Header Ads



ரகர் வீரர் தாஜூதீன், எப்படி படுகொலை செய்யப்பட்டார்..? (அதிரடி ரிப்போர்ட் இணைப்பு)

-நஜீப் பின் கபூர்-

2012 வருடம்  மே 17 ம் திகதி கொழும்பு நரேஹன்பிட்ட வீதி, சலிக்கா விளையாட்டரங்கு அருகில் வீதியில் மர்மமான முறையில்  எரியுண்ட ஒருவரது உடல்  கார் வண்டி ஒன்றுக்குள் கண்டெடுக்கப்படுகின்றது. வெளித் தோற்றத்துக்கு விபத்து. அதனைத் தொடர்ந்து வண்டி தீப்பிடித்திருக்கின்றது என்ற தோற்றப்பாடு. இப்போது விபத்துடன் எரியுடண்ட இந்த நபர் யார்? என்ற கேள்வி எழுகின்றது.

விபத்தில் இறந்து கிடப்பவர் இந்த நாட்டில் புகழ் பெற்ற ரகர் வீரர் தாஜூதீன் என்பது தெரிய வருகின்றது.  இந்த மரணம் தொடர்பில் அன்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜீத் ரோஹன ஊடகங்கள் முன்  இது விபத்தினால் ஏற்பட்ட சராசரி மரணம் என்று நியாயப்படுத்தி தனது குறிப்பை உலகறியப் பண்ணுகின்றார். இப்போது நாட்டுக்கு ரகர் வீரர் தாஜூதீன் கார் விபத்தில் மாண்டு போனார் என்பது கதை! பொலிஸ் ஊடகப் பேச்சாளர்தானே கதையையும் உறுதிப்படுத்தி சான்றிதழ் வழங்கி இருக்கின்றார். 

இந்த மரணம் தொடர்பில் அன்று சந்தேகங்கள் இருந்த போதும் அன்றிருந்த அரசியல் பின்னணியில் அதனை எங்கும் எடுத்துச் செல்லவோ முறைப்பாடு செய்யவோ முடியாத ஒரு நிலை நாட்டில் இருந்தது என்பது உலகறிந்த விவகாரம்!

மைத்திரியின்  நல்லாட்சியுடன் ராஜபக்ஷக்களின் அரசியல் விளையாட்டுக்கள் சந்திக்கு வந்த போது இந்த தாஜூதீன் மரணமும் ஊசலாட்டம் காணத் துவங்கியது. 

ஆச்சர்யமான முறையில் விபத்தில் இறந்த தாஜூதீன் மரணம் ஒரு கொலை என்பது தெரியவரவே அது பற்றிய தேடல்கள் ஆரம்பமானது. எனவே இது பற்றி உத்தியோக பூர்வமான மறு விசாரணைகளை 2015 பெப்ரவாரி 16ம் திகதி இரகசியப் பொலிஸ் துவங்கியது!  இந்தத் துவக்க விசாரணையில் மரணம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட சட்ட வைத்திய அதிகாரிகளின் அறிக்கைகளுக்கும் அரச பரிசோதகர்களின் இரசாயனப் பகுப்பாய்வு அறிக்கைக்குமிடையே பெரும் முரண்பாடுகள் காணப்பட்டன. 

இதனால் தாஜூதீன் மரணத்தில் பெரும் சந்தேகங்கள் இருப்பதாக இரகசியப் பொலிசார் கொழும்பு பிரதான நீதி மன்றிற்குத் தெரியப்படுத்தி இருக்கின்றார்கள். இந்த முரண்பாடு எப்படித் தோன்றியது என்பது தொடர்பாக சட்ட மா அதிபருக்குத் தெரியப்படுத்தி அது விவகாரத்தில் அவரது ஆலோசனைகளை தாம் எதிர் பார்த்திருப்பதாக கொலைகள் தொடர்பான இரகசியப் பொலிஸ் பொறுப்பதிகாரி கொழும்பு நீதவான் நிசந்த பீரிசுக்குத் தெரியப்படுத்தி இருந்தார்.

இந்த முரண்பாடான இரசாயனப் பகுப்பாய்வு தொடர்பான அறிக்கை வழங்கிய ஆனந்த சமர சேக்கர, சீ.கே. ராஜ குரு, சிரியந்த அமரத்தன, மற்றும் தயானி வீரரத்தன  ஆகியோரை தற்போது நீதிமன்றத்தின் முன் நிறுத்தி இதற்கான விளக்கத்தைப் பெற  வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது. இவர்கள்தான் இந்த அறிக்கையைத் தயாரித்தவர்கள் என்பதனால் இந்த நிலை! இப்படி அறிக்கை வெளியிட்டதற்கான காரணங்களை அவர்களே நாட்டுக்குச் சொல்ல வேண்டியும் இருக்கின்றது.

இந்த குழறுபடிகள் இப்படிப் போய்க் கொண்டிருக்கின்றபோது. 2012ம் மே 17ம் திகதி தாஜூதீனுடைய கையடக்கத் தொலைபேசிக்கு உள், வெளி வந்த அழைப்புக்கள் தொடர்பாக தகவல்களை வழங்குமாறு நீதிமன்றின் அனுமதி தற்போது கோரப்பட்டிருக்கின்றது.

நாட்டில் இப்படி எத்தனையோ கொலைகள் நடைபெற்றிருக்கின்ற போது தாஜூதீனுடைய மரணம் இத்துனை முக்கியத்தவம் கொடுத்துப் பார்க்கப்பட என்ன காரணம் என்று தேடினால் இந்த கொலையில் ராஜபக்ஷ ஆட்சியில் நேரடித் தொடர்பு இருப்பதாக தற்போது பார்க்கப்படுகின்றது.

ராஜபக்ஷ புதல்வர்களுடன் கல்கிஸ்ஸை தோமஸ் கல்லூரியில் ரகர் விளையாடியவர்தான் இந்தத் தாஜூதீன். இவர் மரணம் அன்று விபத்தாகவும் இன்று ஒரு கொலையாகவும் பார்க்கப்படுவது ஏன்.

காதல் விவகாரமும் பதவியும்

தாஜூதீன் மரணத்துடன் முன்னாள் ஜனாதிபதி மகன் யோசித ராஜபக்சவின் பெயர் ஏன் உச்சரிக்கப்படுகின்றது? 

ரகர் உலகில் இந்தக் கதை அனைவரும் நன்கு அறிந்த ஒரு விவகாரமாகவே இருந்து வருகின்றது. கடந்த காலங்களில் யோசித்த ராஜபக்ஷவின் காதலியாக இருந்தவர் யசாரா அபேநாயக்க.  யாரிந்த யசார அபேநாயக்க என்று தேடிப் பார்த்தால் இவருடைய தந்தை ஆனந்த அபேநாயக்க. அவர் திருமணம் முடித்திருப்பது பிரபல நடிகர் காமிணி பொன்சேக்காவின்  மகளை. 

இந்த அபேநாயக்கவுடன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எப்படி உறவு ஏற்படுகின்றது என்றால் காமினி பொன்சேக்கவின்  'நோமியன மினிஸ்சு' (மரணிக்காத மனிதர்கள்) என்ற திரைப் படத்தில் நடிக்கப் போய் அதனால் ஏற்பட்ட நட்பே இவர்கள் உறவுக்குக் காரணம். தந்தைமார்களுக்கிடையிலான உறவு பிள்ளைகளிடத்திலும் நேசத்தையும் காதலையும் கொண்டு வந்து விடுகின்றது.

ராஜபக்ஷக்களுடன் இந்த உறவு காரணமாக யசாராவுக்கு  தேசிய ரூபவாஹினிக் கூட்டுத்தாபணத்தில் ஐ அலைவரிசையில் நிறைவேற்று அதிகாரமுள்ள பதவியொன்று  வழங்கப்படுகின்றது. பின்னர் ராஜபக்ஷவின் புதல்வர் யோசிதவின் 'சீஎஸ்என்' அலைவரிசையில் பிரதான நிறைவேற்று அதிகாரியாக இவர் பதவிக்கு அமர்த்தப்படுகின்றர்.

அரங்கிற்கு வரும் தாஜூதீன் 

கல்கிசை சென்.தோமஸ் கல்லூரியில் தாஜூதீன் ஒரு ரகர் ஹீரோவாக இருந்தார்.  ராஜபக்ஷவின் புதல்வர்கள் அன்று அணியில் சராசரி ஆட்டக்காரர்களாகவே இருந்து வந்தனர். தோமஸ் கல்லூரியின் ரகர் பயிற்றுவிப்பாளர் அசங்க செனவிரத்தன  ராஜபக்ஷக்களுக்கு காட்டிய விஷேட சலுகைகளினால்  ராஜபக்ஷக்களுக்கு தோமஸ் ரகர் அணியில் இடம் கிடைக்கின்றது. இதற்கு நன்றிக் கடனாக இந்த அசங்க செனவிரத்னாவுக்கு எவ்வவு சலுகைகள் வழங்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்த செய்தி.

இப்படி அணிக்குள் இடம் பிடித்துக் கொண்ட ராஜபக்ஷக்களை தாஜூதீன் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை. இந்தப் பின்னணியில் யசாராவுடன் ஒரு நெருக்கமான உறவு தாஜூதீனுக்கு ஏற்படுகின்றது. இந்த உறவு தாஜூதீனுக்கும் ராஜபக்ஷக்களுக்குமிடையே  மேலும் விரிசலை வலுப்படுத்துகின்றது. 

இந்த நிலையில் 'பிளவர்ரிம்' என்ற சீன உணவகத்தில் வைத்து ஒரு முறை தாஜூதீனுக்கும் யோசித்தவுக்குமிடையே  பலப் பரீட்சை. அங்கு தாஜூதீன் தனது முஷ்டியைக் காட்டப் போயிருக்கின்றார். இந்தப் பின்னணியில் விபத்துக் காரணமாக 23 வயது நிரம்பிய தாஜூதீன் மரணம் நிகழ்கின்றது. இறக்கின்றபோது தாஜூதீன் திருமணமாகி  ஒரு குழந்தைக்கு தந்தை. 

ராஜபக்ஷ காலத்து பொலிஸ்

நாம் முன்பு சொன்னபடி அதிவேமாக வண்டியை ஓட்டிச் சென்றதால் கட்டுப்பாட்டை மீறி வண்டி வீதியை விட்டுப் பாய்ந்ததால் விபத்தில் ரகர் வீரர் தாஜூதீன் இறந்திருக்கின்றார் என்று பொலிஸ் ஊடகப் பேச்hளர் அஜித் ரோஹன இந்த மரணம் தொடர்பாக ஊடகங்களுக்கு கதை கூறினார் அன்று.

இரு ஓடு பாதைகளைக் கொண்ட இந்த வீதியில் ஒரு மரத்திற்கும் சிறு பெட்டிக் கடைக்குமிடையே நுழைகின்ற வண்டி  சலிக்கா மைதான மதிலில் மோதுவதாக இருந்தால் தாஜூதீன் மரணம் இந்தவாறு நிகழ்வதற்கு வாய்ப்பிருக்காது. 

அதிக வேகமாக ஓட்டப்பட்ட ஒரு வாகனம் மதிலில் மோதுகின்ற போது டயர் பதிகின்ற பாகங்கள் இழுபட்டுச் சென்றிருக்க வேண்டும், என்பது இவ்வாறான விபத்துக்களின் போது அவதானிக்கப்படுகின்ற அம்சமாக இருக்கும்;. இது பற்றிய குறிப்புக்கள் எதுவும் பொலிஸ் பதிவுகளில் இல்லாமல் இருப்பது இங்கு அவதானிக்கத் தக்கதாகவுள்ளது.

இன்று இரசாயணப் பகுப்பாய்வுகளுக்கு சவால் விடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த விபத்துத் தொடர்பாக, அன்று பரிசோதனை நடத்திய பொலிஸ் அதிகாரிகள் இதற்கு பொறுப்புக் கூற வேண்டி இருக்கின்றது. 

அன்று விபத்துடன் வண்டி தீப்பற்றிக் கொண்டது என்று பொலிஸ் குறிப்புகள் தகவல் சொல்லி இருக்கின்றது. வண்டி விபத்துடன் தீப்பற்றி எரிந்திருந்தால் முதலில் எந்த இடதிலிருந்து இந்தத் தீ துவங்கி இருக்கின்றது என்ற தகவல்களை பொலிஸ் தனது பதிவுகளில் அன்று சொல்லத் தவறி இருக்கின்றது. அது ஏன்? 

குறைந்த பட்சம் அந்த நேரத்தில் தாஜூதீன் மது போதையில் இருந்தாரா இல்லையா என்ற முக்கிய குறிப்புக்களைக்கூட பதிய பொலிஸ் தவறி இருக்கின்றது. ஒரு விபத்து நடந்தால் பொலிஸ் இந்த விடயங்களைக் கட்டாயம் பதிவது வழக்கமாக இருந்து வருகின்றது. ஆனால் தாஜூதீன் விவகாரத்தில் இது நடக்க வில்லை.

மேலும் இப்படியான ஒரு மரணம் சம்பவிக்கும் அளவிற்கு ஒரு கோர விபத்து நடக்கின்ற போது  அந்தப் பிரதேசத்தில் சுற்றாடலில் ஓசை பயங்கரமாக எழும்பி இருக்க வேண்டும். ஆனால் அவ்வாறான பதிவுகளும் கூட பொலிஸ் குறிப்புகளில் சொல்லப்பட வில்லை. 

வலுவான சந்தேகம்

எல்லாம் நல்லதொரு கனவு போல் நடத்தி முடிக்கப்பட்ட தாஜூதீன் படுகொலையில் கொலையாளிகளுக்குத் தவறிப்போன ஒரு இடம் இருந்தது.  தாஜூதீன் பாவித்த (பர்ஸ்) பணப்பை அந்த மரணம் நிகழ்ந்த இடத்திலிருந்து 1.5 கிலோ மீற்றர்கள் தூரத்தில் கண்டெடுக்கப்படுகின்றது. அதுவும் சில நாட்களுக்குப் பின்னர் என்பது இங்கு அவதானிக்கத்தக்கது. தாஜூதீன் வண்டியில் அமர்ந்திருந்த சாரதி ஆசனம் தீயில் எரிந்து சாம்பலாக இருக்கின்ற போது அந்து பேர்ஸ் மட்டும் மற்றுமொரு இடத்திற்குப் பாதுகாப்பாகப் போனது எப்படி ?

தாஜூதீனுடைய மரணத்துடன் இந்த சந்தேகங்களும் கேள்விகளும் குழி தோன்டிப் புதைக்கப்பட்டு விட்டது. தாஜூதீன் இறந்த பின்னர் இது பற்றிய சந்தேகங்களை கேள்விகளை எழுப்புவது அன்றைய அரசியல் பின்னணியில் ஆபத்தை விலைக்கு வாங்கிக் கொள்கின்ற ஒரு விவகாரமாக இருந்ததால் இதுபற்றி எவரும் அன்று கேள்விகளைத் தொடுக்க முன்வரவில்லை. 

அவருடைய பெற்றோர்களும் கூட இந்த நிலைப்பாட்டையே எடுத்திருந்தார்கள் இன்றும் கூட இது விடயத்தில் அவர்கள் மௌனமான ஒரு போக்கையே பின்பற்றி வருகின்றார்கள்!

மைத்திரி நல்லாட்சி தோன்றிய பின்னணியில் தாஜூதீன் மாரணம் தொடர்பாக  இருந்து வந்த சந்தேகங்கள் கிளறி எடுக்கப்பட்டிருக்கின்றது. இந்த விவகாரத்தில் பாதிக்கபட்டிருக்கின்றவர்கள் சார்பில் ஆஜராகின்ற சட்டத்தரணி மொஹம்மட் மிஸ்பாக்கிடம் தற்போது இது பற்றி விசாரித்துப் பார்த்தால் தற்போது விசாரணைகள் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லப்படுவதனால் இது பற்றி பேசாமல் இருப்பது தான் இந்த விடயத்தில் உண்மையை வெளியில் கொண்டுவர நாம் செய்கின்ற மிகப் பெரிய காரியமாக இருக்கும், இதனால் இப்போது இதுபற்றி பேசாமல் இருப்போம் என்பது அவரது நிலைப்பாடாக இருக்கின்றது. என்றாலும் ஒரு விடயத்தை அவர் தெளிவாகக் குறிப்பிடுகின்றார். இது ஒரு கொலை என்பதில் சந்தேகங்கள் இல்லை. 

தற்போதய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூட இது விபத்தால் நடந்த மரணம் அல்ல என்று புதிதாக வாக்குமூலம் கொடுத்திருப்பதும்  இங்கு குறிப்பிடத்தக்கது.  அப்டியானால் இப்பேது பார்க்க வேண்டிய காரியம் கொலையாளிகளைக் கைது செய்வதுதான்.! என்றாலும் இன்று பொலிஸ் வலையில் சிக்கி இருப்பது சுறாக்களுக்குப் பதில் நெத்திலிகளே என்ற நிலை இதில் இருக்கின்றது. 

இந்தக் கொலை தொடர்பில் இதுவரை 21 பேரில் வாக்குமூலங்களைப் பொலிஸ் பதிவு செய்திருக்கின்றது. இதில் பல உண்மைகள் அம்பலமாகி இருப்பதும் பலர் அறிந்த இரகசியம்தான்.  அனைத்தும் பகிரங்கமாக இன்னும் சிறு தொலைவே செல்ல வேண்டி இருக்கின்றது. கொலையைப் பண்ணியவர்கள், இந்தக் கொலைக்கு கட்டளை பிறப்பித்தவர்கள் இப்போது கைது செய்யப்பட வேண்டி இருக்கின்றது.

அன்று இது ஒரு விபத்து மரணம் என்று சான்று கொடுத்தவர்கள் தாஜூதீனின் கை, கால்கள் முறிக்கப்பட்டிருப்தைக் கண்டு கொள்ளாமல் பொலிசார் இவற்றை மூடி மறைத்தது யாரின் தேவைக்காக?  எனவே இவற்றை மூடி மறைத்தவர்களும் இன்று குற்றவாளிகளின் கூண்டில் நிற்க வேண்டி இருக்கின்றது. மேலும் அன்று தாஜூதீனுடைய தாடையில் இருந்து நான்கு பற்கள் பிடுங்கப்பட்டிருக்கின்றது. இவற்றை பிடுங்கி எடுத்த டாக்டர்கள் யார் என்றும் தேட வேண்டி இருக்கின்றது. 

நல்லாட்சியை இந்த அரசாங்கம் இன்று உறுதி செய்வதானால் தாஜூதீன் விவகாரத்திலும்; சம்பந்தப்பட்டவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த வேண்டி இருக்கின்றது.  இதனை நாடும் உலகும் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றது.

1 comment:

  1. ஒரு துப்பறியும் திரைப்படத்தை பார்த்ததுபோலுள்ளது. உண்மைகள் வெளிவராமல் போகாது. ஆனால் அவற்றை வைத்து நீதி நடவடிக்கைகள் நடைபெறாது போனால் அவற்றுக்கு என்ன மதிப்புள்ளது..?

    ReplyDelete

Powered by Blogger.