Header Ads



இந்தோனேஷியாவில் பௌத்த, முஸ்லிம் தலைவர்களின் மாநாட்டில் ரவூப் ஹக்கீம்

இந்தோனேஷியாவில் நடைபெறும் பௌத்த மற்றும் முஸ்லிம் தலைவர்களின் உயர் மட்ட உச்சி மாநாட்டில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு செவ்வாய்கிழமை (03) பிற்பகல் 'பௌத்த - முஸ்லிம் உறவுகளில் எதிர் நோக்கப்படும் தற்கால சவால்கள் - சமயங்களுக்குள்ளும், சமயங்களுக்கிடையிலும் பதிலிறுத்தல்' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

இலங்கை சமாதானத்திற்கான சமயங்கள் மன்றத்தின் தலைவர் சங்கைக்குரிய பெல்லன்வில விமலரத்ன அனுநாயக்க தேரரும் இந்தச் செயலமர்வில் உரையாற்றினார்.

இந்தோனேஷிய பௌத்த சங்கமும், இந்தோனேஷிய உலமாக் கவுன்சிலும் இணைந்து இந்த மாநாட்டை அங்கு கூட்டாக நடாத்துகின்றன. அங்குள்ள பௌத்த, முஸ்லிம் உறவுகளுக்கான சர்வதேச மன்றம் இதனை ஏற்பாடு செய்துள்ளது.

'தீவிரவாதத்தை மேலோங்கி நிற்றலும், நீதியுடன் சமாதானத்தை நோக்கி முன்னேறிச் செல்லலும்' என்ற தொனிப்பொருளில் இந்த மாநாடு நடைபெறுகின்றது.

இந்தோனேஷியா, மலேசியா, தாய்லாந்து, மியன்மார், இலங்கை, பங்களாதேஷ் ஆகிய பிராந்திய நாடுகளின் பிரதிநிதிகள் மாநாட்டில் பங்குபற்றுகின்றனர்.

இந்தோனேஷியா சமய விவகார அமைச்சர் லுக்மான் ஹக்கீம் சம்சுதீன், வெளிவிகார அமைச்சர் ரெட்னோ எல்.பீ.மர்சுதி, ஆரம்ப, இரண்டாம் தர கல்வி அமைச்சர் அனீஸ் பஸ்வதன் ஆகியோரும் உரையாற்றினர்.

பிராந்திய நாடுகளில் பன்முகத்தன்மை, சகிப்புத் தன்மை மற்றும் சமய சுதந்திரம் என்பன பேணப்பட வேண்டியதன் அவசியத்தை வளவாளர்கள் சுட்டிக்காட்டி கருத்துக்களைத் தெரிவித்தனர். பௌத்த தத்துவமும், இஸ்லாம் சமயமும் அன்பையும், கருணையையும், மனிதபிமானத்தையும் போதிப்பதையும் அவர்கள் வலியுறுதித்தினர்.

இரண்டாம் நாள் நிகழ்வுகளின் இறுதியில் இரு சமயங்களுக்கிடையில் நல்லுறவை பேணுவதை நோக்கமாகக் கொண்டு கூட்டறிக்கையொன்று சமர்ப்பிக்கப்பட்டதோடு, எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய செயல் திட்டமொன்றும் முன்வைக்கப்பட்டது. இந்த கூட்டறிக்கையும், செயல் திட்டமும் கலந்துரையாடலின் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

வியாழக்கிழமை மாநாட்டின் இறுதி நிகழ்வின் போது கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு வெளியிடப்படுவதோடு, முடிவுரையும் இடம்பெறவுள்ளது.


டாக்டர் ஏ.ஆர்.ஏ.ஹபீஸ்
ஊடகச் செயலாளர்

1 comment:

Powered by Blogger.