Header Ads



மைத்திரி அரசாங்கத்திற்குள், முரண்பாடுகள் வெடித்தன

-gtn-

முன்னைய அரசாங்கத்தில் இடம்பெற்ற பாரிய ஊழல்கள் தொடர்பான விசாரணைகள் காரணமாக மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் தோன்றியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

குறிப்பாக காலி துறை முகத்தில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விசாரணை அரச தரப்பிற்குள் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது.

ஆயுதங்கள் மீட்கப்பட்டமை குறித்த விசாரணைகளை நிறுத்துவதற்காக முக்கிய அமைச்சர் ஓருவரிற்கு பல கோடி ரூபாய் இலஞ்சப்பணத்தை வழங்க சிலர் முயன்றதாக அமைச்சர் ராஜித சேனரத்தின கடந்த வாரம் குற்றம்சாட்டியிருந்தன் பின்னரே இந்த விரிசல் உருவாகியுள்ளது.

இதேவேளை குறித்த விசாரணைகளை நிறுத்துவதற்காக தனக்கு இலஞ்சம் வழங்க சிலர் முயன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளதை  சுட்டிக்காட்டிய அமைச்சர் ஜோன் அமரதுங்க பொலிஸாரே  விசாரணைகளை மெதுவாக முன்னெடுப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

காலிகடலில் மீட்கப்பட்ட ஆயுதங்கள் தொடர்பான விசாரணைகள் முடிவுறும் தருவாயிலுள்ளதாக தெரிவித்த பொலிஸ்- மா- அதிபர் குறிப்பிட்ட ஆயுதங்களை வைத்திருந்த நிறுவனத்தின் உரிமையாளரின் கடவுச்சீட்டுகளை மீள ஓப்படைக்க தாங்கள் இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுவதையும் மறுத்துள்ளார்.

காலி கடற்பரப்பில் மீட்கப்பட்ட ஆயுதங்களை வைத்திருந்த அவன்ட் கார்டே நிறுவனத்தின் தலைவர் ஏற்கனே வெளிநாடு சென்று திரும்பியுள்ளதாகவும், மீண்டும் வெளிநாட்டிற்கு செல்வதற்கு அவர் விடுத்த வேண்டுகோளை பொலிஸார் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் தெரியவருகின்றது.

கடந்த வாரம் இடம்பெற்ற தேசியநிறைவேற்று பேரவையின் கூட்டத்தில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இலஞ்சம் வாங்கியதாக குற்றம்சாட்டியுள்ள ஜே.வி.பி தலைவர் அனுரகுமார திசநயக்க அமைச்சருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளதுடன் தான் அந்த பேரவையிலிருந்து விலகப்போவதாகவும் தெரிவித்துள்ளார். அமைச்சர் விஜயதாச ராஜபக்ச இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

இதன் பின்னர் இந்த சர்ச்சைகளுக்கு தீர்வை காண்பதற்காக பிரதமர் ரணில்விக்கிரமசிங்க,நடைபெற்றுக்கொண்டிருக்கும் விசாரணைகள் தொடர்பாக அறிக்கைகளை வெளியிடுவதை தவிர்க்குமாறு தனது அமைச்சர்களை கோரியுள்ளார்.

எனினும் விசாரணைகள் தாமதமாவது,மூடி மறைக்கப்படுவது,உட்பட பலகுற்றச்சாட்டுகள் வெளியாவதன் காரணமாக ஆளும் கூட்டணிக்குள் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இந்த கருத்து வேறுபாடுகள் தீவிரமடைவதற்கு முன்னர் தேர்தலை நடத்துவதற்கு பிரதமர் விருப்பம்கொண்டுள்ளார்.

மேலும் படைத்துறை நியமனங்கள் தொடர்பாக பிரதமருக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் கருத்துவேறுபாடு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.