Header Ads



மஹிந்த என்ற பெயர் இனி உச்சரிக்கப்படாது, தியாகத்தை செய்தவர் மைத்திரியே - ரணில்

இலங்கையின் எதிர்கால அரசியலில் மஹிந்த ராஜபக்ஷ என்ற பெயர் இனி ஒருபோதும் உச்சரிக்கப்படாது. இந்த நாட்டில் ஜனநாயகம் என்ற வார்த்தை மட்டுமே உச்சரிக்கப்படும். அதையும் மீறி யாரேனும் ஜனநாயகத்தை சீரழிக்க முயற்சித்தால் அதற்கு ஒருபோதும் நாம் இடமளிக்க மாட்டோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஜனநாயகத்தை வென்றெடுக்கும் போராட்டத்தை மாதுலுவாவே சோபித தேரர் ஆரம்பித்திருக்காவிடின் இன்று நாட்டில் மாற்றம் ஒன்று ஏற்பட்டிருக்காது. நாட்டில் ஜனநாயகத்தை தொடர்ந்தும் தக்கவைக்க வேண்டுமாயின் மாதுலுவாவே சோபித தேரரின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மாதுலுவாவே சோபித தேரரின் ஜனன தினத்தை முன்னிட்டு சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில்,

மாதுலுவாவே சோபித தேரரின் ஜனநாயகப் போராட்டம் இன்னொரு யுத்தத்துக்கு சமமானதாகும். நாட்டின் விடுதலையை வென்றெடுக்க அன்று ஆயுதம் மூலம் போராடியதைப் போல இன்று நாட்டின் ஜனநாயகத்தை கட்டியெழுப்ப வார்தைகள் மூலமாகவும் அஹிம்சாவளியின் மூலமாகவும் போராடி எமக்கு ஜனநாயகத்தை வென்று கொடுத்துள்ளார்.

சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தினூடாக கடந்த சில ஆண்டுகளாக சோபித தேரர் மக்களுக்காக போராடியிருந்தார். இந்த போராட்டமே இன்று நாட்டில் மூவின மக்களையும் ஒற்றுபடுத்தியுள்ளது.

நாட்டில் விவாதம் செய்வதற்கும், கட்சிகளை விமர்சிக்கவும், மூவின மக்களும் தமது உரிமைகளை வென்றெடுக்கவும் இந்த போராட்டம் சாதகமாக அமைந்துவிட்டது. நாம் அனைவரும் கட்சி சார்பில் பிரிந்திருந்தாலும் ஜனநாயகத்தை வென்றெடுக்கும் போராட்டத்தில் ஒன்றிணைய மதுளுவாவே சோபித தேரரே காரணமாகும்.

அதேபோல் எமது தேசிய அரசாங்கத்துக்கான போராட்டத்தில் மைத்திரிபால சிறிசேன எனும் நல்ல மனிதர் எமக்கு கிடைத்துள்ளார். இதுவரை எந்தத் தலைவரும் செய்ய விரும்பாத தியாகத்தை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார். அவரின் மூலமாகவே எமக்கு இன்று நல்லாட்சி மலர்ந்துள்ளது.

அதேபோல் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க உள்ளிட்ட முக்கியமான சிலரின் உதவியும் நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகமும் மிக முக்கியமானதாகும். எனினும் நாட்டில் ஜனநாயகத்தை உருவாக்க மாதுலுவாவே சோபித தேரர் போராட்டத்தை ஆரம்பித்திருக்காதிருந்தால் இன்று நாம் இந்த விடுதலைக் காற்றை சுவாசித்திருக்க முடியாது.

இன்று நாம் நல்லதொரு அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றோம். இந்தப் பயணம் நாட்டில் நிரந்தரமாக அமைய வேண்டும். ஆனால் அதை சீரழிக்கும் வகையில் ஒருசில சக்திகள் இன்றும் முயற்சித்து வருகின்றது. மஹிந்த ராஜபக்சவின் சர்வாதிகார யுகம் கடந்த ஜனாதிபதி தேர்தலுடன் முடிவுக்கு வந்துவிட்டது.

இலங்கையின் எதிர்கால அரசியலில் மஹிந்த என்ற பெயர் இனிமேல் உச்சரிக்கப்படாது. இந்த நாட்டில் ஜனாயகம் என்ற வார்த்தை மட்டுமே இனிமேல் நிலைத்திருக்கும். எவரேனும் அதை சீர்குலைக்க முயற்சித்தால் அதற்கு நாம் தற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டோம்.

நாட்டில் ஜனநாயகத்தை முழுமையாக நிலைநாட்டும் வகையில் இந்த அரசாங்கதின் செயற்பாடுகள் அமையும். மூவின மக்களையும் ஒன்றிணைத்து அமைதியான ஆட்சியை கொண்டு செல்ல மாதுலுவாவே சோபித தேரர் போன்ற மனிதர்களின் துணை தொடர்ந்தும் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்..

No comments

Powered by Blogger.