Header Ads



லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில், கருத்து வெளியிட முடியாது - கோத்தபாய

சிரேஷ்ட ஊடகவியலாளரான லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பில் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதினால் எவ்வித கருத்துக்களையும் வெளியிட முடியாது என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்றிற்கு இன்று காலை வழங்கிய செவ்வியின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் கொலையுடன் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு தொடர்பு உள்ளது என முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா குற்றப்புலனாய்வு பிரிவிடம் அண்மையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் குறித்த ஊடகம் வினவிய கேள்விக்கே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சிலர் நாடாளுமன்ற வரப்பிரசாதங்களுக்கு அடிமையாகி ஊடகங்களின் முன்பாக தன்னிலை மறந்து உண்மைக்கு புறம்பான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் எனவும்,

லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமையினால் அது குறித்த விமர்சனங்களை முன்வைப்பது தவறு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை மகிந்த அரசாங்கத்தின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல் சம்பவங்களுடன் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.