீஸ் மனிதன், வெள்ளை வேன், பயங்கர கொடூர சம்பவங்கள் நடந்தபோது அவ்வாறான சம்பவங்கள் நடைபெறவில்லை, இவைகள் கட்டுக் கதைகள் என்றெல்லாம் உண்மைக்குப் புறம்பாக செயற்பட்டமையை மக்கள் அறிவர். 

இந்த நிலமைகளில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, எந்த வித பாராளுமன்ற உறுப்புரிமையும் இல்லாத நிலையில், மகிந்தவின் பயங்கரமான, அராஜக அடக்குமுறை அரசியலுக்கு மத்தியிலும், இப்பிரச்சனைகளை தேசியத்திற்கும், சர்வதேசத்திற்கும் முன்கொண்டு சென்றது. மக்களுக்கு அவ்வப்போது விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளர் இலங்கை வந்த போது அவரை பகிரங்கமாக சந்தித்து முஸ்லிம்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் தொடர்பில் அறிக்கை கொடுத்தது. இவ்விடயம் தொடர்பாக நமது நாட்டில் அக்கறையுடன் செயற்பட்ட அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா, முஸ்லிம் கவுன்சில் போன்ற சிவில் அமைப்புகளுடன் ஒத்துழைப்புடன் செயற்பட்டது.

மக்கள் பிரதிநிதிகள் மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை நிவர்த்திப்பதற்கு முயற்சிக்க வேண்டுமேயல்லாது அதனை மூடி மறைப்பதும் திரிபு படுத்துவதும் சமூகத்துரோகமாகும். இத்தகைய பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள் மீண்டும் மக்கள் ஆணையினை வேண்டி தேர்தலில் போட்டியிடுகின்றனர். அவர்களுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். சமூகம் சார் கடமைகள் என்னவென்று தெரியாதவர்களை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யாமல் தகுதி வாய்ந்த சமூக அரணாக செயற்படக்கூடிய ஆளுமையும் துணிவும் கொண்ட பிரதிநிதிகளை தெரிவு செய்யுமாறு மக்களை வேண்டிக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டார்.


No comments

Powered by Blogger.