Header Ads



''மைத்திரிபால சிறிசேன தப்பித் தவறியாவது ஜனாதிபதியானாலும்'' - அமைச்சர் டிலான் பெரேரா

மைத்திரிபால சிறிசேன தப்பித் தவறியாவது ஜனாதிபதியானாலும் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை அவராலும் நீக்கிவிட முடியாது என அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

நிறைவேற்று அதிகாரத்தை மட்டும் நீக்கும் எண்ணம் எமது அரசுக்கு கிடையாது. தற்போதுள்ள தேர்தல் முறைமை உட்பட அரசியலமைப்பும் முழுமையாக மாற்றப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம். தற்காலிக ஏற்பாடுகள் தற்காலிக திருத்தங்கள் செய்வதற்கு எமது அரசு விரும்பவில்லை. அத்துடன் மக்களின் தேவை நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது அல்ல என்றும் அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செய்தியாளர் மாநாடு ஸ்ரீல. சு. க. தலைமையகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும் போதே அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

அப்படியானால் அரசுக்கு இப்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கிறது. ஏன் இதுவரை நிறைவேற்று அதிகாரத்தை நீக்க நடவடிக்கை எடுக்கவில்லை என செய்தியாளர் கேட்டபோது இதற்கு அமைச்சர் டிலான் பெரேரா பதிலளித்தார்.

இன்று மக்களின் தேவை நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவது அல்ல. அத்துடன் இந்த அதிகாரத்தை நீக்குவதற்கான தங்காலிக ஏற்பாடுகளுக்கும் அரசு தயாரில்லை.

அரசியலமைப்பை முழுமையாக மாற்ற வேண்டும் என்பதற்காகவே அமைச்சர் நிமால் சிறிபால டி. சில்வா தலைமையிலான பாராளுமன்ற தெரிவுக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கு அனைத்து கட்சிகளையும் அழைத்திருக்கிறோம். எனினும் அவர்கள் வருவதாக தெரியவுமில்லை. ஒருவரை ஒருவர் குறைகூறிக்கொண்டு இருக்கிறார்கள்.

ஜனாதிபதியினால் மட்டுமல்ல மைத்திரிபால சிறிசேன தப்பித்தவறியாவது ஜனாதிபதியானாலும் அவராலும் நிறைவேற்று அதிகாரத்தை நீக்க முடியாது. ஒன்று அவர் பதவி விலக வேண்டும். அல்லது பாராளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்குச் சென்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற வேண்டும். இவை சாத்தியப்படுமா? என்று சந்தேகமே.

ஏனெனில் இன்று பொதுவேட்பாளராக மைத்திரிபால சிறிசேன தெரிவானதை ஐ. தே. க. வினரே விரும்பவில்லை. குறிப்பாக ஐ. தே. க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்காவை நான் பாராளுமன்றத்தில் கண்டேன். அவரது முகத்தில் தெளிவில்லை. மைத்திரிபால சிறிசேனா நியமிக்கப்பட்டதை அவர் விரும்பாதது போன்றே தென்பட்டது.

இதேவேளை தேர்தலில் வெற்றிபெற்று 24 மணி நேரத்தில் ரணில் விக்கிரமசிங்கவை நிறைவேற்று அதிகாரமிக்க பிரதமராக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

ஆனால் மைத்திரிபால சிறிசேனாவே 100 நாட்களில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழித்து ரணிலை பிரதமராக்குவேன் என்று கூறியிருக்கிறார். அதுமட்டுமல்ல சஜித் பிரேமதாஸவும் விருப்பமின்றியே ஆதரவு வழங்குவதாகவும் கூறியிருக்கிறார்.

பொது வேட்பாளர் ஐ. தே. க. இல்லை என்பதை ஐ. தே. க.வினர் இன்று உணர்ந்துகொண்டுள்ளனர். மேடையில் ஏறி பேசுவார்கள் ஆனால் வாக்களிக்க மாட்டார்கள். என்று பாராளுமன்றத்தினுள் பலம் அரசுக்குத்தான் இருக்கிறது என்பதை வரவு - செலவு திட்ட இறுதி வாக்கெடுப்பின் போது மக்கள் உணர்ந்துகொண்டுள்ளனர்.

19 ஆவது திருத்தச் சட்டம் பற்றி சிலர் கூறுகிறார்கள். இந்த திருத்தச் சட்டமும் ஒரு தற்காலிக ஏற்பாடு மட்டுமே. காயத்துக்கு பிளாஸ்டர் ஒட்டுவது போன்றது. ஆனால் 19 ஆவது திருத்தச் சட்டம் சிறுபான்மை மக்களுக்கு மேலும் பாதிப்புகளையே கொண்டு வரும். குறிப்பாக நிறைவேற்று அதிகாரத்தை நீக்குவதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்போ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸோ, தொழிலாளர் காங்கிரஸோ விரும்பவில்லை என்றும் பிரதி அமைச்சர் சரத் அமுனுகம அமைச்சர் டிலான் பெரேரா ஆகியோர் தெரிவித்தனர்.

No comments

Powered by Blogger.