Header Ads



முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து இன்று வெளியேறுகிறது..? ஹசன் அலி சமிக்ஞை

-எம்.ஏ.எம்.நிலாம்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இன்று 22-12-2014 அரசிலிருந்து வெளியேறி எதிரணி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் முடிவை அறிவிக்கத் தீர்மானித்திருப்பதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரம் தெரிவித்தது.

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நாள் முதல் யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பில்  முஸ்லிம் காங்கிரஸ் 20 க்கும் மேற்பட்ட சந்திப்புகளை மேற்கொண்ட போதிலும் முடிவெடுப்பதில் தடுமாறிய வண்ணமே காணப்பட்டது.

கட்சியிலுள்ள பெரும்பாலான பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசிலிருந்து வெளியேற வேண்டுமென்ற நிலைப்பாட்டில் தலைமைப்பீடத்துக்கு அழுத்தங்களைக் கொடுத்துவந்தனர். இதனிடையே கிழக்கு மாகாண சபை யின் உறுப்பினர்கள் அரசுடன் இருக்க  வேண்டுமென வலியுறுத்தி வந்தனர்.

எனினும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அமைச்சர் ரவூப் ஹக்கீமின் இல்லத்தில் இடம்பெற்ற முக்கிய கூட்டத்தின் போது கட்சியின் தவிசாளரும் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் பங்கேற்காத நிலையில் ஏனைய சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் கட்சி அரசிலிருந்து வெளியேறியாக வேண்டுமென தலைமைத்துவத்தைக் கட்டாயப்படுத்தியதாகவும் இதன் பிரகாரம் ஒன்றுபட்டு முடிவெடுத்து அரசிலிருந்து வெளியேறும்  முடிவை இன்று திங்கட்கிழமை அறிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முஸ்லிம் சமூகம் தனித்து முடிவெடுத்திருக்கும் நிலையில் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு இணங்கிப் போவதென்ற நிலைப்பாட்டுக்கு கட்சி தற்போது வந்துள்ளது.

இன்று திங்கட்கிழமை இடம்பெறும் கட்சியின் அதிமுக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் கட்சியின் இந்த முடிவை கட்சித் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் வெளியிடவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 23 ஆம் திகதி ஜனாதிபதித்  தேர்தலின் தபால்மூல வாக்கெடுப்பு இடம்பெறவிருப்பதன் காரணமாக இன்றைய அவசரக் கூட்டம் கூட்டப்படுவதாகவும் தெரியவருகின்றது.

கட்சியின் இறுதியான நிலைப்பாடு என்னவென மு.கா.வின் செயலாளர் நாயகம் எம்.ரி.ஹஸன் அலியிடம் கேட்டபோது; அரசிலிருந்து வெளியேறும் சமிக்ஞையையே வெளிப்படுத்தினார்.

எதிரணி பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் 100 நாள் வேலைத் திட்டம் தொடர்பான தேர்தல் விஞ்ஞாபனத்தில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் சகல கட்சிகளையும் உள்ளடக்கிய பொறிமுறையொன்று ஏற்படுத்தப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனை  நாம் வரவேற்கின்றோம்.

மகிந்த ராஜபக்ஷ பதவிக்கு வந்தது முதல் இனப்பிரச்சினைத் தீர்வு விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு கதவடைக்கப்பட்டே காணப்பட்டது.

இனநெருக்கடித் தீர்வு விவகாரத்தில் மறைந்த தலைவர் அஷ்ரப் காலம் தொட்டு நீண்டகாலமாக முஸ்லிம் காங்கிரஸுக்கு இடமளிக்கப்பட்டு வந்தது. சர்வ கட்சி மாநாடுகள், ஆறு சுற்றுப்பேச்சுகள், சர்வதேச மட்ட பேச்சுகளில் முஸ்லிம் காங்கிரஸ் உள்வாங்கப்பட்டே வந்தது.

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் இனநெருக்கடி விடயத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கு முழுமையான  கதவடைப்பே இடம்பெற்றது.

பொது எதிரணியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சகல தரப்புகளுக்கும் வாய்ப்பு என்ற அறிவிப்பு தூரநோக்குடன் கூடிய ஒளி வீசுவதையே காண முடிவதாகவும் ஹஸன் அலி தெரிவித்தார்.

இவ்வாறானதொரு நிலையிலேயே முஸ்லிம் காங்கிரஸ் அரசிலிருந்து வெளியேறும் முடிவுக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.