Header Ads



அமைச்சரவையில் ஹக்கீம் ஆவேசம், உங்கள் மீது சீறிப்பாய மாட்டோம் என்றுகூறிய மைத்திரி

புதிய தேர்தல் சட்டத்திருத்த வரைவைத் தயாரித்தவர்கள் தொகுதிவாரியாக எத்தனை பேர், விகிதாசார முறையில் எத்தனை பேர் எவ்வாறு உள்வாங்கப்படுவார்கள் என்பதை எடுத்துக் காட்ட முடியுமானால் அதற்கு இணங்கலாம். எனினும் தன்னைப் பொறுத்தவரை அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கூறியுள்ளார்.

நேற்றிரவு நடைபெற்ற விசேட அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தேர்தல் முறைமை தொடர்பான 20ஆவது அரசியலமைப்பு திருத்தம் பற்றி கலந்துரையாடப்பட்ட போது காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் நீண்டநேரமாக தமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 255ஆக உயர்த்தப்படுவதாக வைத்துக் கொண்டாலும், முஸ்லிம்களின் விகிதாசாரப் படி குறைந்த பட்சம் 25 உறுப்பினர்களாவது இருக்க வேண்டியது அவசியமாகும் என தெரிவித்துள்ள அமைச்சர் ஹக்கீம், புதிய தேர்தல் சட்டத்திருத்த வரைவைத் தயாரித்தவர்கள் தொகுதிவாரியாக எத்தனை பேர், விகிதாசார முறையில் எத்தனை பேர் எவ்வாறு உள்வாங்கப்படுவார்கள் என்பதை எடுத்துக் காட்ட முடியுமானால் அதற்கு இணங்கலாம். எனினும் தன்னைப் பொறுத்தவரை அதற்கான வாய்ப்புகள் இல்லை என்று கூறியுள்ளார்.

அதுபற்றி அங்கிருந்த தேர்தல் ஆணையாளரிடம் வினவிய போது, அதற்கான உத்தரவாதம் எதையும் வழங்க முடியாதென்றும், அதனை தொகுதி மீள்நிர்ணய ஆணைக்குழு தான் தீர்மானிக்க வேண்டும் எனக் கூறியிருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 255ஆக அதிகரிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினர் எதிர்த்தனர். அவர்களின் கோரிக்கைக்கமைய 225ஆக முடிவு செய்யப்பட்டது. எந்த முறைமையாக இருந்தாலும், பொதுவாக சிறுபான்மையினரினதும், குறிப்பாக முஸ்லிம்களினதும் தொகுதிகளை வரையறுப்பதில் சிக்கல் ஏற்படத்தான் போகின்றது. அவ்வாறான சிக்கலுக்கான தீர்வு என்ன என்பது தெளிவு படுத்தப்பட வேண்டும். தொகுதி நிர்ணய ஆணைக்குழுவிடம் உறுதியான பரிந்துரையை நாம் முன்வைப்போம் என்று அமைச்சர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கான தொகுதிகளை எங்கிருந்தாலும் எத்தனை வாக்காளர் தொகையென்றாலும் பாரவாயில்லை உரிய முறையில் பிரித்துக் கொடுத்தாக வேண்டும் என்று நாங்கள் கூறுவோம் எனத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, கடந்த ஆட்சியின் போது உங்களைப் போன்ற முஸ்லிம், தமிழ்த் தலைவர்களை பேசவிடாமல் உங்கள் மீது சீறிப்பாய்ந்து எறிந்து விழுந்த காட்சிகளை நாங்கள் பார்த்திருக்கின்றோம். அவ்வாறு நாங்கள் நடந்து கொள்ள மாட்டோம் என்று அமைச்சர் ஹக்கீமை பார்த்துக் கூறியுள்ளார்.

தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் ஆகியோருக்குரிய ஆசனங்கள் உறுதி செய்யப்படுவதற்கு சரியான உத்தரவாதம் வழங்கப்படும் என்பதை நம்ப வேண்டுமென ஜனாதிபதி கூறியுள்ளார்.

இது பற்றி கருத்துத் தெரிவித்த அமைச்சர் ஹக்கீம் பிரஸ்தாப திருத்தத்தைப் பொறுத்தவரை அது மிகக் கஷ்டமான காரியமென்றார்.

தாங்கள் கோரிய பிரகாரம் தொகுதிக்கு வாக்களிக்கும் போது கட்சிக்கு வாக்களிக்கக் கூடிய விதத்தில் வாக்களார் ஒருவருக்கு இரண்டு வாக்குச் சீட்டுகளை வழங்கக்கூடியதான ஏற்பாடு இருந்தால் அது இந்தப் பிரச்சினைக்கு பெரிதும் தீர்வாக அமையும் என்ற நிலைப்பாட்டை அமைச்சர் ஹக்கீம் கொண்டிருந்தார்.

அதற்கு ஆதரவாக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அஜீத் பேரேரா போன்றோர் கருத்துத் தெரிவித்தார்கள். தேர்தல் ஆணையாளரும் கூட அது நியாயமானது, சிக்கலுக்குரியதாக இருக்கமாட்டாது. ஆனால் அதனை முதன்முதலாக தேர்தலின் போது கையாளாமல், அதனை அமுல்படுத்தி பார்த்து விட்டு சிறுபான்மையினருக்கு போதிய ஆசனங்கள் கிடைக்காத நிலைமை ஏற்பட்டால் அடுத்த முறை அவ்வாறு செய்யலாம் எனக் கூறியிருக்கிறார்.

எனினும் அமைச்சர் ஹக்கீம் போன்றோர் அதனை ஏற்றுக் கொள்வில்லை.

பெரிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருந்தனர். எஸ்.பீ.திசாநாயக்க, சரத் அமுனுகம, ராஜித சேனாரத்ன ஆகியோர் வாக்களார் ஒருவருக்கு இரண்டு வாக்குச் சீட்டுகளை வழங்குவதை ஆட்சேபித்துள்ளனர்.

அது மீண்டும் விருப்பு வாக்கு முறையாக மாறிவிடும் என எஸ்.பீ.திசாநாயக்க கூறியுள்ளார். அப்பொழுது அது விருப்பு வாக்கல்ல, கட்சிக்கு அளிக்கும் வாக்குத்தான் என்றும் நியாயமானது என்றும் தேர்தல்கள் ஆணையாளரும் தெரிவித்துள்ளார்.

இந்த இரட்டை வாக்கு விவகாரம் இனரீதியாக இன்னும் வேறுபாட்டை அதிகரிக்கச் செய்யும் என்ற பீதியை கிளப்பக்கூடிய விதத்தில் மேற்குறிப்பிட்ட அமைச்சர்கள் சிலரின் நிலைப்பாடு இருந்திருக்கிறது. இவ்வாறான நிலைமையில் எல்லை நிர்ணய ஆணைக்குழு எதைச் செய்தாலும் சிறுபான்மை மக்களுக்கு சிக்கல் தோன்றப் போகின்றது என்பதுதான் அமைச்சர் ஹக்கீம் போன்றோரின் அபிப்பிராயமாக இருந்தது.

இந்த விடயத்தில் எல்லை நிர்ணய ஆணைக்குழு எதனைச் செய்த போதிலும் அதனால் சிறுபான்மையினருக்கு நன்மை கிடைக்கப் போவதில்லையென என அமைச்சர் ஹக்கீம் நீண்ட நேரமாக அமைச்சர் எஸ்.பீ.திசாநாயக்கவுடன் வாதாடியுள்ளார்.

இப்பொழுது இதனை அங்கீகரிப்போம் அறிமுகப்படுத்துவோம். பின்னர் முஸ்லிம்களுக்கும், தமிழர்களுக்கும், மலையகத் தமிழர்களுக்கும் ஆசனங்களை எந்த விதத்திலாவது உரிய பங்கு கிடைக்கக் கூடியதாக எல்லை நிர்ணய ஆணைக்குழுவினூடாக செய்யலாம் என கூறப்பட்டுள்ளது.

அப்பொழுது குறுக்கிட்ட அமைச்சர் ஹக்கீம் நீங்கள் எவ்வாறுதான் தொகுதிகளை உருவாக்கிய போதிலும், விகிதாசார தேர்தல் முறையிலும் அதனை அடைவதாக இருந்தால் சிறுபான்மையினரைப் பொறுத்தவரை இரட்டை வாக்கு முறை இருக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழு தொகுதிகளை பிரிப்பதற்கு ஒன்றரை வருடங்களுக்கு மேல் செல்லும் என்றும் இம்முறை விகிதாசார அடிப்படையில் தேர்தல் நடந்து முடிந்து பின்னர் வரும் தேர்தலுக்குத் தான் புதிய திருத்தம் நிறைவேற்றப்பட்டால் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது திருத்தத்தை முழுமைப்படுத்துவதற்கு இன்னும் இரண்டு தினங்கள் செல்லுமெனக் கூறப்பட்ட போது, சட்டவரைவைக் கொண்டு வாருங்கள். நாங்கள் அதற்கான நிலைப்பாட்டை முன்வைப்போம் எனத் தெரிவித்துள்ள அமைச்சர் ஹக்கீம், தொகுதிகளின் எண்ணிக்கை பற்றிய தீர்மானத்தை ஏற்றுக் கொள்ளவதாகவும் ஆனால், இந்த சட்டவரைவு எந்தக் கொள்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளதென்பதை தாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் கூறியிருக்கிறார். தாங்கள் இன்னமும் இரட்டை வாக்குச் சீட்டு விடயத்தை வலியுறுத்துவதாகவே அவர் கூறியிருக்கிறார்.

தொகுதிகளை வகுக்கும் விடயத்தில் சிறுபான்மையினருக்கு அநீதி இழைக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார். தொகுதிவாரியான பிரதிநிதித்துவம் சாத்தியமாகாத பட்சத்தில் இரட்டை வாக்குச் சீட்டு வழங்கப்பட வேண்டுமென அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் ஹக்கீம் இன்னும் சந்தர்ப்பம் இருப்பதாகவும், இந்த மசோதா பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படும் போதும் தாங்கள் வாதாடுவோம் என்றும், 20ஆவது திருத்தத்தை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத போதிலும். ஆசனங்களின் எண்ணிக்கை 225ஆகக் குறைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.

அமைச்சர் பழனி திகாம்பரமும் அமைச்சரவையில் மலையக தமிழர்கள் சார்பில் ஆக்கபூர்வமான கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் எல்லா சிறுபான்மையினக் கட்சிகளும் சிறிய கட்சிகளும் மீண்டுமொரு முறை வியாழக்கிழமை கூடி கலந்தாலோசிக்க இருப்பதாகத் தெரியவருகிறது.

2 comments:

  1. சிறு கற்பனை:
    - கொடுக்கல் வாங்கல்கள் நடக்கவில்லை போல் தெரிகிறது அதுதான் ஆவேசமோ.
    - பணம், பதவி, வாகனம் எல்லாம் கொடுத்தார்கள் சீறிப் பாய்ந்தார்கள். உன்னால் ஒன்றுமே தர வக்கில்ல... உம்மால் எப்படி சீறிப் பாயமுடியும்..?
    - 18 ஐ போல் கட்சியை காப்பாற்ற நிலைமை ஏற்படாமல் விட்டால் சரி.

    நாம் நினைக்கிறோம் தலவைரை சுற்றி இப்போது ஒரு நல்ல வட்டம் உள்ளது என்று நினைக்கிறோம். இதே தெளிவும் உறுதியும் தொடர்ந்து இருக்கும் என்று நம்புகிறோம்.

    ReplyDelete
  2. Many leaders did a good job of bringing the right change at the right time by electing
    My3. Well done ! Now they are exchanging , debating or arguing their views to bring
    about a solution to problems acceptable to all parties. Fair enough ! That's exactly
    what we wanted . We now have a president ready to listen regardless of whether
    you are majority or minority , Sinhala or non-Sinhala !

    ReplyDelete

Powered by Blogger.