Header Ads



பாராளுமன்றத்தில் நடந்த அமளி துமளியின் பின்னணி இதுதான்..!

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டார நாயக்கவின் பதவி மற்றும் மொஹான் பீரிஸ் விவகாரம் தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிக்கும், ஆளும் தரப்புக்கும் இடையில் ஏற்பட்ட சர்ச்சையையடுத்து பாராளுமன்றம் நேற்று 4.20 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த விளக்க உரைக்கு எதிர்க்கட்சியினர் உடனடியாக இன்றே (நேற்று) விவாதமொன்றைக் கோரியதையடுத்து ஏற்கனவே இரண்டு தடவைகள் பாராளுமன்றம் இடைநடுவில் சபாநாயகரால் ஒத்திவைக்கப்பட்டது.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க தொடர்பாகவும், மொஹான் பீரிஸ் தேர்தல் தினமன்று இரவு ஜனாதிபதி வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் இருந்தார் என்பது தொடர்பாகவும் பிரதமர் நேற்று தனது உரையில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து குற்றப் பிரேரணை மூலம் பதவி நீக்கப்பட்டுவிட்டதாக ஷிராணி பண்டாரநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார் என்றும், மொஹான் பீரிஸ் தான் ஒருபோதும் பதவி விலகுவதாக அறிவிக்கவில்லையென்றும் கூறி தமது தரப்புக் கருத்துக்களைத் தெரிவிக்கவும் சந்தர்ப்பம் வழங்க விவாதமொன்றைத் தருமாறும் எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.

பிரதமரின் உரையையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விவாதமொன்றை தரலாமென்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

நேற்று பிற்பகல் 12.30க்கு கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆளும் தரப்பிலிருந்து எவரும் வராததால் கட்சித் தலைவர்கள் கூட்டம் நடைபெறவில்லை எனச் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் நிமல் சிறிபால டி சில்வா, சபாநாயகர் அவர்களை சிறிதுநேரம் சபையை ஒத்திவைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தை நடத்தலாமே எனக் கேட்டுக்கொண்டார்.

சபாநாயகரும் 2.15 மணிக்கு சபையை 20 நிமிடநேரம் ஒத்திவைத்தார். மீண்டும் பாராளுமன்றம் பிற்பகல் 3 மணிக்கு கூடியது. இதன்போது எழுந்த எதிர்க்கட்சித் தலைவர்கள் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் விவாதம் நடத்துவதற்காக பிந்திய நாள் ஒன்றே தரப்பட்டது. எனினும், இன்றே இந்த விவாதம் நடத்தப்பட வேண்டும் என்றார்.

இதேபோன்று விமல் வீரவன்ச எம்பியும் பிரதமரின் உரைதான் நாளை எல்லோருக்கும் தெரியவரும், இது பக்கச்சார்பானது. எதிர்த்தரப்பிலிருந்தும் அதற்கு மாற்றுக்கருத்து தெரிவிக்க வேண்டும். அதுவே நியாயமானது. எனவே விவாதம் ஒன்று இன்றே தரப்பட வேண்டும் என்றார். இதே கருத்துப்பட எம்பிக்களான ஜோன் செனவிரட்ன, வாசுதேவநாணயக்கார, திஸ்ஸ வித்தாரண, சுசில் பிரேமஜயந்த, தினேஷ் குணவர்த்தன ஆகியோரும் பேசினர்.

எனினும், பிரதமர் ரணில் விக்ரமசிங்க விவாதத்தை உடனடியாகத் தரமுடியாது எனத் தெரிவித்ததுடன், எதிர்வரும் 2ஆம் 3ஆம் திகதிகளில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பாராளுமன்றத்துக்கு முன்பாக இராணுவ ஒத்திகைகள் நடைபெறும் என்பதால் வீதிகள் மூடப்பட்டிருக்கும், ஏற்கனவே அவர்கள் கேட்டுக்கொண்ட தற்கிணங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நான்காம் திகதி சுதந்திர தினம். அன்றைய நாளிலும் விவாதத்தை நடத்த முடியாது. எனவே 2,3,4 திகதிகளில் விவாதம் நடத்துவதற்கு சாத்தியமில்லை. எனவே 5ஆம் திகதியே விவாதத்தை நடத்தலாம். அன்றையதினத்தை விவாதத்துக்காக ஒதுக்க நாம் தயார் என்றார்.

அப்படியானால் இன்றே எமக்கு விவாதமொன்றைத் தரவேண்டும். இல்லையேல் பிரதமரின் உரைக்கு மாற்றுக்கருத்தொன்றைத் தெரிவிப்பதற்கு ஒருவருக்கேனும் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும் என ஜோன் செனவிரட்ன எம்பி தெரிவித்தார்.

செவிமடுத்துக்கொண்டிருந்த சபாநாயகர் சமல் ராஜபக்ஷ, விவாதம் ஒன்று கோருவதானால் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட வேண்டுமே என்று தெரிவித்தார்.

இதற்குப் பதிலளித்த சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்ல, நீங்கள் ஆளும் தரப்பில் இருக்கும்போது என்றாவது அதேதினம் விவாதம் தந்திருக்கிaர்களா எனக் கேள்விய¦ழுப்பினார். இதேவேளை, எழுந்த தினேஷ் குணவர்த்தன எம்.பி., பிரதமர் தனது உரையில் மொஹான் பீரிஸ் தூதுவர் பதவி தந்தால் விலகிக் கொள்கிறேன் என்று கூறியதாகத் தெரிவித்தார். ஆனால், மொஹான் பீரிஸ் அப்படி கூறவில்லையென்பதை நான் இந்த சபையில் தெரிவிக்கிறேன் என்றார்.

அதனைத் தொடர்ந்து 2ஆம் திகதி விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்பிக்கள் எழுந்து நின்று கூச்சலிட்டனர். தினேஷ் குணவர்த்தனவும் உரத்த குரலில் 2ஆம் திகதியை விவாதம் நடத்த இடமளிக்க வேண்டும். இதற்கு சபையில் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்ய வேண்டும். வாக்கெடுப்பு நடத்துங்கள், வாக்கெடுப்பு நடத்துங்கள் எனக் கூச்சலிட்டார்.

இதன்போது மீண்டும் சபாநாயகர் 3.40 மணிக்கு 10 நிமிடங்களுக்கு சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதன்போது ஆளும்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாமண்டபத்தின் நடுவே நின்று கதைத்துக்கொண்டிருந்தனர்.

சுமார் 15 நிமிடங்களின் பின்னர் மீண்டும் பாராளுமன்றம் கூடியதுடன். பாராளுமன்றம் கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டிருக்கும் அடுத்த தினத்துக்கு பாராளுமன்றத்தை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

2 comments:

  1. அடடா!

    எதிர்க்கட்சி ஆசனங்களுக்கு தூக்கி வீசப்பட்டதும் ஜனநாயக சிந்தனையும் தார்மீக உணர்வு பொங்கியெழும் விமல் வீரவங்ச, தினேஷ் குணவர்த்தன போன்றவர்களே உங்களுக்கு எனது வாழ்த்துக்கள்..!

    அதேவேளை, ஆளும் தரப்பில் பெரியவரின் செல்லப்பிராணிகளாக நீங்கள் இருந்தவேளையிலே தங்களுக்கு இந்த உணர்வுகள் வராமைக்கு காரணங்கள் என்னவென்று மக்களாகிய நாங்கள் அறியலாமா?

    பிரதமரின் கூற்றுகள் மட்டுமே மறுநாள் ஊடகங்கள் மூலம் மக்களுக்குத் தெரியவரும் என்பதனால் தங்களுடைய பதிலடிகளும் பாராளுமன்றத்தில் உரைக்கப்பட வேண்டும் எனும் உங்கள் கோரிக்கையெல்லாம் சரியானதுதான்.

    ஆனால், நீங்கள் பிரதமரின் கூற்றுகளுக்கு பதில் தருவதற்கும் காப்பாற்றுவதற்கும் தயாராக இருப்பது யாருக்காக?

    அவர்கள் ஒன்றும் இந்த நாட்டை உய்வித்த உத்தம புத்திரர்களல்லவே.

    ஒருவர் தனது சர்வாதிகாரப் போக்கினாலும் ஆடம்பர வேட்கையினாலும் நமது இலங்கைத் தீவின் நீதியை வளைத்து இனங்களிடையேயான நல்லிணக்கத்தையும் பொருளாதாரத்தையும் சர்வதேச நல்லுறவையும் சிதைத்தவர்.

    மற்றையவர், தனக்கு தலைமை நீதிபதி எனும் உயர் பதவி வழங்கிய ஒரே காரணத்துக்காக முன்னையவரின் தேவைக்கேற்ப நீதியை வளைத்து வளைத்து தீர்ப்புகளை எழுதிக்கொண்டிருந்தவர்.

    இதனை நீங்கள் அறிந்திருந்தும் இந்த அநியாயக்காரர்களுக்காக இன்னும் வக்காலத்து வாங்குவதற்கு என்ன காரணம்?

    உங்களுடைய மக்கள் விரோத எண்ணங்களைத்தவிர வேறு என்ன காரணமாக இருக்க முடியும்?

    ReplyDelete

Powered by Blogger.