Header Ads



மஹிந்த தரப்பு UPFA யின் அதிகாரத்தைக் கைப்பற்ற முயன்றபோதும், இறுதியில் கைவிடப்பட்டது

-Tm-

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலோ போட்டியிடுவதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் அவரது குழுவினருக்கும் சந்தர்ப்பம் வழங்காமல் விடுவதற்கு  சு.க மற்றும் ஐ.ம.சு.கூ ஆகியவற்றின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். 

இதேவேளை, ஐ.ம.சு.கூ.வின் அதிகாரத்தைப் பெற்று பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் மஹிந்த தரப்புக்கு இருக்கின்ற போதிலும், அதில் ஏற்படக்கூடிய சட்டப் பிரச்சினைகள் காரணமாக அம்முயற்சியை கைவிட்டுவிட்டு அதற்கு மாற்றீடாக புதிய முன்னணியொன்றை உருவாக்கி அதிலிருந்து தேர்தலில் போட்டியிட அத்தரப்பு நேற்று வியாழக்கிழமை (02) இரவு முடிவெடுத்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவுடன் கூட்டணியில் உள்ள மிக நெருங்கியவர்களுக்கு வேட்புமனு வழங்கக்கூடாது என்ற நோக்கத்தின் காரணமாகவே மஹிந்தவுக்கும் வேட்புமனு வழங்குவதில்லை என்ற தீர்மானத்தை ஜனாதிபதி எடுத்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. 

மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்குவதற்கு ஸ்ரீ  லங்கா சுதந்திரக் கட்சி தயாராக உள்ள போதிலும் அவருடன் கூட்டணியில் உள்ள திருடர்களுக்கு வேட்புமனு வழங்கத் தயாரில்லை என்று ஜனாதிபதி சிறிசேன, நேரடியாகவே கூறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், மஹிந்த தரப்பு தங்களுடைய இரண்டாவது திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கில் ஐ.ம.சு.கூ.வின் அதிகாரத்தைக் கைப்பற்றும் முயற்சியில் களமிறங்கிய போதிலும் அதனால் ஏற்படக்கூடிய சட்ட சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, அம்முயற்சியையும் கைவிட தீர்மானித்துள்ளது. 

கூட்டமைப்பின் அதிக அதிகாரம் மஹிந்த தரப்புக்கு இருக்கின்ற போதிலும் அதனைக் கைப்பற்றி தேர்தலில் போட்டியிட முடியற்சித்தால், சட்டச்சிக்கல் காரணமாக தங்கள் தரப்பு வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட வாய்ப்பு உள்ளது என சட்ட ஆலோசகர்கள் வழங்கிய ஆலோசனைகளால் மஹிந்த தரப்பு தற்போது அச்சம் கொண்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்ட மஹிந்த தரப்பு, தங்களது இரண்டாவது திட்டத்தையும் கைவிட்டுவிட்டு மூன்றாவது திட்டத்துக்கு தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதற்கமைய, கடந்த தேர்தல்களின் போது கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிட்டவர்கள், ஐ.ம.சு.கூ.விலிருந்து விலகி, மஹிந்தவுடன் இணைந்து புதிய கூட்டமைப்பொன்றை உருவாக்கும் திட்டத்தில் குதித்துள்ளனர் என்று அத்திட்டத்தில் களமிறங்கியுள்ள தரப்பினர் தெரிவித்தனர். 

No comments

Powered by Blogger.