Header Ads



ஜனாதிபதி மைத்திரியின் சகோதரர் படுகொலை குறித்து, அவரது மனைவி + மைத்துனரின் கருத்துக்கள்...!

ஜனாதிபதியின் சகோதரர் பிரியந்த சிறிசேன (43) வின் இறுதிக் கிரியைகள் இன்று பொலன்னறுவை பொது மயானத்தில் நடைபெறும். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான பிரியந்த பொலன்னறுவை ‘லக்ஷ உயனவை’ வசிப்பிடமாக கொண்டவர்.

கடந்த வியாழக்கிழமை இரவு பிரியந்தவுக்கும் அவரது நெருங்கிய நண்பருக்குமிடையிலான வாக்குவாதம் உச்சத்தை அடைந்ததை தொடர்ந்து பிரியந்த தனதுநண்பரினால் கோடரியால் பலமாக தாக்கப்பட்டார்.

அவர் உடனடியாக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அப்போது அவர் ஆபத்தான கட்டத்தை அடைந்திருந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காலை தனியார் வைத்தியசாலையொன்றில் வைத்து பிரியந்த உயிரிழந்தார்.

பிரியந்த, கீத்தாஞ்சலி சமன்குமாரியின் அன்பு கணவரும் பாடசாலை செல்லும் மூன்று பிள்ளைகளின் தந்தையுமாவார். இவர் பொலன்னறுவை மாவட்டத்தின் பிரபல வர்த்தகராகவும் சிறந்த சமூக சேவையாளராகும் அப்பகுதி வாழ் மக்களால் அடையாளம் காணப்பட்டார்.

இதேவேளை தனது கணவர் நன்கு திட்டமிட்டே கொலை செய்யப்பட்டி ருப்பதாக பிரியந்தவின் மனைவி கீத்தாஞ்சலி தெரிவித்தார். “சம்பவம் இடம்பெற்ற தினம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக கணவர் என்னை கதுறுவெலவிற்கு வருமாறு அழைத்திருந்தார்.

நான் எனது பிள்ளைகளுடன் வாகனத்தில் புறப்பட்டுச் செல்லும் போது, தொலைபேசியில் என்னை அழைத்த அவர் தான் இப்போது அரல கன்வில ஆலையில் இருப்பதாகவும் இன்னும் சிறிது நேரத்தில் அரலகன்வில விற்கு வருவதாகவும் கூறினார். நான் அரலகன்விலையை அடைந்ததும் எனது கண வர் தாக்கப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்றேன்.

அவர் உடனடியாக பொலன்னறுவை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின் அங்கிருந்து கொழும்புக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். எனினும் அவர் சிகிச்சையின் போதே உயிரிழந்துவிட்டார்” என்றும் அவர் கூறினார்.

“எனது கணவரை கொலை செய்தவர் தனது வியாபார நடவடிக்கைகளுக்காக எனது கணவரிடம் நிறைய பணம் பெற்றுள்ளார். எனது கணவரும் தன்னால் இயன்ற பண உதவிகளை அவருக்காக செய்துள்ளார். இறுதியில் அந்த நபர் எனது கணவரையே திட்டமிட்டு கொலை செய்துவிட்டார்.” என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

பிரியந்தவின் மைத்துனரான உப்பாளி ஜயசிங்ஹ, “இருவருக்கிடையிலான வாய் தர்க்கத்தின் போதே பிரியந்த கொலை செய்யப்பட்டுள்ளார். இவர் இப்பகுதியில் மிகவும் பிரபலமானவர். மிகவும் இரக்கமான இதயம் கொண்டவர். தன்னை தேடி வருவோருக்கு தன்னாலான உதவிகளை செய்பவர். அவர் தனது நெருங்கிய நண்பர் ஒருவராலேயே கொலை செய்யப்பட்டமையானது நெருங்கிய நண்பர்கள் குறித்து கவனத்துடனும் அவதானத்துடனும் இருக்க வேண்டுமென்ற கசப்பான உண்மையை மீண்டும் எமக்கு ஞாபகப்படுத்தியுள்ளது” என்று கூறினார்.

தனது சகோதரர் நாட்டின் ஜனாதிபதியானார் என்பதற்காக அவர் எவ்வித பெருமையையும் யாரிடமும் காட்டியிருக்கவில்லை. அவர் வழக்கம் போலவே தனது வியாபாரத்தை நடத்தி வந்ததுடன் அன்று பொலவே என்றும் அனைவருடனும் நட்புறவையும் பேணி வந்தார். இவரது எதிர்பாராத மரணம் பாரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளதெனவும் உப்பாளி தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.