Header Ads



"முஸ்லிம் அரசியலை முன்னிறுத்தி"

- வழிப்போக்கன் -

ஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில் - தலைவிரித்து, தலைக்குப் பூ வைத்து ஆடிக் கொண்டிருந்த பேரினவாதம், புதிய ஆட்சியில் கொஞ்சம் கால்விலங்கிடப்பட்டுக் கிடக்கிறது. சிறுபான்மையினரைப் பொறுத்தவரை, அதுவும் - முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை இதுவொரு ஆறுதலான விடயமாகும். ஆனாலும், இந்த ஆறுதல் நிலையானதுதானா என்கிற அச்சம், ஒவ்வொரு சிறுபான்மையினருக்குள்ளும் உறுத்திக் கொண்டேயிருக்கிறது.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு விட்டது. இனி, அடுத்த ஆட்சியில் - எவர் வந்து அமரப் போகின்றார் என்பதில்தான் - சிறுபான்மையினரின் தலைவிதி நிர்ணயமாகப் போகிறது. இப்போதைக்கு - பெரிய கட்சிகளான ஐ.தே.கட்சி ஒருபுறமும், சுதந்திரக் கட்சியில் மைத்திரி அணி, மஹிந்த அணி என்று மறுபுறங்களிலும் பிளவுபட்டுக் கொண்டு - களத்தில் இறங்கப் போகின்றன.

போதாக்குறைக்கு, முஸ்லிம் சமூகத்தின் மீது, காட்டுமிராண்டித்தனமாக பேரினவாதத்தினை ஏவி விட்டுக் கொண்டிருந்த பொதுபலசேனாவும் - வருகிற தேர்தலில் நாகப் பாம்பு சின்னத்தில் களமிறங்கப் போவதாக கதைகள் வருகின்றன.

நடக்கின்ற அனைத்தையும் கூட்டிக் கழித்துப் பார்க்கும் போது, முஸ்லிம் சமூகத்துக்கு பேரினவாதத்திடமிருந்து கிடைத்த விடுதலையானது, சிலவேளைகளில் இல்லாமல் போய் விடுமோ என்கிற பயம் உள்ளுக்குள் எழுகிறது.

எனவே, தற்போதைய தருணத்தினை - முஸ்லிம் சமூகம் மிகவும் புத்தி சாதுயரித்துடன் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. அடுத்த நாடாளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெறுவதற்கான திகதி குறிக்கப்பட்டு விட்டது. இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் முஸ்லிம் சமூகம் - தனது அரசியல் பலத்தினை செறிந்த நிலையில் அதிகரித்துக் கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும். அப்போதுதான், உரிமைகளுக்காகக் குரல் கொடுப்பதும், பேரினவாதத்தின் வேட்டைப் பற்களிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்வதும் முஸ்லிம் சமூகத்துக்கு சாத்தியமானதாக இருக்கும்.

'நாடாளுமன்றில் அரசியல் பலத்தினை செறிந்த நிலையில் அதிகரித்துக் கொள்தல்' என்கிற வாக்கியம் குறித்து, இங்கு கவனம் செலுத்துதல் அவசியமாகும்.

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் மொத்தமாக 17 முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தனர். இவர்கள் 05 அரசியல் கட்சிகளைச் சார்ந்தவர்களாவார். இவர்களில் 08 நாடாளுமன்ற உறுப்பினர்கள் - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசைச் சேர்ந்தவர்கள். அந்தவகையில், அதிகமான முஸ்லிம் நாாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக - கடந்த நாடாளுமன்றில் மு.காங்கிரஸ் இருந்தது. 

கலைக்கப்பட்ட நாடாளுமன்றில் அங்கம் வகித்த 17 முஸ்லிம் உறுப்பினர்களும் 05 கட்சிகளை பிரதிநிதித்துவப் படுத்தியமை காரணமாக, ஒரு செறிவான அரசியல் பலத்தினை முஸ்லிம் சமூகத்தினால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அநேகமாக, முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகள் தொடர்பிலேயே, மேற்படி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களால், இணைந்து செயலாற்ற முடியாமல் போயிற்று. தங்களினதும், தமது கட்சிகளினதும் -அரசியல் நலன்களை முன்னிறுத்தி, மேற்படி முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 'தண்ணீருக்கொரு பக்கமும் தவிட்டுக்கு இன்னொரு பக்கமுமாக' தமது கயிறுகளை இழுத்துக் கொண்டிருந்தார்கள். இதனால், நாடாளுமன்றில் 17 முஸ்லிம் உறுப்பினர்கள் இருந்தும், அந்தப் பலத்தினையும், அதன் பயன்களையும் முஸ்லிம் சமூகத்தினால் பெற்றுக்கொள்ள முடியவேயில்லை.

எனவே, இந்த நிலையினை மாற்றியமைக்க வேண்டும். நாடாளுமன்றில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலத்தினை செறிவுபடுத்திக் கொள்தல் அவசியமாகும். அதாவது, பலமுள்ள ஒரு கட்சியினை மேலும் பலப்படுத்துவதன் ஊடாக, இதனை நாம் சாதித்துக் கொள்ள முடியும். 

இப்போதைக்கு, முஸ்லிம் சமூகத்தில் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெறுவதற்கு சாத்தியமுள்ள அரசியல் கட்சி - ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசாகவே உள்ளது. எனவே, அந்தக் கட்சியின் பலத்தினை மேலும் அதிகரித்துக் கொள்வதன் மூலமாகவே, முஸ்லிம் சமூகம் தனது இலக்குகளை, ஓரளவாயினும் - அடைந்து கொள்ள முடியுமாக இருக்கும். 

முஸ்லிம் சமூகத்திலிருந்து தெரிவாகுவதற்கு வாய்ப்புள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களில் அதிகமானோரை - முஸ்லிம் காங்கிரஸ் சார்பாகத் தெரிவு செய்வதன் மூலமாக, தனது அரசியல் பலத்தினை - முஸ்லிம் சமூகம் செறிவுபடுத்திக் கொள்ள முடியும். 20 நாடாளுமன்ற உறுப்பினர்களை 05 அல்லது 06 கட்சி சார்பாக வைத்திருப்பதனை விடவும், ஒரு கட்சியில் 10, 12 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துள்ள  சமூகத்தின் அரசியல் குரலுக்கு, வலு அதிகமாகும்.
20 ஆவது உத்தேச அரசியல் திருத்தமானது, சிறிய கட்சிகளுக்கும் - சிறுபான்மைக் கட்சிகளுக்கும் பாதிப்பாக அமைந்து விடும் என்கிற அச்ச நிலையொன்று எழுந்த போது, 18 கட்சிகள் ஒன்றிணைந்து, அந்தத் திருத்தத்தினை எதிர்ப்பதென முடிவு செய்திருந்தமை குறித்து நாம் அறிவோம். 

20 ஆவது அரசியல் திருத்தத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கும் பொருட்டு, குறித்த 18 கட்சிகளின் பிரதிநிதிகளும் ஒன்றிணைந்த ஒவ்வொரு தருணத்திலும், அவர்களுக்குத் தலைமை தாங்கும் நபராகவும், குரலாகவும் - மு.காங்கிரசின் தலைமையினையே முன்னிறுத்தியிருந்தனர். இது  உன்னிப்பாகக் கவனிக்கத்தக்கது. 

சிறிய மற்றும் சிறுபான்மை சமூகத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளில், முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சிதான் - கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் அதிக உறுப்பினர்களை தனித்துப் பெற்றிருந்தது. அதாவது, மேற்படி 18 கட்சிகளிலும் முஸ்லிம் காங்கிரசுக்குத்தான் செறிவான அரசியல் பலம் இருந்தது. அதனால்தான் - சிறிய மற்றும் சிறுபான்மைக் கட்சிகள், மு.காங்கிரசின் தலைமையினை முன்னிலைப்படுத்த வேண்டியிருந்தது.

எனவே, முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பலமானது - நாடாளுமன்றில் செறிவான வகையில் அதிகரிக்கப்படுதல் அவசியுமாகிறது. 10 முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 கட்சி சார்பாக இருப்பதற்கும், 05 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு கட்சி சார்பாக இருப்பதற்குமிடையிலான வித்தியாசம் குறித்து,  இங்கு மேலும் மேலும் விளக்கி நிற்கத் தேவையில்லை. 

எதிர்வரும் தேர்தலில், முஸ்லிம் சமூகம் - தனது நாடாளுமன்றப் பிரதிநிதித்துவங்களை அதிகரிக்க வேண்டுமென்பது,  இங்கு இரண்டாவது விருப்பமாகவே நமக்குப் படுகிறது. 

பெற்றுக் கொள்ளும் நாடாளுமன்றப் பிரதி நிதித்துவங்கள் - முடிந்தவரையில் 'ஓரிடத்தில்' செறிந்திருக்க வேண்டும் என்பதுதான் நமது முதல் விருப்பமாகும்.

    1 comment:

    1. Polytricks to fool the muslims to get more MPs to bargain for more money. But people are on high vigil at your lucrative moves. You can not fool them every-time. Last presidential election is a good example for u.

      ReplyDelete

    Powered by Blogger.