Header Ads



''வித்தியா விவகார விசேட நீதிமன்றம்'' ஞானசாரரின் கூற்றுக்கு, ராஜித்தவின் பதில்

வடக்கில்  மாணவி வித்தியா சீரழிக்கப்பட்டு  கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சாதாரண  சம்பவமாக  கணிக்க முடியாது.  மாணவியை சீரழித்து அதனை ஒளிப்பதிவு செய்து  சர்வதேசத்துக்கு அனுப்பும் ஒரு வியாபார முயற்சியே நடந்தேறியுள்ளது. எனவே  இதற்கு விசேட நீதிமன்றம் அமைக்கவேண்டியது அவசியமாகும் என்று  அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான ராஜித்த சேனாரட்ன  தெரிவித்தார். 

முதலில் இந்தியாவில் இவ்வாறு  திட்டமிட்ட வியாபாரமாக  இந்த செயற்பாட்டை மேற்கொண்டனர். தற்போது இலங்கைக்கும் வந்துள்ளனர். இதனை  சாதாரண விடயமாக கருதவே முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.  

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே  அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அதாவது  வடக்கில்  இடம்பெற்ற அசம்பாவிதத்துக்கு மட்டும் இவ்வாறு   விசேட நீதிமன்றம் அமைப்பது   நியாயமில்லை என்று   பொதுபலசேனாவின் செயலாளர் கூறியுள்ளாரே?  அதற்கு என்ன பதில் கூறப்போகின்றீர்கள்? என்றே ஊடகவியலாளர் கேள்வியெழுப்பியிருந்தார். 

இந்நிலையில் அமைச்சர்   மேலும் பதிலளிக்கையில்,

வடக்கில்  மாணவி வித்தியா சீரழிக்கப்பட்டு  கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சாதாரண  சம்பவமாக  கணிக்க முடியாது.  மாணவியை சீரீழித்து அதனை ஒளிப்பதிவு செய்து  சர்வதேசத்துக்கு அனுப்பும் ஒரு வியாபார முயற்சியே நடந்தேறியுள்ளது. எனவே  இதற்கு விசேட நீதிமன்றம் அமைக்கவேண்டியது அவசியமாகும். இந்த விடயத்தில்  அரசாங்கம்  மிகவும் கவனமாக உயர்ந்த மட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் எடுக்கும். இந்த விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை. 

நாட்டில் இதற்கு முன்னர் இடம்பெற்றுள்ள  பாலியல் வன்முறை  சம்பவத்தை போன்று இதனை  கணிப்பிட முடியாது.  திட்டமிட்டு வெளிநாடுகளிலிருந்து வந்து   மாணவியை சீரீழித்து அதனை ஒளிப்பதிவு செய்து  சர்வதேசத்துக்கு அனுப்பும் ஒரு வியாபார முயற்சியே நடந்தேறியுள்ளது.  எனவே இதற்கு விசேட நீதிமன்றம் அமைத்து விசாரிக்கவேண்டியது அவசியமாகும்.  

முதலில் இந்தியாவில் இவ்வாறு  திட்டமிட்ட வியாபாரமாக  இந்த செயற்பாட்டை மேற்கொண்டனர். தற்போது இலங்கைக்கும் வந்துள்ளனர்.  இதனை  சாதாரண விடயமாக கருதவே முடியாது.  இதற்கு எதிராக  கடும் நடவடிக்கை எடுத்தே தீருவோம்.  

No comments

Powered by Blogger.