Header Ads



குயில் கூவுவது போன்றிருந்த உங்கள் குரலில், திடீரென காகம் சத்தம் வருகிறதா..?

வாயைத் திறந்தால் வெறும் காற்று மட்டுமே வரும். குயில் கூவுவது போன்றிருந்த குரலில் திடீரென காக்கா கத்தும். உணவை விழுங்க முடியாது. தண்ணீர் கூடக் குடிக்க முடியாது.  தொண்டையில் ஏற்படுகிற கரகரப்பு இவ்வளவையும் செய்யும். இதற்கு மேலும் செய்யும். தொண்டைக்  கரகரப்புக்கான காரணங்கள் குறித்துப் பேசுகிறார் காது, மூக்கு, தொண்டை மருத்துவர் பாபு மனோகர். 

தொண்டை கரகரப்பு

ஏற்படுவதற்கு மருத்துவ ரீதியாக பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. பல் மற்றும் ஈறுகளில் தொற்று, புகைப் பழக்கம், புகையிலை, பாக்கு பழக்கம், மதுப் பழக்கம் போன்றவற்றால் தொண்டையில் கரகரப்பு ஏற்படலாம். மூக்கடைப்புப் பிரச்னையால் துன்பப்படும் ஒருசிலர் தூங்கும் நேரங்களில் வாயைத் திறந்து வைத்துக்கொண்டு மூச்சு விடும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். இதன் காரணமாக, தொண்டை வறண்டு கரகரப்பு ஏற்படும். 

மூக்கடைப்பை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்தால், அதனால் ஏற்படும் தொண்டை கரகரப்பைக் குணப்படுத்தலாம். இரவில் காலம் தாழ்த்தி சாப்பிட்டு, உடனே தூங்கும் பழக்கம் உடையவர்கள், பெருத்த தொந்தி உடையவர்கள், இரவு உணவில் கொழுப்பு அதிகமாக சாப்பிடு பவர்கள், சைனஸ் பிரச்னையால் துன்பப்படுபவர்கள் ஆகியோரும் தொண்டையில் கரகரப்பு உண்டாகி அவதிப்படுவார்கள். டான்சில் உள்ள இடத்தில் அழுக்கு சேர்வதும் தொண்டை கரகரப்புக்கு வழிவகுக்கும். 

புகை, மதுப்பழக்கம், பாக்கு பயன்படுத்துதல் போன்ற எந்த கெட்டப் பழக்கமும் இல்லாமல் இருப்பது, இரவு உணவுக்குப் பின் குறைந்தது 2 மணிநேரம் கழித்து தூங்க செல்லுதல் போன்றவை தொண்டையில் கரகரப்பு ஏற்படுவதைத் தடுக்கும். தொண்டை கரகரப்பு காரணமாக அவதிப்படுகிறவர்கள் காது, மூக்கு, தொண்டை மருத்துவரை அணுகி,  சரியான காரணத்தைக் கண்டறிந்து, உரிய சிகிச்சை பெற வேண்டும்.’’

No comments

Powered by Blogger.