Header Ads



மியன்மார் முஸ்லிம்கள் படுகொலை, இலங்கை அரசாங்கம் உடனடியாக தலையிட வேண்டும் - இராதாகிருஸ்ணன்

இன ரீதியாக முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளர்.

மியன்மார் நாட்டில் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதை உடனடியாக நிறுத்துவதற்கு மியன்மார் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதற்கான அழுத்தங்களை இலங்கை அரசாங்கம் மியன்மார் அரசாங்கத்திற்கு கொடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

மியன்மார் நாட்டில் முஸ்லிம்கள் காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்யப்படுவதை மலையக மக்கள் முன்னணி,சிறுபான்மை மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சி என்ற வகையில் வன்மையாக கண்டிக்கின்றது.

எந்த ஒரு இனமும் ஒரு நாட்டில் வாழுகின்ற இன்னொரு இனத்தால் அழிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது. அந்த வழியையும் வேதனையையும் இலங்கையின் அனைத்து மக்களும் நன்கு அறிவார்கள்.

அதிலும் குறிப்பாக இலங்கையின் சிறுபான்மை மக்கள் அதன் வேதனையை கடந்த 30 வருடங்களுக்கு மேலாக உணர்ந்தவர்கள்.அந்த வகையில் அதன் வலியும் வேதனையும் எமக்கு நன்கு தெரியும்.

இந்த விடயம் தொடர்பாக உலகம் முழுவதும் இருக்கின்ற அனைத்து மக்களும் மனிதாபிமான ரீதியாக இணைந்து குரல் கொடுக்க முன்வரவேண்டும்.

இந்த விடயத்தில் இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம்கள் தார்மீக ரீதியாக எடுக்கும் அத்தனை செயற்பாடுகளுக்கும் எனது முழுமையான ஒத்துழைப்பை வழங்க நான் தயாராக இருக்கின்றேன்.

இதற்கான அமைதிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்து உலக நாடுகளுக்கு இந்த செய்தியை கொண்டு செல்ல அனைத்து வழிகளிலும் முஸ்லிம்களுடன் இணைந்து செயற்பட தயாராக இருக்கின்றேன்.

எனவே இந்த விடயம் தொடர்பாக எமது இலங்கை அரசாங்கம் உடனடியாக மியன்மார் நாட்டுடன் தொடர்பு கொண்டு முஸ்லிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

இன்று இலங்கையில் இருக்கின்ற முஸ்லிம் அமைச்சர்கள் எடுக்கின்ற அத்தனை நடவடிக்கைகளுக்கும் எனது பூரண ஆதரவை வழங்க நான் தயாராக உள்ளேன் எனவும் அவர் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.