Header Ads



கையில் விலங்குடன் A/L பரீட்சை எழுதிய ஜனாதிபதி மைத்திரி - விமானத்தில் பறந்தபடி ரவூப் ஹக்கீமிடம் தெரிவிப்பு

-மப்றூக்-

பாராளுமன்ற சமன்பாட்டில், சிறுபான்மை சமூகங்கள் மற்றும் சிறிய கட்சிகளுக்கிருக்கின்ற ஒரேயொரு காப்பீடு என்பது, பெரிய கட்சிகள் எம் போன்ற சிறுபான்மைக் கட்சிகளின் தயவை நாடி வருவதாகும். அவ்வாறானதொரு நிலையை இல்லாமலாக்குவதற்கான முயற்சிகள் திரைமறைவில் நடந்து வருகின்றன. இதனால்தான், புதிய தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் - பாரியதொரு போரட்டத்தினை நாம் நடத்தி வருகின்றோம் என்று மு.காங்கிரசின் தேசியத் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். 

அட்டாளைச்சேனை பிரதேசத்தில் புதிய பிரதேச சபைக் கட்டிடம், மசூர் சின்னலெப்பை நினைவிடம் ஆகியவற்றினை அமைச்சர் ஹக்கீம் திறந்து வைத்த பின், அட்டாளைச்சேனை சந்தை சதுக்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியபோதே, மேற்கண்டவாறு கூறினார்.  கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், மு.காங்கிரசின் அட்டாளைச்சேனைப் பிரதேச அமைப்பாளருமான ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்ற மேற்படி கூட்டத்தில், மு.கா. தலைவரும் அமைச்சருமான ஹக்கீம் தொடர்ந்து பேசுகையில்,

'இருபதாவது அரசியல் திருத்தம் தொடர்பில் பெரியதொரு போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. புதிய தேர்தல் சீர்திருத்தம் என்கிற விடயத்தில் சிறுபான்மையினர் பாதிக்கப்படாமல் போராடுகிற பாரியதொரு பொறுப்பில் நான் இருந்து கொண்டிருக்கிறேன். இயன்றவரை போராடி எங்களுடைய உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என்கிற தீவிர முயற்சியில் இருக்கின்றேன். 

இதேவேளை, இந்த ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவதற்குக் காரணமாக அமைந்த சிறுபான்மை சமூகங்களுக்கு, தேர்தல் சீர்திருத்த நடவடிக்கை மூலம் அநியாயம் நடந்து விடக் கூடாது என்பதில், ஜனாதிபதியும் பிரதமரும் அவதானமாக இருந்து பாதுகாப்பார்கள்; என்கிற நம்பிக்கையில் நாம் உள்ளோம்.  

இந்த அரசை ஆட்சியில் அமர்த்தியவர்களில் பிரதானமானவர்களான ஜே.பி.பி.யும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் ஆட்சிக்கு வெளியில் இருக்கின்றார்கள். இதனால், தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் அமைச்சரவையிலே பேசுகின்ற பொறுப்பு என்னுடைய தோள்களில்தான் கூடுதலாக உள்ளது. சிறுபான்மை சமூகங்கள் தொடர்பிலான நியாயங்களை எடுத்து வைக்கின்ற விடயத்தில் ஒரு பெரிய போராட்டத்தினைச் செய்து கொண்டிருக்கிறோம்.  

சிறுபான்மைச் சமூகங்களின் பேரம்பேசும் சக்தியினை இல்லாமல் செய்ய வேண்டுமென்பதில், ஒருசில பேரினவாதக் சக்திகள் முனைப்பாக உள்ளன. 

தற்போதை ஆட்சி என்பது தற்காலிகமானதாகும். தேர்தலொன்று நடந்த பிறகுதான், நிலையான ஆட்சி ஏற்பட முடியும். இருக்கின்ற பிரதம மந்திரிக்குப் பெரும்பான்மை இல்லை. போதாக்குறைக்கு, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் யார் என்று சொல்ல முடியாதளவுக்கு நிலைமை இருக்கிறது. 

ஆனாலும், இதுவரை காலமும் இந்த நாட்டில் இருந்திராத ஒரு நாட்டுத் தலைமையை நாம் உருவாக்கியுள்ளோம். ஒரு பெரிய தேசிய அடையாளமாக மதிக்கப்படாத மைத்திரி என்கின்ற ஒருவர், இன்று இந்த நாட்டில், யுக மாற்றமொன்றுக்கு வழிகோலியுள்ளார். 

இப்படியான ஒரு நாட்டுத் தலைமை இனியும் வருமா என்கிற அளவுக்கு, ஜனாதிபதியவர்கள் பெரியதொரு தியாகத்தினைச் செய்துள்ளார். தனக்கிருந்த அதிகாரங்களை தானாகவே இல்லாமல் செய்தவொரு தலைமை எனக்குக் கிடைத்திருக்கிறதென்பது, முக்கியமானதொரு விடயமாகும். 

ஜனாதிபதி மைத்திரி – தனது அதிகாரங்களைக் குறைத்ததோடு மட்டுமல்லாமல், ஒரு தடைவ மாத்திரமே இந்தப் பதவியினை வகிக்கும் திட்டவட்டமானதொரு முடிவுடனும் இருக்கின்றார் என்பது ஆச்சரியமான விடயமாகும். 

ஜனாதிபதியுடன் நேற்றைய தினம் விமானத்தில் ஒன்றாகப் பயணிக்கக் கிடைத்தபோது, அவருடன் பல விடயங்கள் குறித்துப் பேசக் கிடைத்தது. அவர் இரண்டரை வருடங்கள் சிறையில் இருந்திருக்கின்றார். அந்தச் சிறை வாழ்க்கை பற்றிக் கூறினார். 1971 ஆம் ஆண்டு இவரை ஜே.வி.பி. அங்கத்தவர் எனக் கூறி, அப்போதைய அரசாங்கம் சிறையில் அடைத்தது. வேண்டுமென்று, பழிவாங்குவதற்காகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்காரரான இவரை, ஜே.வி.பி. என்று கூறி சிறையில் அடைத்தார்களாம்;. இதனால், தனது உயர்தரப் பரீட்சையை, கையில் விலங்கிட்ட நிலையிலேயே எழுதியதாகவும் ஜனாதிபதியவர்கள் கூறினார்கள். அந்த அனுபவமே – தன்னை மனிதனாக்கியதாகவும் அவர் தெரிவித்தார். 

எமது பிரதம மந்திரி கூட இப்படியானவர்தான். அவர் பற்றி பல விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால், அவர் - கொடுத்த வாக்கை காப்பாற்றுகின்றவராவார். இலகுவில் வாக்குக் கொடுக்க மாட்டார். கொடுத்தால் மீற மாட்டார்.  அந்த அடிப்படையில், ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி ஆகிய இருவரும், இதுவரையில் மிகவும் நாணயமாகவே நடந்திருக்கின்றார்கள். 

பாராளுமன்ற சமன்பாட்டில், சிறுபான்மை சமூகங்கள் மற்றும் சிறிய கட்சிகளுக்கிருக்கின்ற ஒரேயொரு காப்பீடு என்பது, பெரிய கட்சிகள் எம் போன்ற சிறுபான்மைக் கட்சிகளின் தயவை நாடி வருவதாகும்.  அதை இல்லாமலாக்குவதற்கான முயற்சிகள் திரைமறைவில் நடந்து வருகின்றன. இதனால்தான், புதிய தேர்தல் சீர்திருத்தம் தொடர்பில் - பாரியதொரு போரட்டத்தினை நாம் நடத்தி வருகின்றோம். 

இந்த அரசாங்கத்துக்குள் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்கிற பேரியக்கமானது பெறுமானமிக்கதொன்றாகப் பார்க்கப்படுகிறது. எனவே, எமது பெறுமானத்தினைப் பாதுகாக்க வேண்டியதும், கட்சிக்குள் இருக்கின்ற உட்பூசல்களைக் களைவதும் முக்கியமானதொரு விடயமாகும். முஸ்லிம் காங்கிரசின் அரசியலைச் சீர்குலைப்பதற்கு, இந்தக் கட்சிக்குள் ஏற்படுகின்ற முரண்பாடுகளை சிலர் வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்கின்றார்கள். அதற்கு இடம்கொடுக்கக் கூடாது. 

முஸ்லிம் காங்கிரசின் தளங்களுக்குள் மூக்கு நுழைப்பதற்கு இந்த ஆட்சிக்குள்ளேயே சிலர் இருக்கின்றார்கள். இந்த மாவட்டத்தின் ஐ.தே.கட்சித் தலைவர் என்று கூறிக்கொள்ளும் ஒருவர் படுத்துகின்ற பாடு, பெரும்பாடாகும். வேறு சில தரப்புக்களும் மு.காங்கிரசின் தளங்களுக்குள் நுழைய முயற்சிப்பது எல்லோருக்கும் தெரியும். ஆனாலும், இவற்றை நான் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. 

அபிவிருத்தி மேற்கொள்தல் சம்பந்தமான விடயங்களை நாம் முன்னிலைப்படுத்தியிருக்கின்றோம். சம்புக்களப்பு வடிச்சல் பிரச்சினைக்கு நிரந்தரமானதொரு தீர்வு காண்படுதல் அவசியமாகும். அதை செய்வதற்கான காலம் இதுவேயாகும். மேலும், அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசத்துக்குரிய வடிகான்களுக்கான முழுத் திட்ட வரைபினையும் நாங்கள் தயாரித்திருக்கின்றோம். இதற்கான நிதியினைப் பெறுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கின்றோம். 

அட்டாளைச்சேனை வைத்தியசாலை அபிவிருத்தி தொடர்பில் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது. குறித்த வைத்தியசாலையை முற்றுமுழுதாக வேறொரு இடத்துக்கு மாற்ற வேண்டுமெனவும், வைத்தியசாலை அமையப்பெற்றுள்ள இடத்தில் மாதிரிப் பாடசாலையொன்றினை அமைக்கலாமெனவும் இங்கு கூறப்பட்டது. இந்த விடயம் குறித்து தீவிரமாக கரிசனை செலுத்த வேண்டியுள்ளது. இராஜாங்க சுகாதார அமைச்சரும், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரும் எமது கட்சியினர் என்பதால், இதைச் செய்து முடிப்பது சாத்தியமாகும். 

அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள முக்கியமான சொத்துக்களில், தென்கிழக்குப் பல்கலைக்கழகமும், ஒலுவில் துறைமுகமும் பிரதானமானவையாகும். இவற்றினை முன்னேற்றுவது தொடர்பிலும் நாம் கவனம் செலுத்தியுள்ளோம். முன்னைய அரசாங்கத்தில் நாங்கள் வெறும் போடுகாய்களாவே இருந்தோம். அதனால், எந்தவித அபிவிருத்திகளையும் எம்மால் பெரியதாகச் செய்ய முடியவில்லை.  

தென்கிழக்குப் பல்கலைக்கழகம் என்பது முஸ்லிம் காங்கிரஸால் உருவாக்கப்பட்ட முக்கியமானதொரு சொத்தாகும். அதைப் பாதுகாப்பது மாத்திரமன்றி அதனுடைய பயன்பாடுகளை விஸ்தரிக்கவும் வேண்டும். எனவே, இங்கு புதிய வளாகங்களை உருவாக்குவது சம்பந்தமாக முனைப்புச் செலுத்த வேண்டியுள்ளது. அதேவேளை, பல்கலைக்கழகத்துக்கான புதிய உபவேந்தரொருவருக்கான நியமனம் விரையில் நடைபெறவுள்ளது.அ;த உபவேந்தர் நியமனத்தில் பலவிதமான போட்டிகள் உள்ளன. ஆனால், உபவேந்தர் யார் வந்தாலும், இந்தப் பல்கலைக்கழகத்தினை முன்னேற்றும் நடவடிக்கையில் அவர் ஈடுபடவேண்டும். 

நுரைச்சோலை வீட்டுத் திட்டம் இதுவரை பயனாளிகளுக்கு வழங்கப்படவில்லை. இந்த விடயத்தில் மு.காங்கிரஸ் ஒன்றும் செய்யாமலுள்ளதாக சிலர் நினைக்கக் கூடும். அந்த வீட்டுத் திட்டம் தொடர்பில் வழங்கப்பட்ட உயர் நீதிமன்றத் தீர்ப்பில், மாற்று சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் அங்கு வீடுகளை வழங்க வேண்டுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிர்ப்பந்தத்தினை விலக்குவதற்காக, நாங்கள் சில நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கின்றோம். இது தொடர்பில் சஊதி அரேபிய அரசாங்கத்துடனும் பேசியுள்ளோம். இந்த வீட்டுத் திட்டத்தை புனரமைப்புச் செய்வதற்காக, மேலதிக நிதியினை வழங்குவதற்கும் சஊதி அரேபிய அராசாங்கம் பொருந்தியுள்ளார்கள் என்றார்.

1 comment:

  1. திரு. ரவூப் ஹக்கீம் அவர்களே,

    எத்தனை காலத்துக்கு இப்படி மற்றவர்களின் (ஜனாதிபதி மற்றும் பிரதமர்) குணநலன்களைப் புகழ்ந்தவாறு இருப்பீர்கள். அவற்றிலே ஒன்றையாவது நீங்கள் சுவீகரித்துக் கொள்ளக் கூடாதா..?

    நல்ல குணங்களும் தியாகமும் அவர்களுக்கு பதவியும் சொகுசு வாழ்க்கையும் உங்களுக்கு என்றே வாழந்துவிட்டு போகப்போகின்றீர்களா..?

    ReplyDelete

Powered by Blogger.