Header Ads



மைத்திரியின் ஆட்சியில் உரிமைத்துவ அரசியலும், ஜாதிகஹெலஉறுமயவின் பேரினவாதப் போக்கும் பகுதி 2

-நவாஸ் சௌபி-

02. முஸ்லிம் காங்கிரஸும் ஜாதிக ஹெலஉறுமயவும்
அல்லது ரவூப் ஹக்கீமும் சம்பிக்க ரணவக்கவும்.

கடந்தவாரக் கட்டுரை மைத்திரியின் வெற்றியில் முஸ்லிம்களின் பங்களிப்பு தொடர்பாக சம்பிக்க ரணவக்க வெளிப்படுத்திய கருத்துக்களின் பின்புலங்களை ஆராய்வதாக இருந்தது. அதனை எழுதியதன் நோக்கம் மைத்திரியின் வெற்றிக்கு முஸ்லிம்கள் செய்த பங்களிப்பினை வாதிட்டுக் கூறுவதோ அதற்காக மைத்திரியின் ஆட்சியில் முஸ்லிம்கள் ஊர்வலம் வரவேண்டும் என்றோ சுட்டிக்காட்டியது அல்ல. பொதுவாக மைத்திரியின் வெற்றிக்கு யார் பங்களிப்புச் செய்தார்கள் என்று வாதாடுவதோ, அதற்காகப் போராடுவதோ எதையும் சாதிக்கப்போவதில்லை. மாறாக இந்த ஆட்சியில் முஸ்லிம்கள் எதைச் சாதிக்க முடியும் என்பதையும் அதற்கான தடைகள் எவைகள் என்பதையுமே நமது அரசியல் சிந்தித்து செயற்பட வேண்டும். 

இவ்வாறு சிந்திப்பதில் இன்று மைத்திரியின் ஆட்சியில் அவதானம் பெறக்கூடிய ஒரு கட்சியாக ஜாதிக ஹெலஉறுமய இருப்பதை அதன் கடந்தகால முன்உதாரணங்கள் நிரூபிக்கின்றன. அதனடிப்படையிலான  எதிர்வுகூறல் இன்று எம்மில் பலிரடமும் இல்லாமல் இல்லை. இதை மேலும் வலுப்படுத்தும் வகையில் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்திலிருந்து விலகி மைத்திரிக்கு ஆதரவு வழங்குவதற்கான செய்தியாளர்கள் மாநாட்டை கடந்த டிசம்பர் 28 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை தாருஸ்ஸலாமில் கூட்டியபோது அங்கிருந்த செய்தியாளர் ஒருவர் இதே விடயத்தை ஹக்கீமிடம் கேள்வியாக எழுப்பியிருந்தார்.

கேள்வி: ஜாதிக ஹெலஉறுமய இருக்கின்ற எதிர்கட்சியில் நீங்கள் இடம்பெறுவது எவ்வாறு சாத்தியம்?

பதில்: அதில் எங்களுக்கு சிக்கல் இல்லை ஜாதிக ஹெலஉறுமய அங்கம் வகித்த அரசாங்கத்தில் நான்கு வருடங்கள் இருந்தோம் அல்லவா. (நன்றி: வீரகேசரி, 10 ஆம் பக்கம் - 29.12.2014)

என்று ஹக்கீம், மஹிந்தவின் ஆட்சியில் நான்கு வருடங்கள் ஹெலஉறுமயவுடன் இருந்தமையை மிகவும் சாதாரணமாக எதுவுமே நடக்காதபடி பதிலளித்திருக்கிறார். இந்தக் கேள்வியைக் கேட்ட செய்தியாளர் முஸ்லிம்கள் விடயத்திலும் முஸ்லிம் காங்கிரஸின் விடயத்திலும் ஜாதிக ஹெலஉறுமய கடந்த மஹிந்தவின் ஆட்சியில் எவ்வாறு நடந்துகொண்டது என்பதை வெளிப்படையாகத் தெரிந்துகொண்டுதான் இந்தக் கேள்வியினைக் கேட்டிருந்தார். ஆனால் அப்படி எதுவும் நடந்திருக்கிறதா? என்று எதுவுமே தெரியாத ஒருவர் பதில் அளிப்பது போன்று அப்போது ஹக்கீம் பதில் அளித்திருப்பதுதான் புதுமையாக இருக்கிறது. 

ஜாதிக ஹெலஉறுமய பற்றி கேள்வி கேட்ட பத்திரிகையாளரிடமிருந்த மிகச் சின்னதான அரசியல் எதிர்பார்ப்புக்கூட இந்தவிடயத்தில் ஹக்கீமிடம் இல்லாமல் போய்விட்டது என்பதை அவரது பதில் மிகவும் வெளிப்படையாக நிரூபித்துவிட்டது. ஆனால் கடந்த நான்கு வருடத்திலான மஹிந்தவின் ஆட்சிக் காலத்தினுள் முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் ரவூப் ஹக்கீம் தொடர்பாக ஜாதிக ஹெலஉறுமயவும், சம்பிக்க ரணவக்வும் எப்போதெல்லாம் எவற்றையெல்லாம் பேசி இருக்கிறார்கள் என்பதை இவ்வளவு விரைவாக ஹக்கீம் மறந்துவிட்டார் போலும். அவ்வாறு மறந்ததை மீண்டும் அவருக்கு நினைவுபடுத்துவதற்கும், எதிர்காலத்தில் ஜாதிக ஹெலஉறுமயவின் கருத்து வெளிப்பாடுகள் முஸ்லிம்களுக்கு அல்லது முஸ்லிம் காங்கிரஸூக்கு எதிராக வருகின்ற போது அதனை நாம் முன்கூட்டியே இவ்வாறு எதிர்வு கூறியதற்கு ஒரு ஆதாரமாகவும் இத்தொடரை எழுதுகிறேன்.

செய்தியாளர் ஹக்கீமிடம் இந்தக் கேள்வியைக் கேட்கின்ற போது ஜாதிக ஹெலஉறுமய மஹிந்தவின் பக்கம் இருந்திருந்தால் அதற்கான அவரது பதில் நிச்சயம் வேறுவிதமாகவே அமைந்திருக்கும். மாறாக தாங்கள் இணைந்துகொண்ட மைத்திரியின் பக்கம் ஜாதிக ஹெலஉறுமய இருந்தமையினால் அவர் அதனை ஒரு பொருட்டாக கருதாமல் பதில் அளித்திருக்கிறார் என்பதே உண்மை.

இதில் இன்னுமொரு முக்கிய விடயம் என்னவென்றால் பொதுபல சேனா மஹிந்தவுடன் இருந்தமையும் தாங்கள் மஹிந்தவை விட்டு விலக ஒரு காரணம் என்று கூறுகின்ற போது, மைத்திரியின் பக்கம் ஜாதிக ஹெலஉறுமய இருக்கின்றதே அதற்கு என்ன பதில் அளிக்கப்போகின்றீர்கள் என்ற கேள்வியும் கூடவே எழுவதுதான் ஹக்கீம் எதிர்கொள்ளும் ஒரு நெருக்கடியான நிலைமை. 
இந்த நெருக்கடியான கேள்வியிலிருந்து தன்னை விடுவிப்பதற்கு வேறு வழியில்லாமல் ஹக்கீம் ஜாதிக ஹெலஉறுமயவையும் சேர்த்து சுத்தப்படுத்தி அந்த அமைப்பினால் எதிர்காலத்தில் எந்த ஆபத்தும் வந்துவிடாது என்றும் தாங்கள் மைத்திரியுடன் இணைந்ததில் எதிர்காலத்தில் எந்த தடைகளையும் முஸ்லிம் அரசியலில் ஜாதிக ஹெலஉறுமய ஏற்படுத்தாது என்றும் நம்புவதுபோன்று பதில் அளித்து அந்த குற்றத்திலிருந்து ஹக்கீம் தன்னைச் சுத்தப்படுத்தியதோடு ஜாதிக ஹெல உறுமயவையும் குற்றமற்ற ஒன்றாக நிரூபித்திருக்கிறார்.

இதனால்தான், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரியுடன் இணைந்த பிற்பாடு வீரகேசரிப் பத்திரிகை ரவூப் ஹக்கீமிடம் ஒரு பிரத்தியேக செவ்வியைச் செய்த போது இதே கேள்வியை நேர்காணல் செய்த ஆர்.ராம் கேட்ட போதும் ஹக்கீம் ஜாதிக ஹெல உறுமயவை புகழ்ந்து பதில் அளித்திருந்தார். ஆனால் அவர் புகழ்வதுபோன்றோ அல்லது சுத்தப்படுத்துவது போன்றோ ஜாதிக ஹெலஉறுமய இருந்துவிடப் போவதில்லை என்பதற்கும் காலமே பதில் கூறும். 

கேள்வி : வாக்குறுதிகள் மீறப்பட்டமை, பேரம் பேசல்கள் தோல்வி கண்டமை, என்பவற்றைக் கடந்து பொதுபல சேனாவே மு.கா அரசாங்கத்திலிருந்து வெளியேறுவதற்கு பிரதான காரணமாக கூறப்படுகின்றது. இந்நிலையில் தற்போது மு.கா இணைந்துள்ள எதிரணியிலும் ஜாதிக ஹெல உறுமய என்ற கடும்போக்கு அமைப்பு காணப்படுகிறதே?

பதில் : ஆட்சியிலிருந்து மு.கா விலகக் கூடாது என்று வாதம்புரிந்துகொண்டிருந்தவர்கள் எதிரணியில் ஜாதிக ஹெல உறுமய இருப்பதை காரணம் காட்டினர். அத்துடன் ஆட்சியாளருக்கு ஆதரவாக பொதுபல சேனா கருத்துக் கூறி வருவதை அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என்ற விடயத்தையும் முன்வைத்திருந்தனர்.

சித்தாந்த ரீதியாக ஜாதிக ஹெலஉறுமய என்ற கட்சியானது சிங்கள பௌத்த பேரினவாத கொள்கை வார்ப்பில் செயற்பட்டு வந்தாலும் அத்துரலிய ரத்ன தேரர் நாட்டை தீவிரவாத பௌத்த இனவாத கோட்பாடுகளோடு முன்னெடுத்துச் செல்கின்றார் என்பதை விட நல்லாட்சிக்கான ஆட்சி மாற்றமொன்றை சகல சமூகங்களின் ஒத்துழைப்புடன் அதனை சாத்தியப்படுத்திக்கொள்வதே பிரதானமானது என்ற தொனியிலேயே தனது போராட்டத்தை வடிவமைத்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க கடும்போக்குவாதியாக இருந்தாலும் நாட்டில் ஊழல் மோசடிகள் தொடர்பாகவும் ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வதற்காகவே உண்மையான உள்ளக ஜனநாயகப் போராட்டத்தைவெளிச்சக்திகளின் சதி முயற்சி எனக் காண்பிப்பதற்கு எடுக்கப்பட்டிருக்கும் முயற்சிகளை முறியடிப்பதற்காக மிகவும் இலாவகமாக சிங்கள பௌத்த அப்பாவி கிராம மக்களுக்கு உண்மைகளைத் தெளிவுபடுத்தும் சாணக்கியத்துடன் செயற்படுகின்றார்.

இவ்விடயங்களை நாம் அண்மைக்காலமாக அவதானித்து வருகின்றோம். ஹெலஉறுமயவின் இரு முக்கியஸ்தர்களினது செயற்பாட்டிற்கும் பொதுபலசேனாவினுடைய செயற்பாட்டிற்கும் மலைக்கும் மலைக்கும் மடுவிற்குமிடையிலான வித்தியாசம். 

மிகவும் ஈனத்தனமாக அச்சுறுத்தும் பாணியில் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவோம் எனும் போர்வையில் பௌத்த மதகுருமார்களை அவ்வாறான போராட்டத்தின்பால் தள்ளிச் செல்லும் முயற்சியை தாம் ஒரு சுயாதீனமான இயக்கம் எனக் காட்டிக்கொண்டு பொதுபலசேனா அமைப்பினர் மேற்கொள்கின்றனர்.

சிறுபான்மைச் சமூகங்களுக்கு உரிமைகளோ சலுகைகளோ அவசியமில்லை வெறும் கொத்தடிமைகளாக வாழ்ந்துவிட்டுச் செல்வதே அவர்களுக்கு நாம் போடும் பிச்சை என்ற பாணியில் அமைந்த பொதுபல சேனாவினுடைய பிரசாரத்தின் பின்னணியில் ஆளும் தரப்பில் மறைமுகமான அனுக்கிரகம் இருக்கின்றது என்பதை பலதடவைகள் நான் காட்டமாக சாடி வந்துள்ளேன். 

பொதுபலசேனா ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பது தொடர்பான முடிவை அறிவித்தவுடனேயே அவர்களின் பின்னணி வெளியாகிவிட்டது. அந்த முடிவை அவர்களின் கடந்தகால பிரச்சாரங்களோடும் ஒப்பிட்டு பார்க்கையில் சிங்கள பேரினவாத சித்தாந்திகளால் ஈர்க்கப்பட்டு இவர்களை நம்பி சோரம்போன பலர் இன்று பொதுபலசேனாவை ஏளனமாக பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த சூழலில் ஹெல உறுமயவையும் பொதுபலசேனாவையும் ஒரே தட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்பதை புத்திக்கூர்மையுடன் அரசியலை புரிந்துகொண்டவர்கள் நன்கறிவார்கள்.  (நன்றி : வீரகேசரி, 23 ஆம் பக்கம் - 03.01.2015)

ஹக்கீமின் இந்தப் பதில் ஜாதிக ஹெலஉறுமயவை தேவைக்கு அதிகமாக நற்சான்றுப்படுத்தி இருக்கிறது என்றே அரசியலை புத்திக்கூர்மையுடன் புரிந்துகொள்பவர்கள் சரியாக நோக்குவார்கள். தனது பதிலில் ஹக்கீம், 'சம்பிக்க ரணவக்க கடும்போக்குவாதியாக இருந்தாலும்' என்று அதனை ஏற்றுக்கொள்வதுபோல் ஏற்றுக்கொண்டு பின் அந்தக் கடும்போக்கு தங்களுக்கு ஆபத்தானது அல்ல என்ற அத்தாட்சியையும் அளிக்கிறார். 

ஆனால், கடந்த மஹிந்தவின் ஆட்சியில் சம்பிக்கவின் கடும்போக்கு மிக அதிகமக முஸ்லிம்களையும் முஸ்லிம் காங்கிரஸின் அரசியலையும் சினம்கொண்டு விமர்சித்து இட்ட அறிக்கைகளையெல்லாம் ஹக்கீம் எதற்காக மூடிமறைத்து இப்படி ஒரு வஞ்சகப் புகழ்ச்சியைச் செய்ய வேண்டும். தங்களின் முடிவைச் சரிகாண்பதற்காக பிழையான ஒரு அமைப்பை ஏன் சரியாக்க வாதிட வேண்டும். 

பொதுபல சேனாவிற்கும் ஜாதிக ஹெலஉறுமயவிற்கும் மலைக்கும் மடுவிற்குமான வித்தியாசம் என்றும் பொதுபலசேனாவையும் ஜாதிக ஹெலஉறுமயவையும் ஒரு தட்டில் வைத்துப் பார்க்க முடியாது என்றும் இவ்விரு அமைப்புக்களையும் செயலளவில் வேறுபடுத்தி நோக்கினாலும் பேரினவாத சிங்கள பௌத்த கொள்கை அளவில் இவ்விரண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்தான். 

அதிலும் பொதுபலசேனா ஒரு அடாவடித்தனமான முன்பின் சிந்திக்காத செயற்பாடகளைச் செய்கின்ற மஹிந்த அரசின் ஆதரவில் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு அதன் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி ஒருமுடிவுக்கு கொண்டுவருவதற்கு அதனை இயங்கவிட்டவர்களால் முடியும். அந்த அடாவடித்தனம் என்பது ஒரு தொடர்ச்சியான விளைவுகளை ஏற்படுத்த இடமில்லாது போகும். இதனை இப்போது மஹிந்தவின் தோல்வியோடு பொதுபலசேனா ஆட்டம் கண்டதிலிருந்து புரியலாம். மேலும் அது ஒரு மக்கள் ஆதரவைப் பெற்ற அரசியல் கட்சியுமல்ல. பாராளுமன்ற அதிகாரங்களை அவ்வமைப்பு கொண்டிருக்கவுமில்லை.

ஆனால் ஜாதிக ஹெல உறுமய மக்கள் ஆதரவு பெற்ற ஒரு அரசியல் கட்சியாகும். அது பாராளுமன்றத்தினுள் பல விடயங்களைச் சாதித்துவருகின்ற மிகவும் பலம் வாய்ந்த ஒரு அரசியல் நிறுவனமாகவும் இருக்கிறது. அதுமாத்திரமல்லாமல் அதன் செயற்பாடு அறிவுபூர்வமாகவும், ஆய்வுரீதியாகவும், அரசியல் அதிகாரப் பாணியிலும் அமைந்திருக்கிறது. பொதுபலசேனாவின் அடாவடித்தனத்தினைவிடவும் ஜாதிக ஹெலஉறுமயவின் இப்பண்புகள் ஆபத்தானவை. இதனை நிரூபிக்க கூடிய உதராணங்கள் பலவற்றையும் கடந்தகாலப் பதிவுகளிலிருந்து பின்னர் எம்மால் விளக்கமாக முன்வைக்க முடியும்.

இதுஇவ்வாறு இருக்க, பொதுபலசேனாவுக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் என்று ஹக்கீம் கூறுகின்ற போது தனது மனச்சாட்சியைப் புதைத்துவிட்டுத்தான் அவ்வாறு கூறு முடியும். ஏனென்றால் சம்பிக்க ரணவக்க நேரடியாகவே ரவூப் ஹக்கீம் மீது மிகவும் காட்டமான எத்தனையோ அறிக்கைகளை முன்வைத்திருக்கிறார். அதன்படி பார்த்தால் பொதுபல சேனா மலை என்றால் ஜாதிக ஹெலஉறுமய எரிமலை என்றுதான் சொல்ல வேண்டும். இதனை விளங்காமல் ஹக்கீம் பதில் அளித்திருப்பதில் அவர் ஒரு மண்மலை என்பதும் புரிகிறது.

இங்கு பொதுபல சேனாவை கட்டுப்படுத்தும் ஒரு கடிவாளமாவது மஹிந்த அரசுக்குள் இருந்தது ஆனால் ஜாதிக ஹெல உறுமயவை கட்டுப்படுத்தும் கடிவாளம் மஹிந்த அரசிடமும் இருக்கவிலை இப்புதிய அரசான மைத்திரியின் ஆட்சியிலும் அது இருக்கப்போவதில்லை. அது எப்போது எப்படி வெடிக்கும் என்று இலகுவில் அறிந்துவிட முடியாது. அதனால்தான் ஜாதிக ஹெலஉறுமயவை ஒரு எரிமலை என்று நோக்கலாம்.

கடந்த மஹிந்தவின் ஆட்சியின் பங்காளிகளாக ஜாதிக ஹெலஉறுமய இருந்தும் அந்த அரசினால் பாராளுமன்றத்திற்கு கொண்டுவரப்பட்ட கெசினோ மீதான வாக்களிப்பினை அரசுக்கு எதிராக அளித்து அரசினால் விலைக்கு வாங்கவோ கட்டுப்படுத்தவோ முடியாத ஒரு கட்சியினர் நாங்கள் என்பதை ஜாதிக ஹெல உறுமய அப்போது நிரூபித்திருந்தது. அதில் தாங்கள் எப்போதும் எரிமலையாகலாம் என்பதற்கான ஒரு சமிஞ்ஞையையும் அது ஏற்படுத்தியது. 

பின்னர் மஹிந்தவின் ஆட்சியில் கூடவே இருந்து தங்கள் நிகழ்ச்சி நிரல்களை எல்லாம் வெற்றிகரமாக நிறைவேற்றிக்கொண்டு இறுதியில் தாங்கள் முன்வைத்த 19வது அரசியல் அமைப்புத் திருத்தம் உட்பட ஏனைய கோரிக்கைகளை மஹிந்த ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காக அவருக்கு எதிராக பொது எதிரணியை மாதுளவ சோபித தேரர் தனது முயற்சியால் ஒன்றுகூட்டி மஹிந்த அரசையும் அவர் குடும்பத்தையும் மெதமுலானவுக்கு அனுப்பிவைத்தார்கள் என்றால், ஜாதிக ஹெலஉறுமயவை யாராலும் கட்டுப்படுத்தவோ அவர்களை கொள்கை மாற்றம் செய்யவோ முடியாது என்பதற்கு இதைவிடவுமா? இன்னும் மேலான உதாரணங்கள் வேண்டும்.

எனவே ஜாதிக ஹெலஉறுமய என்பது பொதுபல சேனா போன்று அடக்கப்படக்கூடிய ஒரு அமைப்பாக இல்லை. அது தொடர்ச்சியான ஒரு நிகழ்ச்சி நிரலுடன் தங்களது கொள்கை அளவிலான பொளத்த பேரினவாத அரசியலைச் செய்துகொண்டே போகிறது. இதில் பொதுபல சேனாவை கடும் காட்டமாகக் காட்டி ஜாதிக ஹெலஉறுமயவை மிகச் சாதாரணமான ஒன்றாக ஹக்கீம் நிரூபிக்க முனைவது எந்தவிதத்திலும் நியாயமற்றதாகும். 

இதற்கு ஹக்கீமிடமிருந்தே நாம் பல ஆதாரங்களையும் சம்பவங்களையும் முன்வைக்கலாம். இப்போது மைத்திரியின் பக்கம் இருக்கும் ஜாதிக ஹெல உறுமயவை குற்றமற்ற ஒரு அமைப்பாக நியாயப்படுத்தும் ஹக்கீம் அப்போது மஹிந்தவிடம் இதே ஜாதிக ஹெல உறுமய இருப்பதை பெரும் ஒரு ஆபத்தாகக் கருதி அச்சப்பட்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு என்ன முடிவு எடுப்பது என்பது பற்றி சிந்திக்க வேண்டும் என்று அவரே தனது பேச்சில் சுட்டிக்காட்டியதை அவர் மறந்துவிட்டாரோ என்னமோ?

கடந்த 2014 ஒக்டோபர் 23 ஆம் திகதி வியாழக்கிழமை கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரின் ஏற்பாட்டில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் பிரிவில் வறுமைக் கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஹக்கீம் மேற்படி விளக்கத்தை பின்வருமாறு குறிப்பிட்டிருந்தார்.

'... 1988 ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தலில் எடுத்த முடிவின் பின்புலம்தான் இந்தத் தேர்தலில் எடுக்கப் போகும் முடிவைத் தீர்மானிக்க வேண்டும். இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுள்ள அரசாங்கம் இருக்கிறது. அன்று ஆறில் ஐந்து பெரும்பான்மையுள்ள அரசாங்கம் இருந்தது. அவ்வாறான அரசாங்கம் அமைவது மிகவும் அபூர்வம் அது நாங்கள் கொடுக்காத ஆறில் ஐந்து இது நாங்கள் கொடுத்த மூன்றில் இரண்டு. இந்த மூன்றில் இரண்டை வைத்துக்கொண்டு யாப்புத் திருத்தத்தினால் சமூக நலனுக்காக அல்ல, நாட்டு நலனுக்காவது ஏதும் நடக்குமா? எனப்பார்க்கிறோம். 

எங்களை முந்திக்கொண்டு ஜாதிக ஹெலஉறுமயவினர் ஒரு பெரிய பட்டியலை கையளித்திருக் கிறார்கள் இவற்றை நிறைவேற்றினால்தான் உங்களுக்கு எங்கள் ஆதரவு கிடைக்கும் என்று பகிரங்க அறிவிப்பு விடுத்திருக்கிறார்கள். ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் யாருடனும் இன்னும் பேச்சுவார்த்தைக்குப் போகவில்லை....' (நன்றி : ஜப்னா முஸ்லிம் - 24.10.2014)

இவ்வாறு ஜாதிக ஹெலஉறுமய மஹிந்தவுக்கு கையளித்த பட்டியலையும் அதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து அவர்கள் விடுத்த பகிரங்க அறிக்கை மிகவும் அவதானத்துக்குரியது என்று அன்று பேசிய அதே ஹக்கீம் இன்று இப்படிப் பேசுவது ஜாதிக ஹெலஉறுமயவின் அந்தப் பட்டியலை எந்த உண்டியலில் போட்டுவிட்டாகும்.

இப்படி தான் பேசியதையே மாற்றிப் பேசும் ஹக்கீமுக்கு, கடந்த மஹிந்தவின் ஆட்சியில் சம்பிக்க ரணவாக்க தன்மீது என்னவகையான விமர்சனங்களை எல்லாம் முன்வைத்தார் என்பதும் நிச்சயம் மறந்துதான் போயிருக்கும் அதனையும் நாம் ஒவ்வொன்றாக அடுத்தவாரம் நினைவுபடுத்துலாம்.

(இது ஹெலஉறுமய பற்றிய கடந்தகால நினைவுபடுத்தலே! ஆகும்)

தொடரும்....


2 comments:

  1. Hakeem avl is right.In current situation not speak about hela urumaya

    ReplyDelete
  2. வீராப்பகவும் ஆக்ரோஷமாகவும் பேசுவதனால் எதனை சாதிக்க முடியும்?
    ஹகீமை திருத்த முயற்சிப்பதை விட்டுவிட்டு நம் சமூகத்திற்கு சிறந்த வாளிகாட்டல்களை வழங்கவெண்டும்...

    சட்ட அனுமதி இல்லாமல் பள்ளிகளை அங்கும் இங்குமாய் திறப்பது..
    ஹலால் என்ற பெயரில் சான்றிதழ் விற்று வயிறு வளர்ப்பது..

    மாடு அறுக்க வேண்டிய ஒழுங்கு முறைகளையும் அதனோடு சம்மந்தப்பட்ட சுகாதார மற்றும் சூழல் விடயங்களை கருத்தில் கொண்டு அதனை பாதிக்காத முறையில் நடந்துகொள்வது

    அறுக்கப்பட மாட்டு குவியல்கள படம் எடுத்து முகப்புத்தகத்தில் பதிவேற்றம் செய்து சிங்கள சகோதரர்கள் பார்க்கும் வண்ணம் share உம் tag உம் pannuvathu

    மற்றைய மதத்தவருக்கு இடையூறு ஏற்படாமல் சமய மற்றும் சமூக அனுஷ்டானங்களை செய்வது..

    கண்ட கண்ட இடங்களில் அரச அனுமதி இல்லாமல் மோசடி மற்றும் போலி ஆவணங்கள் மூலம் நிலங்களை சொந்தமாக்கிக்கொள்வது...

    இஸ்லாம் வரவேற்காத தந்திர மற்றும் மோசடிகள் செய்து வியாபாரம் நடத்துவது..

    இவைகள் போன்ற இன்னும் பல விடயங்கள் சம்மந்தமாக நம் சமூகத்தில் மாற்றம் வராதவரை..

    ஹெல உறுமய மற்றும் பல சேனாக்கலுக்கு சிங்களவர்களும்..
    நம் காங்கிரச்களுக்கு முஸ்லிம்களும் வாக்களித்துக்கொண்டுதான் இருப்பார்கள்...

    இதில் ஹகீமையும் சம்பிக்கவையும் சம்மந்தப்படுத்தி விமர்சிப்பதில் என்ன பயன்.. ???

    ReplyDelete

Powered by Blogger.