Header Ads



"பௌத்த பிக்குவான மஹிந்த, ஞானசாரரை மிஞ்சிவிட்டார்"

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த காவி அணியாத பிக்குவாகி விட்டமையினால் ஞானசார தேரரையும் மிஞ்சிவிட்டார் என ஐக்கிய சோசலிஷ கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.

வித்தியாவின் கொலையானது சிறுபான்மையினரை சில அரசியல்வாதிகள் இன்னும் அடிமைகளாகவே நடத்த முயற்சித்து வருகின்றனர் என்பதையே எடுத்துக்காட்டுகிறது எனவும் தெரிவித்தார்.

வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்ற வித்தியாவுக்கான மலரஞ்சலி செலுத்தும் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

புங்குடுதீவு மாணவி வித்தியா கொடூரமாக கொலை செய்யப்பட்டமையினால் நாட்டின் அனைத்து இன மக்களும் மனம் நொந்து போயுள்ளனர். ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த இதனை அரசியலாக்கிவிட்டது மட்டுமல்லாமல் இனவாதத்தையும் தோற்றுவிக்க முயற்சித்து வருகின்றார்.

வித்தியாவுக்கு நேர்ந்த கொடூரத்தினை சகித்துக்கொள்ள முடியாத காரணத்தினால் யாழ். மக்கள் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாலேயே யாழில் கலவரம் உண்டானது.

இதனை முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய காவி அணியாத பிக்குவுமான மஹிந்த ராஜபக்ச தனது அரசியல் தேவைக்காக மீண்டும் ஆயுத குழுக்கள் உருவாகப் போகிறன என்று தெரிவித்துள்ளார்.

இப்போது அவர் விஹாரைகளையே தனது வசிப்பிடமாக்கிக் கொண்டுள்ளார். அதனால் வெள்ளைச் சாரம் அணிந்த துறவியாகவும் இனவாதத்தினை கட்டவிழ்த்து விடுவதனாலும் மஹிந்த ஞானசார தேரரையும் மிஞ்சி விட்டார்.

இது போன்று தான் 2009 ம் ஆண்டு யாழ்.மக்களின் நினைவேந்தலுக்கு மஹிந்த தடை விதித்தார். அது முற்றிலும் தவறான செயற்பாடாகும்.

வீரர்கள் உருவாவது மக்கள் மனங்களில் மட்டுமேயாகும். மாறாக நாட்டின் ஜனாதிபதி பரிந்துரை செய்கின்றவரை வீரனாக ஏற்றுக்கொள்ள முடியாது.

அதேவேளை வடக்கின் இனவாதம் பற்றி பேசுகின்ற முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, தெற்கில் அவரின் ஆதரவு கூட்டணிகள் கட்டவிழ்த்து விடும் இனவாதம் பற்றி ஒரு போதும் பேசுவதில்லை.

அத்துடன் வித்தியாவின் கொலை சம்பவத்தை அரசியலாக்கும் மஹிந்த போன்ற இனவாத அரசியல்வாதிகளின் நோக்கம் சிறுபான்மை இனங்களை தொடர்ந்தும் அடிமைகளாக வைத்திருப்பது என்பதையே காண்பிக்கிறது.

எவ்வாறாயினும் அரசாங்கம் வடக்கு, தெற்கின் நல்லிணக்கத்துடன் முன்செல்லும் முயற்சியை முன்னெடுக்க வேண்டும் அத்துடன் மஹிந்த போன்ற இனவாத தரப்புக்களுக்கு இனி ஒருபோதும் தேர்தலில் போட்டியிட ஜனாதிபதி இடமளிக்கக்கூடாது என்றார்.

No comments

Powered by Blogger.