Header Ads



குற்றமிழைத்தவர்களை கட்சியில் வைத்திருக்க மாட்டோம் - நிமல் சிரிபால சில்வா

(jm.hafeez)

நாட்டு இறைமைக்கு ஆபத்து இல்லாத, ஒற்றை ஆட்சியை உறுதிப்  படுத்தும், தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத, பொதுமக்களுக்கு நன்மை தரும் அனைத்து திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம் என எதிர்கட்சித் தலைவர் நிமல் சிரிபால டி சில்வா தெரிவித்தார்

எதிர்கட்சித்  தலைவர் நிமல் சிரிபால டி சில்வா (27.1.2015) கண்டி ஸ்ரீ தலதா மாளிகைக்குச் சென்று வழிபட்டதுடன் மல்வத்தை மற்றும் அஸ்கிரிய பீடம் என்பவற்றிற்குச் சென்று நல்லாசிகளைப் பெற்றுக்கொண்டார். அதன் பின் அவர் மல்வத்தை பீடத்தில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இதனைத் தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது-

நாட்டுக்கு நல்லதை செய்யும் போது அதன் நன்மை பொதுமக்களுக்கு சென்றடையும் விதத்தில் நாம் ஒத்துழைப்பு வழங்குவது எதிர்கட்சியின் கடமையாகும். நூறுநாள் வேலைத்திட்டத்தைப் பாhக்கும் போது அது நாட்டுக்கு நல்லதாகத் தெரிகிறது. அதே நேரம் நாட்டு மக்களும் அதனை அங்கீகரித்துள்ளனர். எனவே இந்நேரத்தில் அதனை நடை முறைப் படுத்த நாம் ஒத்துழைக்கா விட்டால் எமக்கான எதிர்ப்பும் இன்னும் அதிகரிக்கும். எனவே எதிர்கட்சி என்ற வகையில் நல்லதை மேற்கொள்ள உதவும் அதே நேரம் தீயதை நாம் எதிர்க்கவேண்டியுள்ளது.

நாட்டு இறைமைக்கு ஆபத்து இல்லாத வகையிலும், ஒற்றை ஆட்சியை உறுதிப்  படுத்தும் வகையிலும் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லாத, பொதுமக்கள் நன்மை அடையும் திட்டங்களுக்கு நாம் ஒத்துழைப்பு வழங்கவேண்டியுள்ளது.

அதேபோல் நாட்டில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் உண்டு. அவை கட்டாயம் தீர்கப்பட வேண்டும். அதே நேரம் மக்கள் தீர்ப்பை நாட்டின் நிர்வாகிகள் என்ற வகையில் நாம் ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதில் எதுவித சவால்களும் இல்லை.

தனிப்பட்ட எமது பதவிகள் மற்றும் நலன்களை விடவும் நாட்டு நலனுக்கு முன் உரிமை கொடுத்தல் வேண்டும். இன்று தினம் தினம் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றனவே தவிர அவை நிறூபிக்கப்படவில்லை. எவருக்கும் வெறுமனே குற்றம் சாட்ட முடியும். இன்று ஒரு விடயத்தை குற்றம் சாட்டு கின்றனர். அதன் உண்மைத் தன்மையை அறியும்முன் மற்றொன்றை குற்றம் சாட்டு கின்றனர். ஆனால் ஏதும் அப்படி நிறூபிக்கப்பட்டால் குற்றமிழைத்தவர்களை கட்சியில் வைத்திருக்க மாட்டோம். அவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்போம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு இன்று மட்டுமல்ல. இதற்கு முன்பும் பிரச்சினைகள் வந்துள்ளன. அதற்காக கட்சியை விட்டு யாரும் தூர ஓடிப் போகவில்லை. மீண்டும் கட்சி புத்துயிர் பெற்று ஆட்சியமைத்த உதாரணங்கள் உண்டு. எனவே நாம் மனம் தலரமாட்டோம்.

நாம் அரசதரப்பில் இருந்து கொண்டும் சேவைகளைச் செய்துள்ளோம். ஆனால் அன்று எமது அதிகாரம் பரவலாக்கப்பட்டிருந்தது. இதன் காரணமக எமது சேவையும் பரவலடைந்திருந்தது. தற்போதைய ஆட்சி மாற்ற விடயங்களையும், அதனைத் தொடர்ந்து வரும் நடவடிக்கைகளையும் நாம் மிக உன்னிப்பாக அவதானித்து வருகிறோம். முன் சொன்ன பிரகாரம் அதில் நல்லதற்கு ஒத்துழைப்பு வழங்குவோம். நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது பற்றிய கருத்தும் அவ்வாறே அவதானிக்கப் படும்.  தேசிய பாதுகாப்பிற்கு சவாலாக அமையாத வகையில் அதற்கு ஆதரவு வழங்க முடியும்.

எதிர்கட்சி என்ற வகையில் நாம் எல்லாவற்றையும் எதிர்க்க வேண்டும் என்று இல்லை  என மகா சங்கத்தினரும் எமக்கு ஆலோசனை வழங்கினர். நல்லதைச் செய்யும் போது ஒத்துழையுங்கள் என்றே அவர்களும் நல்லாசி கூறினர்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூடி எமது கட்சித் தலைவர் மைந்திரிப்பால சிரிசேனா அவர்களது திட்டங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது என்று முடிவு செய்துள்ளது. எனவே அதன் நன்மைகள் காலம் தாழ்த்தாது பொது மக்களைச் சென்றடைய வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலை அடுத்து ஏற்பட்ட வன் முறைகள் தொடர்பாக ஜனாதிபதி நடவடிக்கை எடுத்த போதும் ஏனைய சில அதிகாரிகளே அவற்றை நடை முறைப்படுத்த தாமதிக்கினறனர். எனவே அவ்வாறான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட வேண்டும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறையை அகற்றுதல் மற்றும் அரசியல் அமைப்பு சீர்திருத்தங்கள் பற்றிய சட்டமூலப்  பிரதிகள் எமக்கு இன்னும் கிடைக்கவில்லை. அவை எமக்குக் கிடைத்ததும் அது பற்றி கலந்துரையாடி நல்லதை மேற்கொள்ள ஒத்துழைப்பு வழங்குவோம் என்றார்.

மல்வத்தை பீடத்தின் மகாநாயக்கத் தேரர் வண. திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரர் நல்லாசி வழங்கும் போது 'ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை அடுத்து நீங்கள் எதிர்கட்சியாக இருந்தாலும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் பாராளுமன்றத்தில் இருந்த ஒரு சக்தி மிக்க அரசின் அங்கத்தவர்கள். எனவே நீங்கள் உங்கள் பலத்தை குறை மதிப் பீடுசெய்து கொள்ள வேண்டாம். நல்லதற்கு ஆதரவு வழங்கி பொது மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்ற ஒத்துழையுங்கள் என்றார்'.


No comments

Powered by Blogger.