Header Ads



பாராளுமன்றத்தில் ரணில் விக்கிரமசிங்க, வழங்கிய அருமையான விளக்கம்..!

பிரதம நீதியரசராக தன்னை ஏப்ரல் மாதம்வரை சேவைசெய்ய சந்தர்ப்பம் வழங்குமாறும், அரசுக்கு ஆதரவு வழங்குவதாகவும், அரசுக்கு எதிரான வழக்குகளில் தான் அமரப்போவதில்லையென்றும் தனக்கு ஜெனீவா போன்றதொரு நாட்டில் தூதுவர் பதவியொன்றை பெற்றுக்கொடுத்தால் தான் பதவியைவிட்டு விலகிச் செல்வதாகவும் மொஹான் பீரிஸ் தன்னிடம் தெரிவித்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்காவை அவரது பதவியிலிருந்து விலக்குவதற்காக பாராளுமன்றத்தினுள் முன்னெடுத்த குற்றப் பிரேரணை செயற்பாடு முழுவதும் குரோத மனப்பான்மையுடன் செய்யப்பட்டதனால் அவரை பதவியிலிருந்து நீக்குவதற்கோ அவருக்கு எதிரான குற்றப்பிரேரணை எந்த வகையிலும் செல்லுபடியானது அல்ல என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் பிரதம நீதியரசரின் விவகாரம் தொடர்பாக சபையில் ஏற்பட்ட சர்ச்சைக்கு நாளை பதிலளிப்பதாக (நேற்றுமுன்தினம்) தெரிவித்திருந்தார். இதன்படி நேற்று சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் பாராளுமன்றம் கூடியபோது பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் பதவி மற்றும் மொஹான் பீரிஸ் வீட்டின் மீதான அச்சுறுத்தல், அவரது பதவி என்பவை தொடர்பாக விளக்க அறிக்கையொன்றை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துப் பேசினார்.

பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவின் குற்றப்பிரேரணை தொடர்பாக பேசிய பிரதமர், பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவை விலக்கியது சட்டவிரோதமானது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான்தோன்றித்தனமாக செயற்பட்டுள்ளார்.

பிரதமர் தனது உரையில் மேலும் தெரிவிக்கையில், உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவரை நீக்குவதற்கு அரசியலமைப்பின் 107 (2) இன் சரத்தில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற நீதியரசர் ஒருவரை நீக்குவதற்கு பாராளுமன்றத்தில் குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டு அது பெரும்பான்மை உறுப்பினர்களின் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பதன் ஊடாக ஜனாதிபதியினால் எடுக்கப்படுகின்ற நடவடிக்கைக்கு அமைவாக மட்டுமே நீக்க முடியும். வேறு எந்த வகையிலும் நீக்கிவிட முடியாது.

இதே சரத்தில் மேலும் குறிப்பிடப்படும்போது இவ்வாறான பிரேரணை முன்வைப்பது தொடர்பாக நிறைவேற்றம் தொடர்பில் பாராளுமன்ற எம்பிக்களில் மூன்றில் இரண்டு பிரிவினர் கையெழுத்திட்டிருந்தால் அல்லது குற்றச்சாட்டுகளில் ஏதேனும் முறைப்பாடுகளோ அல்லது குறைபாடுகளோ தொடர்பாக முழுமையான விபரங்கள் அதில் குறிப்பிடப்பட்டிருந்தால் இவ்வாறான யோசனையொன்றை பொறுப்பேற்கவோ அல்லது பாராளுமன்ற நிகழ்ச்சிநிரலில் சேர்க்கவோ சபாநாயகருக்கு முடியாது.

பிரதம நீதியரசராக பதவிவகித்த ஷிராணி பண்டாரநாயக்கவை வெளியேற்றுவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தின் 117 எம்பிக்கள் கையெழுத்திடப்பட்டு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. இந்தப் பிரேரணை 2012 நவம்பர் 6ஆம் திகதி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டதோடு, குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு தெரிவுக்குழுவொன்று அமைக்கப்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. 2012 நவம்பர் 14ஆம் திகதி தெரிவுக்குழுவொன்றை அமைக்க வேண்டுமென சபாநாயகரால் தெரிவிக்கப்பட்டது.

நிலையியல் கட்டளைச்சட்டம் 78 (அ) வின் கீழ் தெரிவுக்குழு அமைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகார ஆரம்பம் சட்டரீதி அற்றது என்பதை நான் ஆரம்பத்திலிருந்தே கூறி வந்துள்ளேன். ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் மூன்று நிரூபிக்கப்பட்டிருப்பதாக தெரிவுக்குழு அறிவித்தது. மேலும் இரண்டு குற்றச்சாட்டுக்களில் விடுவிக்கப்பட்டு குற்றம் அற்றவராக அறிவிக்கப்பட்டார். ஏனைய 9 குற்றச்சாட்டுக்கள் கவனத்தில் எடுக்கப்படவில்லை என தெரிவுக்குழு தெரிவித்தது.

2012ஆம் டிசம்பர் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் அந்த அறிக்கையின் உள்ளடக்கம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதமொன்றைக் கோரியிருந்தார். இதற்கமைய 2012 டிசம்பர் 8ஆம் திகதியின் பின்னர் விவாதத்துக்கு இடமளிக்க முடியும் என சபாநாயகர் அறிவித்தார். நிலையியல் கட்டளைச் சட்டம் 78 ஏ (6) இனால் தெரிவுக்குழுவினால் அறியப்பட்ட விடயங்கள் மற்றும் சாட்சியங்கள் அறிவிக்கப்பட வேண்டும் என்பதாகும். ஆனால் அவ்வாறானதொரு அறிக்கையெதுவும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவில்லை. அறியப்பட்ட விடயங்கள் முன்வைக்கப்படாது வெறுமனே கண்டறியப்பட்ட விடயங்கள் மட்டுமே முன்வைக்கப்பட்டன. 78 ஏ (6) நிலையியல் கட்டளைச் சட்டம் முழுமையாக மீறப்பட்டுள்ளது. இவ்விடயம் மீண்டும் ஜனவரி 10ஆம் திகதி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டதோடு 2013 ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தினங்களில் நிகழ்ச்சி நிரலில் அவதானிக்க முடிந்தது. இந்த நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்ட பிரேரணை 2012ஆம் நம்பர் 12ஆம் திகதி பாராளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்ட 20தாவது பிரேரணையாகும்.

இதில் 107 (03) 107 (02)ற்கு அமைய பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனையே முன்வைக்கப்பட்டது. இச்சந்தர்ப்பத்தில் இவ்விடயம் தொடர்பாக சரியான வழிமுறைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பது முன்வைக்கப்பட்டதோடு, நிலையியல் கட்டளை 78 ஏ திருத்தம் செய்து விவாதம் நடத்த முடியும் என தெளிவுபடுத்தப்பட்டது. எனினும் சபாநாயகரூடாக ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட யோசனை மீண்டும் தெரிவுக்குழுவொன்றை அமைப்பதற்கான பிரேரணை என்பதை அன்றே பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளபோதும் அது தெளிவுபடுத்தப்படவில்லை. ஜனாதிபதியிடம் அனுப்பப்பட்ட விடயமும் ஜனாதிபதியின் ஆலோசகர்கள் அதனை அறிவுறுத்தியிருக்கவும் வேண்டும். அவ்வாறு செய்யப்படவுமில்லை. எனவே அவரது பதவிநீக்கம் செல்லுபடியற்றது என்றே சட்டத்தரணிகள் சங்கத்தில் 98 வீதமானவர்கள் தெரிவிக்கின்றனர்.

தேர்தல் தினத்துக்கு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு அலரிமாளிகைக்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். அங்கு செல்லும்போது ஜனாதிபதி வேட்பாளருடன் பலர் அமர்ந்திருந்தனர். அவர்களில் ஒருவராக மொஹான் பீரிஸ¥ம் அமர்ந்திருந்தார். நீங்கள் இங்கே என்ன செய்கிaர்கள் என அவரிடம் கேட்டபோது சில ஆலோசனைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக வந்தேன் எனக் கூறியவாறு அறையிலிருந்து வெளியேறினார். ஆனால் ஜனாதிபதியின் அழைப்பையேற்று அதிகாலை 2.30 மணிக்கு சட்டமா அதிபர் அலரிமாளிகைக்கு வரும்போதே மொஹான் பீரிஸ் அங்கு இருந்ததாக நான் அறிந்துகொண்டேன்.

மொஹான் பீரிஸ் எனக்குப் பின்னர் தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு சிலர் என்னை இந்த பதவியிலிருந்து நீக்குவதற்கு முயற்சிப்பதாகவும், சட்டமா அதிபராக நான் அரசுக்கு முழுமையான ஆதரவைப் பெற்றுத்தருமாறும் பேச்சுவார்த்தைக்கு சந்தர்ப்பமொன்றைப் பெற்றுத்தருமாறும் கோரினார். ஜனாதிபதியுடனும் பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாகவும் தெரிவித்தார். இதன்படி 2015 ஜனவரி 12ஆம் திகதி இரவு 8 மணிக்கு ஜனாதிபதியின் விஜயராம இல்லத்துக்கு வந்தார். நான் திலக் மாரப்பனவையும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்தேன். அன்றைய தினம் மொஹான் பீரிஸ் தனது மனைவியுடனும் இரண்டு வைத்தியர்களுடனும் வந்தார். அவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தினார். நாங்கள் பேச்சுவார்த்தை ஆரம்பித்தோம். இந்தப் பேச்சுவார்த்தைக்கு இடமளித்து ஏனையோர் வெளியேறுவார்கள் என எதிர்பார்த்தால் அவர்கள் வெளியேறவில்லை. எங்களுடனேயே அமர்ந்திருந்தனர்.

நீதித்துறை நிறைவேற்று அதிகாரத்துடன் இணைந்து செயற்படும் என்றும், நிறைவேற்று அதிகாரத்தின் ஒத்துழைப்பு நீதித்துறைக்கு கிடைப்பது நல்லது என்றும் தெரிவித்தார். சட்டத்துறையிலுள்ள தாமதங்களை நீக்குவதற்கு தான் வெகுவாக சேவைசெய்வதாகத் தெரிவித்தார். அதேபோன்று சட்டக்கல்லூரியின் மறுசீரமைப்புக்கு தான் மிகவும் பாடுபட்டதாகவும், இதனால் பல அழுத்தங்களுக்கும் தான் உள்ளானதாக தனக்கு எதிர்ப்புகளும் இருப்பதாகத் தெரிவித்தார்.

2015 ஜனவரி 19ஆம் திகதி அலரிமாளிகையில் என்னை சந்திக்குமாறு மொஹான் பீரிசுக்குத் தெரிவித்தேன். என்னுடன் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும், திலக் மாரப்பனவும் கலந்துகொண்டனர். மொஹான் பீரிஸ் தனது மனைவியுடனும் இரண்டு டொக்டர்களுடனும் அலரிமாளிகைக்கு வந்ததாக அறிந்துகொண்டேன். என்றாலும் அவரை மட்டும் பேச்சுவார்த்தைக்கு வருமாறு தெரிவித்தேன். இந்த சந்திப்பின் போது ஏப்ரல் மாதம் வரை சேவை செய்வதற்கு தனக்கு சந்தர்ப்பம் வழங்குமாறும், அரசுக்கு எதிராக எந்தவிதமான தீர்ப்பையும் தான் வழங்க மாட்டேன் என்றும் தெரிவித்தார். சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக நான் அவரிடம் தெளிவுபடுத்தினேன். அப்போது தனக்கு ஜெனீவா போன்ற நாடொன்றில் தூதுவராக அனுப்புமாறும் தான் இந்தப் பதவியைவிட்டு விலகுவதாகவும் தெரிவித்தார்.

வெளிநாட்டு அமைச்சரிடம் வினவி வெற்றிடம் நிலவும் நாடுகள் தொடர்பாக விபரங்களை அறிந்துகொள்ளவேண்டி யிருப்பதாக நான் தெரிவித்தேன். இவ்வாறான வெற்றிடம் இருக்கும்போது நான் அறிவிப்பதாகக் கூறினேன். அதற்கும் அவர் இணக்கம் தெரிவித்தார். ஆனால் ஜனவரி 21ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளர் எனக்கும் ஜனாதிபதிக்கும் மொஹான் பீரிஸ் தூதுவர் பதவியை தான் கேட்கவில்லையெனக் கூறியதாகத் தெரிவித்தார்.

அன்றையதினமே நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் ஐந்து மணியளவில் ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு மொஹான் பீரிசுக்கு அழைப்பு விடுத்தேன். எனினும் அவர் அமைச்சரவை முடிவடைந்து வெளியே வரும்போது அவர் சென்றுவிட்டதாக அறிந்தேன். மறுநாள் காலை 8.30க்கு ஜனாதிபதி செயலகத்துக்கு வருமாறு ஜனாதிபதியின் செயலாளர் மொஹான் பீரிசுக்கு அறிவித்தார். எனினும் எந்தவித முன்னறிவித்தலும் இல்லாமல் மொஹான் பீரிஸ் தனது மனைவியுடன் ஜனாதிபதியின் வீட்டுக்குச் சென்றுள்ளார். நாளை காலை உங்களை சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கியிருப்பதாக ஜனாதிபதி அவருக்குத் தெரிவித்தார். ஜனாதிபதியும், நானும், நீதியமைச்சரும் காலை 8 மணிக்கு ஜனாதிபதி செயலகத்துக்குச் சென்றோம். ஆனால் மொஹான் பீரிஸ் வரவில்லை. காலை 9.15 மணிவரை காத்திருந்தோம் அவர் வரவில்லை.

ஜனவரி 26ஆம் திகதி சட்டத்தரணிகள் சங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் மொஹான் பீரிஸின் நியமனம் சட்டரீதியானது அல்ல எனத் தெரிவித்ததுடன் அவர் உடனடியாக விலக வேண்டும் என்றும் இந்த நியமனத்தை ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். சட்டரீதியான விதிமுறைகளைப் பின்பற்றாமல் விலக்கப்பட்டதால் உண்மையான பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கதான் என்பதை அவர்கள் வலியுறுத்தினர். சட்டத்தரணிகள் சங்கத்தின் நிலைப்பாடு அதுவே என அவர்கள் தெரிவித்ததுடன் மொஹான் பீரிஸின் நியமனம் செல்லுபடியானது அல்ல என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர். சட்டமாஅதிபர் மாநாட்டில் இரவு விருந்துபசாரத்தின் போது மொஹான் பீரிஸ¥க்கு விடுக்கப்பட்ட அழைப்பு நீக்கப்பட்டதையும் நான் அறிந்தேன். சட்டத்தரணிகள் சங்கம் பிரதம நீதியரசர் தொடர்பாக தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியது. 2015 ஜனவரி 9ஆம் திகதி அதிகாலை மொஹான் பீரிஸ் அலரிமாளிகையில் இருந்தது தொடர்பாக சட்டத்தரணிகள் சங்கம் கவனத்தில் கொண்டுள்ளதுடன், இந்த விடயம் தொடர்பாக என்னிடமும் கேட்டுத்தெரிந்துகொண்டனர்.

வாக்கு எண்ணும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது ஜனாதிபதி வேட்பாளர் ஒருவருடன் பிரதம நீதியரசர் இருந்தமை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. வெளிவிவகார அமைச்சர் இது தொடர்பாக செய்துள்ள முறைப்பாடு பற்றி குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. மொஹான் பீரிஸின் பெயர் சில நிறுவனங்களுடன் தொடர்புபட்டதாக உள்ளது. ரத்னா லங்கா தனியார் பாதுகாப்பு நிறுவனம், லங்கா லொஜிஸ்டிக் நிறுவனம் போன்ற நிறுவனங்களில் பணிப்பாளராக சேவை செய்ததுடன், அவர் இன்னமும் அவற்றின் பங்குதாரராக இருக்கின்றார். இந்த விடயம் தேசிய நிறைவேற்று சபையின் ஊழல் ஒழிப்புக் குழுவிலும் இந்த விடயம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரச சட்டத்தரணிகள் மற்றும் ஏனைய சட்டத்தரணிகள் நீதிமன்றத்துக்கும் இடையே ஒரு மோதல் ஏற்பட்டுள்ளது மட்டுமல்ல அனைத்து கட்டமைப்புகளும் ஒரு சிக்கலுக்குள்ளாகியுள்ளது. அவரது சட்டம் மற்றும் யாப்பு ரீதியாக விரோத நியமனத்தினால் ஆரம்பத்திலிருந்து செல்லுபடியற்றதாக மட்டுமல்ல பிரதம நீதியரசர் என்ற பெயருக்கே அவருடைய செயலினால் ஒரு களங்கம் ஏற்பட்டுள்ளது.

எனவே, முன்னாள் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட பிரதம நீதியரசரினுடைய நியமனம் செல்லுபடியற்றது என்பதை மொஹான் பீரிசுக்கு அறிவிப்பதே சரியான நடைமுறை என்று நான் நினைக்கின்றேன். தேசிய நிறைவேற்று சபை மற்றும் சட்டமா அதிபரிடம் வினவியதையடுத்து ஜனாதிபதி இந்த பின்னணியிலேயே தீர்மானங்களை எடுத்தார். அத்துடன் உண்மையான பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு ஜனாதிபதி சட்டரீதியான நீதியரசர் என்பதை அறிவித்ததுடன் மீண்டும் கடமையைப் பெறுப்பேற்குமாறு தெரிவித்தார்.

சட்டத்தரணிகள் சங்கமும் கடந்த 2 வருட காலமாக இந்த நிலைப்பாட்டிலேயே இருந்தது. மொஹான் பீரிசை சட்டரீதியான பிரதமநீதியரசராக ஏற்றுக்கொள்ள அவர்கள் நிராகரித்தனர் என்பதை நான் இங்கு நினைவுகூற விரும்புகிறேன்.

மீண்டும் கடமைப் பொறுப்பேற்ற பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்க 2015 ஜனவரி 29ஆம் திகதியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

உச்சநீதிமன்றத்தின் சம்பிரதாய உத்தியோகபூர்வ வைபவத்தில் அரசசட்டத்தரணிகள் ஏனைய சட்டத்தரணிகள் உட்பட சட்டத்துறையுடன் தொடர்புடைய அனைவரும் அவரை அமோகமாக வரவேற்றதுடன், அவரை மகிழ்ச்சியுடன் அனுப்பியும் வைத்தனர் என்றார். சட்டத்தரணிகள் சங்கத்தின் 98 வீதமானோர் மொஹான் பீரிஸ் பிரதம நீதியரசர் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். நீதித்துறையில் ஏற்பட்டுள்ள மோதல் முரண்பாடு இதனைத் தீர்ப்பதற்கு என்ன வழிவகைகளை எடுக்கலாம் என்பதையும் சட்டத்தரணிகள் சங்கம் ஆலோசனை வழங்கியிருந்தது.

மொஹான் பீரிஸை விலக்குவதற்கு நடவடிக்கை எடுப்பது ஒருபுறம் இருக்க ஷிராணி பண்டாரநாயக்காவை பதவி விலக்கியது சட்டரீதியாக சரியானதா என்பது பற்றி ஆராயுமாறு தெரிவித்தனர். இதனைடிப்படையிலேயே குற்றப்பிரேரணை கொண்டுவந்து அவரை விலக்கிய நடைமுறை தொடர்பாக ஆராயப்பட்டது. இந்த விடயத்தில் பாராளுமன்றத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஒருபுறம் இருக்க ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட பிரேரணை ஜனாதிபதி ஆலோசர்களினால் கூட பரிசீலிக்கப்படாமல் ஷிராணி பண்டாரநாயக்க விலக்கப்பட்டார் என்றும் கூறினார்.

2 comments:

  1. இதைவிட வேறு என்ன?

    சட்டத்துறை சாராத அல்லது சட்டம் பற்றிய குறைந்தபட்ச அறிவுள்ளவர்களுக்குக் கூட புரியக்கூடியதாகவுள்ள இந்த விளக்கம் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு புரியவில்லையா அல்லது புரியாததுபோல நடிக்கின்றார்களா...?

    புரியவில்லை என்றால் அத்தகையோரது கல்வித் தரதரம் பற்றிய பெறுபேற்று ஆவணங்களின் உண்மைத் தன்மை பற்றிய விசாரணையை மேற்கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  2. forget about this modawansa and his brother in law thattayan muzammil.vasu - this is the last MP post. Dinesh- we knoe how arrogant he behaved in the parliament when he was in power.

    ReplyDelete

Powered by Blogger.