Header Ads



உடன்பாட்டு, முரண்பாட்டு அரசியலில் முஸ்லிம் அரசியல் வாதிகள்..!

-எம்.எல். பைசால் - காஸ்பி-

ஜனநாயக மரபுகளைப் பேணும் பாராளுமன்ற அரசியல் வரலாற்றில் உடன்பாட்டரசியல், முரண்பாட்டரசியல் என்ற இரு விதமான எண்ணக்கருக்கள் உபயோகிக்கப்படுகின்றன. உடன்பாடு எனும் போது ஆட்சியில் உள்ள கட்சிக்கு ஆதரவளித்து அல்லது பங்கு கொண்டு செயற்படுவதையும் முரண்பாடு என்பது எதிர் கட்சியுடன் இணைந்து ஆட்சியாளர்களின் செயற்பாட்டிற்கு விமர்சன ரீதியான எதிர்ப்பினை தெரிவித்து அரசியலை மேற்கொள்வதையும் குறித்து நிற்கின்றது.

பெரும் பான்மை சமுகத்தவர்கள் எப்பொழுதும்     எதிர் கட்சி ,ஆளும் கட்சி என இரு பிரதான பாத்திரங்களில் தமது அரசியலை முன்னெடுக்கும் அதேவேளை, தமிழ் சமுகத்தில் இனத்துவ அரசியலை செய்கின்ற அரசியல் கட்சிகளில் அநேக மானவை நீண்ட காலமாக விமர்சனத்துடன் கூடிய முரண்பாட்டு அரசியலை செய்வதுடன் மலையக அரசியல் கட்சிகள் இணக்கப் பாட்டுடனான அரசியலை தொடர்வதை பெரும்பாலும் அவதானிக்கலாம்.

முஸ்லிம் சமுகத்தின் அரசியல் போக்கு இவ்விரு    எண்ணக் கருக்களுக்குமிடையில் ஒன்றித்த தன்மையினையும் உடன்பாட்டுடனான அரசியல் செயற்பாடு முதன்மை பெற்றுள்ளதையும் காணலாம். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வருகைக்கு முன்புள்ள காலத்தில் முஸ்லிம்கள் ஐ.தே.க,.சு. க கட்சிகளுடன் அங்கம் வகித்து ஆட்சியில் அமரும் ஆளும் கட்சியுடன் தன்னை அடையாளப் படுத்திக் கொண்டு அரசியலை முன்னெடுத்துள்ளனர். முன்பு வாழ்ந்த அரசியல் தலைவர்கள் உடன்பாட்டுடனான அரசியலை முன்னெடுத்து பல சேவைகளைப் புரிந்துள்ளனர்.

முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் வருகையின் பிறகு அதன் தலைவர் அஷ்றப் அவர்கள் எதிர் கட்சி அரசியலை முன்னெடுத்தாலும் மறைந்த ஜனாதிபதி ஆர்.பிரமதாஸா அவர்களுடன் உடன்பாட்டுடனான அரசியலயே அவர் மேற்கொண்டார். பல முஸ்லிம் உறுப்பினர்கள் அன்றைய ஐ.தே.க அரசில் தான் அங்கம் வகித்தனர்.

உடன்பாட்டுடனான அரசில்தான் முஸ்லிம்களின் பாதுகாப்பும். உருமையும் உறுதிப் படுத்தப்படும் என்பது அவர்களின் அரசியல் நம்பிக்கையாகும். 1994 ம் ஆண்டு ஏற்பட்ட அரசியல் மாற்றத்தினால் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும், சு.க கட்சியில் அங்கம் பெற்றவர்களும் உடன்பாட்டு அரசியலேயே செய்தனர். ஐ.தே.க கட்சியில் அங்கம் பெற்றவர்கள் எதிர் கட்சியில் அமர்ந்தாலும் முஸ்லிம் காங்கிரஸ் மூலமான முஸ்லிம் பிரதிநிதித்துவம் முஸ்லிம் சமுகத்தினை பிரதிபலிப்பதாகவே காணப்பட்டது.

2004 ம் ஆண்டிற்குப் பின் மு.க முரண்பாட்டு அரசியலை முன்னெடுத்த பொழுதிலும் ஒரு சிலரைத் தவிர அநேகர் உடன்பாட்டு அரசியலில் ஆர்வம் கொண்டிருந்தனர். நீண்ட காலமாக ஐ.தே கட்சியில் அங்கம் வகித்த மூத்த முஸ்லிம் அரசியல் வாதிகள் கூட மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் ஆட்சியில் உடன்பாட்டு அரசியலில் ஆர்வம் கொண்டு அவரது அரசில் அங்கம் வகித்தனர்.

ராஜபக்ஸ அவர்களின் மக்கள் கவர்ச்சி, மக்களின் எதிர்பார்ப்பு என்பன மு.க கட்சியினை பிற்பட்ட காலத்தில் உடன்பாட்டு அரசியலுக்கு உட்படுத்தின முஸ்லிம் சமுகத்தின் சார்பில் ஐ.தே கட்சியில் அங்கம் பெற்ற இரு உறுப்பினர்களைத் தவிர முஸ்லிம் சமுகம் சார்பான பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உடன்பாட்டு அரசியலில் சங்கமமாகினர்.

மஹிந்த ராஜபக்ஸ அவர்களின் ஆட்சியில் உடன்பாட்டு அரசியலை முன்னெடுத்த முஸ்லிம் அரசியல் வாதிகள் முஸ்லிம் சமுகத்தின் உரிமை, இருப்பு,சமய பாதுகாப்பு, செயற்பாடு  என்பன சில குழுவினரால் கேள்விக் குறியாக்கப்பட்ட பொழுது அரசு காத்திரமான நடவடிக்கையினை எடுக்காத நிலையில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் உரிய முறையில் குரல் கொடுப்பதில் ஐக்கியமாக செயற்படத் தவறியதால் முஸ்லிம் சமுகம் உடன்பாட்டு அரசியலில் விருப்பமின்மையினை வெளியிட்டது. ஆட்சியாளர்களால் அபிவிருத்தி, தொழில் வாய்பு என்று எதை செய்த பொழுதிலும் அவை அனைத்தும் அழிந்து விடக் கூடியது என்பதை அளுத்கம போன்ற சம்பவம் முஸ்லிம் சமுகத்தினை மிக ஆழமாக சிந்திக்கத் தூண்டியது.

முஸ்லிம் அரசியல் வாதிகளிடம் முஸ்லிம் சமுகம் அவர்களின் பாதுகாப்பு, பல்லின சமுகத்தின் மத்தியில் ஐக்கியமாக வாழக் கூடிய உத்தரவாதத்தினை உறுதிப்படுத்தி, இச்சமுகம் வேண்டிநிற்கும் நியாயமான உரிமைகளைப் பெறுவதற்கான செயற்பாடுகளையே அவர்கள் மூலம் எதிர்பார்க்கின்றது.

தேர்தல் காலங்களில் ஏற்படுகின்ற வீண் விரயங்கள், ஆலாத்தி எடுத்தல், ஆடம் பரமான தோரணகள், செயற்பாடுகள் போன்ற வற்றிலிருந்ருந்து நீங்கி இந்த நாட்டிற்கு தமது அரசியல் பயணத்தின் மூலம் சிறந்த முன்மாதரிகளை சான்று பகரக்கூடிய அரசியலை வரவேற்க்க ஆவலுடன் உள்ளது.  ஒற்றுமையினை வலியுறுத்தும் சமய பின்னணி கொண்ட எம் அரசியல் வாதிகளிடம் அது இல்லாமல் இருப்பது மிகப் பெரிய குறையாகும்.. எம் நாட்டு அரசியல் வாதிகள் எதிர்கட்சி, ஆளும் கட்சி என்ற இரு கொள்கையினையே பின்பற்றுகின்றனர். இதில் அவர்கள் எப்பிரிவில் தனது ஆதரவினை வெளிப் படுத்திய பொழுதிலும் பொதுவான விடயங்களில் ஐக்கியப்பட்டு செயற்படாமல் இருப்பது கவலேயே.

இன்று பாராளுமன்றத்தில் அங்கம் பெறும் முஸ்லிம் உறுப்பினர்களில் மூன்று உறுப்பினர்களைத் தவிர ஏனையோர்  மு,க அரசியலை பின்னணியாக கொண்டு அரசியலை ஆரம்பித்தவர்களே. இவர்களில் அநேகர் ஆளும் கட்சியாக இருந்த பொழுதிலும் இணக்கப்பாடு இல்லாமல் இருப்பது இச்சமுகத்திற்கு பெரும்பாதிப்பினை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றது.

வட கிழக்கில் தனித்துவ அரசியலை ஆரம்பித்த இவர்கள் தனி இராச்சியங்களை அமைத்து ஆளுக்கொரு கட்சி என்று பிரிந்து, எதிரிகளை தமக்குள் உருவாக்கிக் கொண்டு இருப்பது ஆரோகியமாகத் தென்படவில்லை .

அல்குர்ஆன் ,அல்ஹதீஸ் என்று அரசியலை ஆர்மிபித்த மு.க, கட்சியின் மக்கள் பிரதிநிதிகளிடம் கூட முன்மாதரிகள் இருப்பதாக தென்படவில்லை. அவர்களின் அறிக்கைகள், சில பேச்சுகள், செயற்பாடுகள் என்பன ஒருவர் மற்றவரை அச்ச உணர்வுடன் பார்க்கக் கூடியதாகவே இருக்கின்றது. பதவிகளுக்காக மக்களிடையே கருத்து வேறுபாடுகளை உருவாக்கி பிரதேச வாதங்களை ஏற்படுத்தி அமைதியற்ற தன்மையினை உண்டாக்கிக் கொண்டு இருப்பது இச்சமூகத்திற்கு பெரும் கேடாகும். மாற்று அரசியலைப் பற்றி சிலர் சிந்தித்து சில வெள்ளோட்டங்களை அவ்வப்போது செய்துகொண்டு இருக்கின்றனர். சிலர் ஜனாதிபதியினை ஆட்சிபீடம் ஏற்றுவதற்கு தாங்களே உதவியவர்கள் என ஒவ்வொருவரும் தன்னைத் தானே பிரபல்யப் படுத்திக் கொண்டு பாராளுமன்ற கனவுகளுடன் உலாவருவதை அவதானிக்கலாம்.

ஏற்கனவே ஒரு கட்சி பல கட்சியாகி பல பிரச்சினைகளை தாங்கிக் கொண்டு இருக்கும் சமுகத்திற்கு புதிய மாற்று அரசியல் சிந்தனை அரசியலில் எவ்வாறான தாக்கங்களை செலுதப் போகின்றது என நடைபெற போகும் தேர்தலே சாட்சி பகரும். ஜனநாயக நாட்டில் விரும்பியவர்கள் விரும்பிய கட்சியினை ஆதரிக்கலாம்,உருவாக்கலாம். ஆனால் சிறுபான்மையாக வாழும் இனத்தவர்கள் பல கட்சிகளை உருவாக்குவதால் அவர்களின் வாக்குகள் சிதறடிக்கப் படுவதுடன் குறிக்கோளினை அடைய தடையாக சில போது இருப்பது கவனிக்கத்தக்கது.

எதிர் வரும் காலங்களில் நடைபெற உள்ள தேர்தலில் அரசியல் வாதிகள் உடன்பாட்டு அரசியலயோ அல்லது முரண்பாட்டரசியலயோ தேர்ந்தெடுத்தாலும் அதில் முஸ்லிம் சமுகத்தின் ஐகியம் வலியுறுத்தப்பட வேண்டியுள்ளது. இந்த நாட்டில் முஸ்லிம் சமுகம் தொடர்பாக கிளறி விடப்பட்ட பிரச்சினைகள் இது வரை தீர்க்கப்படவும் இல்லை அதற்கான சட்டரீதியான உத்தரவாதங்கள் வழங்கப்படவும் இல்லை... அதே போன்று இனப்பிரச்சினை தீர்வின்போது முஸ்லிம் சமுகத்தின் அபிலாசைகள், காணி இழந்தவர்களுக்கான மாற்றீடுகள், சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீட்டுத் திட்டம், மீள் குடியேற்றம், எல்லை நிர்ணயம் போன்ற பல விடயங்களில் முஸ்லிம் அரசியல் வாதிகள் எதிர்காலத்தில் பங்களிப்பினை செலுத்த வேண்டி உள்ளது.

இந்நிலையில் முஸ்லிம்களின் பெயரில் அரசியல் செய்பவர்களும், அரசியல் கட்சிகளும் ஒரு குடையின் கீழ் வரவேண்டியதன் அவசியம் இருந்து கொண்டு இருக்கின்றது, வெறும் கோசங்களையும், உணர்ச்சி களையும்,பிரதேச வாதத்தினையும் தூண்டி அரசியல் செய்வதை தவிர்த்து முஸ்லிம் சமுகம் சார்பாக சிந்தித்து செயற்படக் கூடிய அரசியல் வாதிகாளை சமுகம் வேண்டி நிற்கின்றது. 

தேர்தல் காலங்களில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திப்பது பற்றி பலர் கருத்து கூறுவதை காண முடிகின்றது. இது தேர்தலின் பின்பு உரிய பலா பலங்களை பெற்றுத் தருமா என்பது கேள்விக் குறியே. ஏனெனில் தனி கட்சியாக இருக்கும் போது கூட அவர்கள் கட்சி மாறும் நிலை கடந்த காலங்களின் வரலாறாகும். விரும்பியோ,விரும்பாமலோ அரசியல் வாதிகள் அனைவரும் ஓர் அணியாக ஒரு கட்சியில்  சேர்ந்து தேர்தலை சந்திப்பது காத்திரமான நடவடிக் கைகளை எடுப்பதற்கு பெரும் துணை நிற்கும்.

களத்தில் முஸ்லிம்களின் பெயரில் பலர் பல கட்சிகளை ஏற்படுத்திக் கொண்டாலும் அவர்களில் அநேகர் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் தான். இவ்வாறு பிரிந்தவர்கள் எம் சமூகத்தின் நன்மை கருதி பரஸ்பர விட்டுக் கொடுப்புடன் ஒற்றுமையாக செயற்படுவது பற்றி சிந்திக்க முடியும். மு,க விட்ட தவறுகளை மீட்டிப் பார்ப்பதுடன்  எல்லோரையும் உள்வாங்க இதய சுத்தியுடன் நடவடிக் கைகளை  முன்னெடுப்பது அவசியமாகும்.

முஸ்லிம்கள் மு. க கட்சியினை சமுகத்தின் பேரியக்கமாகவே பார்க்கிண்றனர்.அது நாட்டில் பெற்றிருக்கும் நல்லபிப்பிராயம் பாதுகாக்கப் படுவது அதனை வழி நடாத்துபவர்களின் கரங்களில் தங்கியுள்ளது, முரண்பாடு அல்லது உடன்பாடு அரசியலில் ஒற்றுமையுடன் சமுகத்தின் அரசியல் பரிணமிக்க வேண்டும் என்பதும் சமுகம் தொடர்பான விடயங்களில் ஒரு குரலாக செயற்த்திறனுடன் செயற்ப்பட வேண்டும் என்பதே சமுகம் எதிர்பார்க்கும் அரசியலாகும்.

2 comments:

  1. Very good message but selfish politician always think himself to gain post instead of interest of the community in general. Unity is our strength division is our downfall.

    ReplyDelete

Powered by Blogger.