Header Ads



முஸ்லிம் காங்கிரஸுக்கு 72 மணித்தியாலங்கள் காலக்கெடு - சுதந்திர கூட்டமைப்பின் சிங்கள உறுப்பினர் எச்சரிக்கை

கிழக்கு மாகாண சபைக்கு அமைச்சர்களை நியமிக்காமல் இருப்பதன் ஊடாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு தீர்வு காணப்படாத பட்சத்தில் தீர்க்கமான அரசியல் தீர்மானமொன்றை எடுக்கவுள்ளாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினைக்கு புதிய முதலமைச்சரும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வை வழங்காத பட்சத்தில் எதிர்வரும் 72 மணித்தியாலங்களில் மாற்று நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மாகாண சபையின் சுதந்திர கூட்டமைப்பு உறுபபினர் டபிளியு.டி.வீரசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய முதலமைச்சர் நியமிக்கப்பட்டு 13 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், மாகாண சபையின் அமைச்சர் குழாம் இதுவரை பெயரிடப்படவில்லை.

இதன்காரணமாக கிழக்கு மாகாணத்தின் பொதுமக்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலமைச்சர் நியமிக்கப்பட்டமை தொடர்பாக எந்தவித பிரச்சினையும் இல்லாதபோதிலும், அமைச்சர்கள் நியமிக்கப்படாமையால் நெருக்கடி தோன்றியுள்ளது.

இதன்காரணமாக அரசாங்கத்தினால் கிழக்கு மாகாண சபைக்கான ஒதுக்கப்பட்ட நிதியை செயற்றிட்டங்களில் ஈடுபடுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அதிகாரிகள் தமது பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சர்களின் அனுமதியை பெறமுடியாத நிலையில் உள்ளனர்.

மாகாண கல்வியமைச்சுக்கான அமைச்சர் ஒருவர் இல்லாத நிலையில், ஒருசில அரசியல் தலைவர்கள் தமது விருப்பத்திற்கிணக்க ஆசிரியர் இடமாற்றங்கள் உள்ளிட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதாகவும் மாகாண சபையின் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் டபிளியு.டி.வீரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் பின்னர் கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் பதவி கைமாற்றப்பட்டதுடன், சிறிலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய நஜீட் ஏ மஜீட்க்கு பதிலாக, முஸ்லிம் காங்கிரசின் நஷீர் அகமட் தெரிவு செய்யப்பட்டார்.

No comments

Powered by Blogger.