Header Ads



மர்ஹூம் அஸ்ரபின் கனவை, ரவூப் ஹக்கீம் நனவாக்கியுள்ளார் - சட்டத்தரணி கபூர்

கிழக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட்டுள்ள முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அகமட் முஸ்லிம் காங்கிரஸின் சிபாரிசின் பேரில் நியமிக்கப்பட்ட அவர் ஒரு முஸ்லிம் என்பதனால் முஸ்லிங்களுக்கு மட்டும் உரியவர் அல்ல.  இம் மாகாணத்தில் வாழும் சகல இன மக்களின் பிரதிநிதி என்பதை நாம் எல்லோரும் அறிய வேண்டும்.  இந்த நியமனம் தொடர்பாக சில அரசியல் கட்சிகளின் விமர்சகர்கள் ஊடகத்தில் மிகவும் காரசாரமாக அண்மைக்காலமாக விமர்சித்து வருகின்றார்கள்.  இந்த விமர்சனங்களுக்கு விளக்கம் கொடுக்கையில் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக செயலாளரும் உயர்பீட உறுப்பினருமான சிரேஷ்ட சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார் 

அண்மையில் அட்டாளைச்சேனை மத்திய குழு அதன் கிளைகளுக்கான உத்தியோகத்தர்கள் தெரிவின் போது நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் கபூர் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார் இக் கூட்டம் அட்டாளைச்சேனை முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழுத்தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ஏ.எல்.எம். நஸீர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற போது சட்டத்தரணி கபூர் அவர்கள் மேலும் குறிப்பிட்டதாவது:

தனி மாகாணம், தனித்தரப்பு, தனி அலகு, முஸ்லிம் மாகாணசபை, இணைந்த வடகிழக்கில் நிலத்தொடர்பற்ற முஸ்லிங்களுக்கான முதலமைச்சர் என பல்வேறுபட்ட கோரிக்கைகள் கடந்த பல வருடங்களாக மறைந்த தலைவர் எம்.எச்.எம் அஸ்ரப் அவர்கள் உயிரோடு இருக்கும் காலத்தில் இருந்தே முன்வைக்கப்பட்டுவந்த  யோசனைகளாகும்.  இது தொடர்பாக அப்போதைய அரசுடனும் ஏனைய அரசியல் கட்சிகளுடனும் பல சுற்றுப்போச்சு வார்த்தைகள் இடம் பெற்று வந்தன.  இருப்பினும் அன்னாரின் மறைவுக்குப் பின் இவைகள் செயலிழந்து பல்வேறு அரசியல் காரணங்களுக்காக கடப்பில் போடப்பட்டிருந்தன.  இப்போது எமது தலைவர் அவரின் அரசியல் சாணக்கியத்தால் முயற்சி செய்து பல பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே அரசுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் பேரில்  அரசாங்கத்தின் ஆதரவுடனும் மற்ற ஏனைய இதர கட்சிகளின் சம்மதத்துடன்தான் இந்த முதல் அமைச்சர் பதவி முஸ்லிம் காங்ரஸ்க்கு வழங்கப்பட்டுள்ளது.  மாறாக தந்திரமாக தட்டிப்பறிக்கவுமில்லை யாரையும் ஏமாற்றி பெறவும் இல்லை என்ற உண்மையை இவர்கள் உணரவேண்டும். 

மறைந்த தலைவர் மர்ஹூம் அஸ்ரப் அவர்களின் கனவை நனவாக்கிய எமது கட்சித் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அவர்களுக்கு இதற்காக நாம் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என குறிப்பிட்டார்.  எது எப்படி இருப்பினும் இந்த முதல் அமைச்சருக்கு  ஆதரவு வழங்க வேண்டிய தார்மீக கடமையும் பொறுப்பும் எமது சகோதர தமிழ் பேசும் மக்களுக்கும் அவர்களைப் பிரதிநிதிப்படுத்தும் தமிழ் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்கும் சிங்கள மக்களுக்கும் உண்டு. அதற்காக அவர்களுக்கு நாம் என்றென்றும் நன்றியுடையவர்களாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்நாட்டில் கனிசமாக வாழும் முழு முஸ்லிங்களுக்கும் மத்தியில் பொதுவாக ஒரே ஒரு முஸ்லிம் முதலமைச்சர் கிழக்கு மாகாண சபைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் எல்லா இன மக்களையும் அரவணைத்து செல்லும் வல்லமையும் திறமையும் உடையவர் இன்னும் சில வருடங்களுக்கு மட்டுமே இப்பதவியை இவர் வகிக்கப்போகின்றார். சகலருக்கம் சம சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டுமென்ற ஜனநாயகக் கோட்பாட்டிற்கிணங்க நாம் இனம், மதம், மொழி பார்க்காமல் கட்சி வேறுபாடுகளுக்கு அப்பால் சென்று அவருக்கு ஆரதவு வழங்க வேண்டும் எனவும் வேண்டிக் கொண்டார். ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் மற்றவர்களுக்கும் மாற்று மதத்தவர்களுக்கும் மதிப்பளித்து வந்துள்ளது.  இதுதான் இக்கட்சியின் பழைய வரலாறு எனவும் கூறினார்.

இக்கூட்டத்தில் அரசியல் உயர்பீட உறுப்பினர் யூ.எம். வாஹித் அவர்கள் உட்பட ஏனைய கட்சி ஆதரவாளர்களும் தமது கருத்துக்களை கூறினார்கள். இதில் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உறுப்பினர்களான எஸ்.எல். முனாஸ், ஐ.எல். நஸீர் ஆகியோர் நலந்து கொண்ட இக்கூட்டத்தில் மத்திய குழுச் செயலாளர் எம். ஹாரித் நன்றியுரை நிகழ்த்தினார்.

No comments

Powered by Blogger.