Header Ads



''எமது சிங்கள நாட்டில் நாம் வியாபாரம் செய்ய, யாருக்கும் பணம் செலுத்த வேண்டியதில்லை''


(எம்.ஏ.றமீஸ்)

பாதையோரம் அன்னாசி விற்பனை செய்து கொண்டிருந்த சிங்கள இளைஞரிடம் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்கள் பணம் வசூலிக்கச் சென்றபோது எமது சிங்கள நாட்டில் நாம் வியாபாரம் செய்ய யாருக்கும் பணம் செலுத்த வேண்டியதில்லை என பணம் வசூலிக்கச் சென்ற ஊழியர் ஒருவரைத் தாக்கிய சம்பவம் இன்று(15)  மட்டக்களப்பு நகரில் இடம்பெற்றது.

மட்டக்களப்பு நகரில் பாதையோரம் சில வியாபாரிகள் பொருட்களை விற்பனை செய்து வருகின்றனர்.இதற்கமைவாக மட்டக்களப்பு மாநகர சபையின் சட்ட திட்டங்களுக்கேற்ப  மாநகர சபை உத்தியோகத்தர்களும் ஊழியர்களும் வியாபாரிகளிடம் பணம் வசூலித்து பற்றுச் சீட்டு வழங்கி வருவது வழக்கமாகும். இந்நடைமுறையின் பிரகாரம் நேற்றைய தினம் அன்னாசிப் பழங்களை விற்பனை செய்து கொண்டிருந்த சிங்கள இளைஞர் ஒருவரிடம் வருமானப் பிரிவு ஊழியர் ஒருவர் பணம் வசூலிக்கவென அவ் இளைஞரிடம் கேட்டபோது நான் சிங்கள இனத்தைச் சேர்ந்தவன். இது எனது நாடு. எங்களது நாட்டின் எப்பாகத்திலும் நான் வியாபாரம் செய்ய முடியும். இங்கு நான் யாருக்கும் பணம் செலுத்த வேண்டிய தேவையில்லை என தர்க்கித்து பணம் வசூலிக்கச் சென்ற இளைஞரை சிங்கள வியாபார இளைஞர் கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளார்.

இதனால் அப்பிரதேசத்தில் சொற்ப நேரம் பதற்ற நிலை தோன்றியது. சிறிது நெரத்தில் சம்பவ இடத்திற்கு மட்டக்களப்பு பொலிஸார் சென்று நிலைமையை சுமூகமாக்கினர். பின்னர் வியாபாரத்தில் ஈடுபட்ட இளைஞரை மட்டக்களப்பு மாநகர சுகாதாரக் கழிவு அகற்றும் உழவு இயந்திரத்தில் ஏற்றி பொலிஸில் முறைப்பாட்டைப் பதிவு செய்யுமாறு பணித்தனர்.

இச்சம்பவம் பற்றி மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1 comment:

  1. இப்படியெல்லாம் பேசப்போய்த்தானே இந்தச் சிறிய நாட்டுக்கே அவசியமில்லாத உள்நாட்டுப்போரும் பிரிவினை எண்ணங்களும் நம்மை பல தசாப்தங்களாய் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கின்றன.

    சிங்கள, தமிழ் நாடு அல்ல பிரச்சினை இதுவே ஆங்கில நாடாக இருந்தாலும் பிரதேச நிர்வாகப்பிரிவுக்குரிய கட்டணங்களைச் செலுத்தியே ஆகவேண்டும் என்பதை அந்த இளைஞனுக்கு சொல்லிக்கொடுத்து எச்சரித்து கடுமையாக அனுப்ப வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.