Header Ads



இலங்கை வரலாற்றில் இது முக்கிய தருணம் - பாராளுமன்றத்தில் இன்று மைத்திரி ஆற்றிய உரை..!

நாட்டு மக்களுக்கு சுதந்திரமான ஜனநாயகத்தை பெற்றுக் கொடுக்க இலங்கை வரலாற்றில் முக்கிய தருணம் ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

19வது திருத்தச் சட்டம் மீது இன்றும் நாளையும் விவாதம் நடைபெற்று நாளை மாலை அது நிறைவேற்றப்பட வேண்டும் என ஜனாதிபதி இன்று (27) பாராளுமன்றில் விசேட உரையாற்றுகையில் தெரிவித்தார். 

1978ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை கொண்டுவந்த போது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் ஏழு பேர் அப்போதே எதிர்த்ததாக அவர் சுட்டிக்காட்டினார். 

ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை கொண்டுவந்த ஐக்கிய தேசியக் கட்சியே 1999ம் ஆண்டு அதனை நீக்க வேண்டும் என கோரியதாக ஜனாதிபதி தெரிவித்தார். 

1994, 1999ம் ஆண்டுகளில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதாக உறுதி அளித்ததாகவும் பின்பு 2005, 2010ம் ஆண்டுகளில் மஹிந்த ராஜபக்ஷ அதே வாக்குறுதியை வழங்கியதாகவும் 2015ம் ஆண்டு தேர்தலில் தானும் அதே வாக்குறுதியை அளித்ததாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறினார். 

எனவே தனக்கு வாக்களித்த 62 லட்சம் மக்களும் மஹிந்தவுக்கு வாக்களித்த 58 லட்சம் மக்களும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை இரத்து செய்யப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். 

எனவே 19வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்வது நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு என அவர் குறிப்பிட்டார். 

அதனால் நாளை 19வது திருத்தச் சட்டத்தை கட்சி பேதமின்றி வாக்களித்து நிறைவேற்றி நாட்டு மக்கள் மற்றும் எதிர்கால சந்ததியின் வளமான எதிர்காலத்திற்கு வழியேற்படுத்த வரலாற்று கடமையை செய்ய வேண்டும் என்று பாராளுமன்றில் உள்ள 225 உறுப்பினர்களிடமும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கேட்டுக் கொண்டுள்ளார். 

No comments

Powered by Blogger.