Header Ads



ஜனாதிபதி மஹிந்த முஸ்லிம் காங்கிரஸினை சந்திக்கிறார்

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுவது உறுதியாகியுள்ள நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசின் பங்காளிக் கட்சிகளுடன் அடுத்தடுத்து தொடர் பேச்சுவார்த்தைகளை நடத்திவருகின்றார்.

அந்தவகையில் கடந்த வௌ்ளிக்கிழமை அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளுடன் சந்திப்பை நடத்திய ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கூட்டணி இன்று செவ்வாய்க்கிழமை ஜாதிக ஹெல உறுமயவுடன் பேச்சு நடத்தவுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை பிரதியமைச்சர் திகாம்பரம் தலைமையிலான தேசிய தொழிலாளர் சங்கத்தின் பிரதிநிதிகளுடனும் ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கூட்டணி சந்திப்பை நடத்தவுள்ளது.

அதேபோன்று தற்போது வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் நாடு திரும்பியதும் அவர்களுடன் சந்திப்பை நடத்துவதற்கு ஆளும் கூட்டணி எதிர்பார்த்துள்ளது.

குறிப்பாக ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் நடத்தும் சந்திப்புக்களில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

குறிப்பாக கடந்த வௌ்ளிக்கிழமை அமைச்சர் விமல் வீரவங்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணியின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின்போது எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக அமைச்சர் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் ஆளும் கூட்டணியுடன் முரண்பட்ட நிலையில் காணப்பட்ட தேசிய சுதந்திர முன்னணி சில மாதங்களுக்கு முன்னர் அசராங்கத்துக்கு 14 அம்சங்கள் அடங்கிய வேலைத்திட்டம் ஒன்றை சமர்ப்பித்தது. அந்த வேலைத்திட்டம் குறித்து ஆராய தயார் என்று அரசாங்கம் கூறியதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முழுமையான ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இன்று ஜாதிக ஹெல உறுமயவுடன் ஜனாதிபதி தலைமையிலான ஆளும் கூட்டணியின் முக்கியஸ்தர்கள் சந்திப்பு ஒன்றை நடத்தவுள்ளனர். இதன்போது தீர்க்கமான முடிவு ஒன்று எடுக்கப்படும் என்று எ திர்பார்க்கப்படுகின்றது.

கடந்த சில வாரங்களாக ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் அத்துரலியே ரத்தன தேரர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பில் சில மாற்றங்களை ஏற்படுத்தவேணடும் என்று கடந்தவாரம் அத்துரலியே ரத்தன தேரர் காலநிர்ணயத்தையும் விதித்திருந்தார். அந்தவகையில் இன்றைய சந்திப்பு முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது இவ்வாறு இருக்க எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்று இதுவரை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இதுவரை தீர்மானம் எடுக்காத நிலையில் அதன் தலைவர்கள் தற்போது வெளிநாட்டுப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர். அந்தவகையில் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் நாடு திரும்பியதும் ஜனாதிபதி அவர்களையும் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
    

2 comments:

  1. ஆழும் கட்சியில் இருக்கும்போதே முஸ்லிம் காங்கிரஸையும் அதன் தலைவரையும் மற்றும் முஸ்லிம்களையும் அழிக்க நினைத்த பங்காளிகளுக்கு வாய்பேசாமல் மெளனியாக இருந்த் ஜனாதிபதி கடையில் முஸ்லிம்கள்மீது சாடினார். இதுபோன்ற எக்கச்சக்கமான நிலைமைகளில் முஸ்லிம்கள் பயங்கரவாதிகளாக வர்ணிக்கப்பட்டனர். இன்னும் பொது பல்லா சேனாக்களின் அட்டகாசங்கள் இருந்துகொண்டுதான் உள்ளது. ஆக இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதென்பது தற்போதைய காலகட்டத்தில் முஸ்லிம்களால் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.

    முஸ்லிம்காங்கிரஸ் என்ன முடிவெடுக்கப்போகின்றது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    ReplyDelete
  2. அமைச்சா் ஹகீம் அரசுக்கு எதிர,.... முஸ்லிம் மக்கள் சந்தேசமும் சந்தோகமும் கலர்ந்த அதிர்ச்சி (சென்ற வாரம்)

    முஸ்லிம் கான்கிரஸ் அரசுடன் இனைவு பதவி குடும்ப கெளரவம் உயர்வு,, முஸ்லிம் வாக்காள மக்கள். வாய் பிளப்பு ( இனி நகறும் தொடர்)

    ReplyDelete

Powered by Blogger.