Header Ads



வசீம் தாஜூடீன் விபத்தில் உயிரிழக்கவில்லை - அமைச்சர் ஜோன் அமரதுங்க

ரகர் வீரர் வசீம் தாஜூடீன் விபத்தில் உயிரிழக்கவில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார். தாஜூடின் யாரின் தேவைக்காக கொல்லப்பட்டார் என்பது குறித்து விசாரணை நடத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாகன விபத்தில் தாஜூடீன் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட போதிலும் உண்மையில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் இன்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

வசீம் தாஜூடீன் மரணம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றம் குறித்து ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

சம்பவம் குறித்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைகள் பெரும்பாலும் பூர்த்தியாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். குறித்த அறிக்கையை வெளியிட்டால் இறுதி விசாரணைகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தினால் விபரங்கள் வெளியிடப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

2012ம் ஆண்டு மே மாதம் 17ம் திகதி நாரஹேன்பிட்டியில் மோட்டார் காருக்கு உள்ளேயே உடல் கருகியி நிலையில் வசீம் தாஜூடீனின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டது.

சடலம் மீட்கப்பட்டதன் பின்னர் தாஜுடீனின் பணப் பை ஒன்று மீட்கப்பட்டு கிருலப்பணை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக் கொலையுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித ராஜபக்ஸ மீதும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.