Header Ads



பள்ளிவாசல் சொத்தினை பிடுங்கி எடுக்க நினைப்பது கவலையளிக்கின்றது


(ஹாசிப் யாஸீன்)

சொத்துக்களை பாதுகாத்து கொடுக்க வேண்டிய காரைதீவு பிரதேச சபையினர் பள்ளிவாசல் சொத்தினை பிடுங்கி எடுக்க நினைப்பது கவலையளிக்கின்றது என சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபைத் தலைவர் அல்-ஹாஜ் வை.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசலுக்கு சொந்தமான காரைதீவு முற்சந்தியிலுள்ள தைக்கா காணிக்குள் காரைதீவு பிரதேச சபையினர் அத்துமீறி எல்லையிட்டதையிட்டு சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் அண்மையில் சம்மாந்துறைப் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இது சம்பந்தமாக காரைதீவு பிரதேச சபையின்; தவிசாளர் கோபிகாந்து அண்மையில் ஊடகங்களில் சாய்ந்மருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு எதிரான கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் முகமாக சாய்ந்துமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையின் ஏற்பாட்டில் இன்று ஊடகவியாலாளர் மாநாடு நடைபெற்றது. இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்,

சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசலுக்கு சொந்தமான காணியினை காரைதீவு பிரதேச சபையினர் தங்களுக்குரிய காணி என கூறுவதில் எந்தவித நியாயமும் இல்லை. இதனை காரைதீவு மக்களும் நன்கு அறிவார்கள். 

இக்காணிக்குள் பள்ளிவாசல் நிர்மாணிக்கும் தேவை எங்களுக்கு இல்லை. இதற்குள் கடைகளை நிர்மாணித்து அதனை காரைதீவு பிரதேச மக்களுக்கே வாடகைக்கு கொடுப்பதற்கு எண்ணியுள்ளோம் என தமிழ் அரசியல் தலைமைகளிடமும், சிவில் சமூக பிரதிநிதிகளிடமும் கூறியிருக்கின்றோம். இதனை அவர்கள் ஏற்றும் கொண்டுள்ளனர். 

காரைதீவு தவிசாளர் கோபிகாந்த் உடனான கடந்த கால பேச்சுவார்த்தைகளின் போது அவரின் செயற்பாடுகள் நியாயமானதாகவும், நடுநிலையானதாகவும் விளங்கியது. இன்று அவரின் ஊடக அறிக்கையின் மூலம் இக்காணிக்குள் பள்ளிவாசல் நிர்மாணிக்கப் போகின்றார்கள் என காரைதீவு மக்களை உசுப்பேத்திய பிழையான வழிநடத்தலானது அவர் மீது நாங்கள் வைத்துள்ள நம்பிக்கையினை கேள்விக்குறியாக்கியுள்ளது.

காரைதீவு முற்சந்தியிலுள்ள தைக்கா காணியினை எமது பள்ளிவாசல் நிர்வாகத்தினரால் 1836ம் ஆண்டிலிருந்த பராமரிக்கப்பட்டு வருகின்றன. இக்காணிக்கான வியாபார உரிமம் (வரி) காரைதீவு கிராமாட்சி மன்றத்தில் 1974ம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து செலுத்தப்பட்டுள்ளது. அத்துடன் இக்காணிக்கு யுத்தகால நஷ்டஈட்டு நிவாரணத்தினை காணி அமைந்துள்ள பிரதேச கிராம சேவகர் புவனேந்திர ராஜாவின் அத்தாட்சிப்படுத்தலுடன் காரைதீவு முன்னாள் பிரதேச செயலாளர் இராமகிருஷ்ணன் மற்றும் அம்பாறை மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் ஆர்.ஆர். விக்கிரம ஆகியோரின் சிபாரிசினால் புனர்வாழ்வு அதிகார சபையின் மூலம் பெற்றுள்ளோம்.

இதற்கு மேலாக 2009ம் ஆண்டு காரைதீவு பிரதேச செயலகத்தினால் கலாச்சார விழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள காரணீகம் சிறப்பு மலரில் இக்காணியின் வரலாறு மற்றும் காணியின் பராமரிப்பு பற்றி கூறப்பட்டுள்ளது. இவ்வாறு பல ஆதாரங்கள் இக்காணி தொடர்பில் எங்களிடம் இருந்தபோதிலும் இதனை காரைதீவு பிரதேச அரசியல்வாதிகள் ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லை என்பது கவலையளிக்கிறது. அத்துடன் இக்காணி காரைதீவு பிரதேச சபைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்கள் அவர்களிடமும் இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். 

காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சாய்ந்மருது, மாளிகைக்காடு மக்கள் உயரிய சபையாக மதிக்கும் சாய்ந்தமருது ஜூம்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினர் இக்காணிக்குள் அத்துமீறி புகுந்து மோசடி செய்துள்ளதாகவும் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறியதன் மூலம் எமது பிரதேச மக்களை ஆத்திரமடைய வைத்துள்ளார். எதுவாக இருந்தாலும் இருதரப்பாரும் பேச்சுவார்த்தை மூலம் இப்பிரச்சினையை தீர்த்துக் கொள்ளலாம் என்ற நம்பிக்கை எமக்குண்டு. இதனாலேயே இக்காணி விவகாரம் குறித்து இன்றுவரை தமிழர் தரப்புடன் பல சுற்றுக்களாக பேசிவருகின்றோம். இன்று இவ்விடயத்தினை தவிசாளர் ஊடகங்கள் வாயிலாக திரிவுபடுத்தி எமது பிரதேச தமிழ், முஸ்லிம் மக்களின் உறவில் விரிசலை ஏற்படுத்த முயற்சிக்கிறார் இதனை அவா் நிறுத்திக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.