Header Ads



"மியன்மாரிய அரக்கர்கள் முஸ்லிம்கள் மீதான, கொடூர தாக்குதல்களை நிறுத்தாவிட்டால்" ரிஷாட் பதியுதீன்

மியன்மாரில் நடைபெறும் அரக்கர்களின் கொடூர தாக்கதல்களினால் அப்பாவி முஸ்லிம்கள் கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு ஐ.நா சபை தூங்குகிறது என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

அப்பாவி முஸ்லிம்கள் மீது மியன்மாரில் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள காடைத்தனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்றைய தினம் ஜும்ஆ தொழுகையின் பின்னர் கொழும்பில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ரிஷாட், ஊடகவியலாளர் மத்தியில் உரையாற்றும்போதே மேற்படி குற்றச்சாட்டினை தெரிவித்தார்.

“மியன்மாரிலுள்ள அப்பாவி முஸ்லிம்கள் மீது அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களும் அரக்கர்களும் கொடூரமான முறையில் தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களை கொன்று குவித்து வருகிறது. இதனைப் பார்த்துக்கொண்டு ஐநா சபை தூங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தக் கொலையினை கண்டித்து துருக்கி அரசாங்கம் மட்டுமே குரல்கொடுத்து வருகிறது. அதற்காக இலங்கை மக்கள் சார்பில் அந்நாட்டு ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனைய நாடுகள் அனைத்தும் வாய்மூடி மௌனிகளாக இருக்கின்றன.

ஆகையினால், இந்தக் கொடூரத்துக்கு எதிராக உலக முஸ்லிம் நாடுகள் அனைத்தும் ஒன்று திரள வேண்டும் என இலங்கை வாழ் முஸ்லிம்கள் சார்பில் வேண்டுகோள் விடுக்கின்றோம். அதேபோல் இலங்கையிருள்ள மியன்மார் தூதரகத்துக்கும் எமது எதிர்ப்பினை தெரிவித்து மகஜர் கையளித்திருக்கிறோம்.

எனவே, இந்த அடாவடித்தனம், படுகொலைகள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் இலங்கையிலுள்ள முஸ்லிம்கள் மட்டுமல்ல, பௌத்த, ஹிந்து, கிறிஸ்தவ மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து நாடளாவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுப்போம் என்பதை எச்சரிக்கையாக அவர்களுக்கு சொல்லிவைக்க விரும்புகின்றோம்” என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.