Header Ads



உலகக் கோப்பை கிரிக்கெட் இறுதிப்போட்டி - சில முக்கிய தகவல்கள்


மெல்பர்ன் நகரில் நாளை நடைபெறவுள்ள உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்புடன் நியூசிலாந்து அணி களமிறங்குகிறது. ஆஸ்திரேலிய அணி 5வது முறையாக கோப்பையை கைப்பற்றும் ஆவலுடன் மெல்பர்னில் முகாமிட்டுள்ளது. உலகக் கோப்பையை இதுவரை மேற்கிந்திய தீவுகள், ஆஸ்திரேலியா, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை ஆகிய 5 அணிகள் மட்டுமே கைப்பற்றியுள்ளன.

மெல்பர்ன் நகரில் காலை 9 மணிக்கு தொடங்கவுள்ள இந்த போட்டியில், நான்கு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நியூசிலாந்து அணியுடன் பலப்பரீட்சையில் ஈடுபடவுள்ளது. உலகக் கோப்பை வரலாற்றில், போட்டியை நடத்தும் அணிகள் மோதவுள்ள இரண்டாவது இறுதிப் போட்டி இதுவாகும். கடந்த உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் போட்டியை நடத்திய இந்தியா-இலங்கை அணிகள் முதல் முறையாக மோதின.

கடந்த 1992ஆம் ஆண்டுக்கு பிறகு, ஆசிய அணிகள் பங்கேற்காத முதல் உலகக் கோப்பை இறுதி ஆட்டமாக இது அமைந்துள்ளது. கடந்த 1992ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை குறைந்தபட்சம் ஒரு ஆசிய அணியாவது இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுவிடும்.

உலகக் கோப்பை இறுதிபோட்டியை 2 முறை நடத்திய மைதானம் என்ற பெருமையை மெல்பர்ன் கிரிக்கெட் மைதானம் பெறவுள்ளது. இதற்கு முன் 1992ஆம் ஆண்டு இறுதிப்போட்டி இந்த மைதானத்தில் நடந்துள்ளது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் 4 முறை உலகக் கோப்பை இறுதி ஆட்டம் நடந்துள்ளது. கொல்கத்தா ஏடன் கார்டன், லாகூர் கடாஃபி, ஜோகன்ஸ்பர்க் வான்டரர்ஸ், பர்படாஸ் கெனிங்ஸ்டன் ஓவல், மும்பை வான்கடே மைதானங்களில் தலா ஒரு முறை உலகக் கோப்பை இறுதி ஆட்டம் நடைபெற்றுள்ளது.

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடும் அதிக வயதுடைய வீரராக நியூசிலாந்தின் டேனியல் வெட்டேரி உள்ளார். தற்போது 36 வயது நிரம்பிய வெட்டேரி, கடந்த 1990ஆம் ஆண்டு தனது 18வது வயதில் நியூசிலாந்து அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட ஆரம்பித்தார்.

நான்கு முறை உலகக் கோப்பையை வென்றுள்ள ஆஸ்திரேலிய அணி இதுவரை தாய்நாட்டில் உலகக் கோப்பையை வென்றது இல்லை. இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றால் தாய்நாட்டில் கோப்பையை வென்றும் ஆஸ்திரேலிய அணி சாதனை படைக்கும். இந்திய அணி மட்டுமே கடந்த 2011ஆம் ஆண்டு தாய்நாட்டில் உலகக் கோப்பையை வென்றுள்ளது. 

தற்போதைய ஆஸ்திரேலிய வீரர்களில் கடந்த 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பையை வென்ற அணியில் கேப்டன் மைக்கேல் கிளார்க் மற்றும் ஷேன் வாட்சன் மட்டுமே இடம் பிடித்திருந்தனர்.

நியூசிலாந்தின் மார்ட்டின் கப்தில் 10 ரன்கள் அடித்தால், இலங்கை வீரர் குமார சங்கக்காராவின் சாதனையை இந்த உலகக் கோப்பையில் முறியடித்து விடுவார். நடப்பு உலகக் கோப்பை போட்டியில் 7 ஆட்டங்களில் விளையாடிய சங்கக்காரா 4 சதங்களுடன் 541 ரன்களை அடித்துள்ளார். மார்ட்டின் கப்தில் 8 போட்டிகளில் 532 ரன்களை அடித்துள்ளார். 

கடந்த 2007ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில், ஆஸ்திரேலியாவின் மெக்ரத் 26 விக்கெட்டுகளை சாய்த்து சாதனை படைத்துள்ளார். இந்த உலகக் கோப்பையில் நியூசிலாந்தின் ட்ரென்ட் பவுல்ட் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சளர் மிட்செல் ஸ்டார்க் 20 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இருவருமே இறுதி ஆட்டத்தில் விளையாடவுள்ளனர். 

ஒவ்வொரு இறுதிப் போட்டியிலும் முதல் முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறிய அணிகள் கோப்பையை வென்றுள்ளன. 1983ஆம் ஆண்டு இந்திய அணி கோப்பையை வென்றது. 1992ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணி கோப்பையை வென்றது. 1996ஆம் ஆண்டு இலங்கை அணி கோப்பையை கைப்பற்றியது. அந்த வரிசையில் நியூசிலாந்து அணியும் இணையலாம்.

இறுதிப்போட்டிக்கு முதல் முறையாக தகுதி பெற்றுள்ள நியூசிலாந்து அணி, அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் இந்த போட்டிகள் அனைத்தும் தாய்நாட்டில் நடைபெற்றது. இறுதி ஆட்டம் மட்டும் மெல்பர்னில் நடைபெறுகிறது.

No comments

Powered by Blogger.