Header Ads



''கடைசி சடலம் கண்டெடுக்கப்படும் வரை, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்''

கொஸ்லாந்தையில் மீட்புப் பணிகளை கைவிடும் ரகசிய திட்டத்தை அரசு கொண்டிருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இது தொடர்பில் இன்று தனது நாடாளுமன்ற உரையில் குற்றம் சாட்டியுள்ளார்.

எனினும் கடைசி சடலம் கண்டெடுக்கப்படும் வரை மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

“சர்வதேச நாடுகள் இது போன்ற அனர்த்தங்களின் போது கடைசி சடலத்தைக் கண்டுபிடிக்கும் வரை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபாடு காட்டுவதுண்டு. ஆனால் அரசாங்கம் இதனை கைவிடும் நிலையில் இருப்பது போன்று தெரிகின்றது. அப்படிச் செய்ய வேண்டாம் என்று நான் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளித்துள்ள அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, மண்சரிவுக்குள்ளான இடத்தில் மீட்புப் பணிகளில் பெரும் தொழில்நுட்ப சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. அங்கு தோண்டும் போது மேற்புறத்தில் இருக்கும் பிரதேசத்தில் இன்னுமொரு மண்சரிவு உண்டாகும் அபாயம் உள்ளது. அதன் காரணமாக இதனை அவதானத்துடனேயே மேற்கொள்ள வேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

எனினும் கடைசி சடலம் கண்டுபிடிக்கப்படும் வரை மீட்புப் பணிகள் தொடரும் என்று அவர் உறுதியளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பொதுமக்களின் துன்பத்தில் எதிர்க்கட்சி குளிர்காய முயற்சி! அரசாங்கம் குற்றச்சாட்டு

பொதுமக்களின் துன்பத்தில் எதிர்க்கட்சி குளிர்காய முயற்சிப்பதாக ஆளுங்கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

ஆளுங்கட்சி சார்பில் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கொஸ்லாந்தை மண்சரிவு அனர்த்தம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஆனால் பொதுமக்கள் துயரத்துக்குள்ளாகும் தருணங்களில் அரசாங்கம் எந்தவித வேறுபாடுகளும் பார்க்காது நிவாரணப் பணிகளை மேற்கொள்வதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இதற்கு மேலும் கொஸ்லாந்தை சம்பவத்தில் எதிர்க்கட்சிகள் அரசியல் இலாபம் தேட முயற்சித்தால் நாடாளுமன்ற விவாதமொன்றை வழங்கவும் தயார் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.