Header Ads



ஜனாதிபதிக்கும், மகா சங்கத்தினர்க்கும் ஜம்இய்யத்துல் உலமாவின் வேண்டுகோள்

28.09.2014 ஆம் திகதி நடைபெற்ற பொதுபல சேனாவின் மாநாட்டில் தெரிவிக்கப்பட்ட கருத்துக்களுக்கு எதிராக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் கண்டன அறிக்கை

இலங்கை வரலாற்றில் பொதுபல சேனா என்ற அமைப்பு போன்று மதநிந்தனையில் ஈடுபட்டு சமூகங்களுக்கு இடையிலான சகவாழ்வுக்கும்  நல்லிணக்கத்திற்கும் சவாலாக அமைந்த மற்றொரு அமைப்பை காணமுடியாது. 1500 ஆண்டு  கால வரலாற்றைக் கொண்ட, உலகில் 162 கோடிக்கும் மேற்பட்ட மக்களால் மிகவும் உயிரோட்டமாக பின்பற்றப்படுகின்ற, சமத்துவம், சகோதரத்துவம், மனிதநேயம் முதலான உயர் மனித விழுமியங்களைப் போதிக்கின்ற இஸ்லாத்தை, மேற்குறிப்பிட்ட அமைப்பு அண்மைக் காலமாக கடுமையாக விமர்சித்தும் திரிபு படுத்தியும் கொச்சைப்படுத்தியும் வருவது மிகமிக வேதனைக்குரியதாகும். 

நேற்று முன்தினம் (28.09.2014) கொழும்பில் நடைபெற்ற பொதுபல சேனாவின் மாநாட்டில் உரையாற்றிய அதன் தலைவர் கிரம விமலஜோதி தேரரின் உரையின் பகுதிகளை பல்வேறு இணையத்தளங்களில் வாசிக்கக்கிடைத்தது. சுகததாச விளையாட்டு உள்ளரங்களில் ஒன்றுகூடிய பௌத்த துறவிகள் மத்தியில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவைப் பற்றி குறித்த உரையில் பிழையாக குறிப்பிட்ட விடயங்கள் கண்டிக்கத்தக்கதாகும். அவர் அவரது உரையில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சமீப காலத்தில் உருவான அமைப்பென்றும் தீவிரவாத அமைப்பென்றும் குறிப்பிட்டு கூடியிருந்தோரை பிழையாக வழிநடாத்தியுள்ளார்.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பது எந்தவொரு அரசியல் சாயமும் கலவாத, இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு சன்மார்க்க வழிகாட்டும் ஒரு தனிப்பெரும் நிறுவனமாகும். இது 1924 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் 90 வருடங்களாக தனது பணியை சிறப்பாக செய்து வருகின்றது. அதனுடைய வழிகாட்டலில் முஸ்லிம்கள் சன்மார்க்க, சமூக விடயங்களை மேற்கொண்டு வருகின்றனர். 

யுத்தத்திற்கு முன்னரும், யுத்தத்தின் போதும், யுத்தத்திற்கு பின்னரும்  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா இந்த நாட்டிற்கு செய்த பங்களிப்புகள் அனைவரும் அறிந்ததே. எப்பொழுதும் சக வாழ்வையும் சகிப்புத் தன்மையையும் ஒற்றுமையையும் வலியுறுத்தும் இப்பாரிய நிறுவனத்தை தீவிரவாத இயக்கம் என குறிப்பிட்டதானது சமயத் தலைவர் ஒருவர் கூறிய மிகப் பிழையான கருத்தாகும். 

இந்நாட்டுக்கென்று ஒரு பாதுகாப்புப் பிரிவும் உளவுத்துறையும் இருக்கின்றன. அந்த உயர் மட்டங்களெல்லாம் முஸ்லிம்கள் மத்தியில் பயங்கரவாத செயற்பாடுகள் இல்லையென அறிக்கைகள் விட்டுக்கொண்டிருக்கும் போது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை தீவிரவாத இயக்கமாக குறிப்பிட்டதானது வினோதமாகத் தெரிகின்றது. சமய எழுச்சிக்கென கூட்டப்படும் மாநாட்டில் துவேச எண்ணம் கொண்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டமையையிட்டு எமது விசனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். 

எப்போதாவது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்செயல்களை தூண்டியதாக அல்லது அதற்கு ஆதரவு வழங்கியதாக கிரம விமலஜோதி தேரரால் நிரூபிக்க முடியுமா? அநியாயமாக முஸ்லிம்கள் தாக்கப்பட்டபோதும் கடைகள்  தீமூட்டி எரிக்கப்பட்டபோதும் 

முஸ்லிம் மக்களை அமைதி காணச்செய்தது அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா என்பதை யாராலும் மறுக்க முடியாது. மேலும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா எப்போதும் சமாதானத்தையும் சகவாழ்வையுமே போதிக்கின்றது என்பதை கூறிவைக்க விரும்புகிறோம். 
முஸ்லிம்களின் தனிப்பெரும் சமய நிறுவனமான அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை ஒரு தீவிரவாத இயக்கமாக பிரகடனப்படுத்துவதற்கு தேரருக்குள்ள உரிமையைப்பற்றி  கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது. இவ்வாறான கருத்துக்கள் மூலம் முஸ்லிம் சமூகத்தினரை மனமுருகச் செய்து வேடிக்கை பார்க்க தேரர் விரும்புகிறார் போலிருக்கிறது. அவர் தனது எண்ணத்தையும் போக்கையும் மாற்றிக் கொள்ள வேண்டும். அவ்வாறே தான் வெளியிட்ட கருத்தை அவர் வாபஸ் பெற வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக்கொள்கிறது.

அவ்வாறே குறித்த மாநாட்டில் சமூகப்பணிகளில் ஈடுபட்டுவரும் முஸ்லிம் கவுன்சில் மற்றும் ஷூறா கவுன்சில் போன்ற அமைப்புகளை தீவிரவாத அமைப்புகளாக வர்ணித்ததையும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வன்மையாகக் கண்டிக்கின்றது. இம்மாநாட்டில் கலகொடஅத்தே ஞானசார தேரர் தனது அறியாமையை அணிகலனாகக் கொண்டு, யானையை விளக்கிய குருடர்கள் நிலையில் நின்று, புனித அல்குர்ஆனிலும் நபியவர்களின் பொன்மொழிகளிலும் குறிப்பிட்டுள்ள சில விடயங்களுக்கு பிழையான விளக்கங்கள் கூறி முஸ்லிம், முஸ்லிமல்லாத சமூகங்கள் மத்தியில் பெரும்பிளவை ஏற்படுத்த மேற்கொண்ட சிறுபிள்ளைத்தனமான முயற்சியையும் நாங்கள் கடுமையாக கண்டிக்கின்றோம். மேலும் இவரது பிழையான விளக்கங்களுக்கான சரியான தெளிவை வெகுவிரைவில் தரவுள்ளோம் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறோம். மேற்படி கூட்டத்தில் பேசப்பட்ட ஏனைய பல விடயங்களும் கவலைக்குரியனவாகும். அவை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா தொடர்ந்தும் ஆராய்ந்து வருகின்றது. 

எனவே இவ்வாறு மத நிந்தனை செய்வோரது இத்தகைய முயற்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என்றும் இவ்விடயத்தில் அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் மகா சங்கத்தினர்களும் உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் இலங்கை முஸ்லிம்கள் சார்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக்கொள்கின்றது.

சமாதான விரும்பிகள் தீவிரவாதிகளாகவும் தீவிரப்போக்குடையோர் சமாதான விரும்பிகளாகவும் சித்தரிக்கப்படுகின்ற அவலம் இனியும் இந்த நாட்டில் தொடர்வதை இந்நாட்டு நலனில் அக்கரையுள்ள எவரும் அனுமதிக்கக் கூடாது. வேற்றுமையில் ஒற்றுமைகண்டு அனைவரும் கைக்கோர்த்து தம் தாய்நாட்டை வெற்றிப்பாதையில் முன்னெடுத்துச் செல்வதற்கு எல்லா சமூகங்களும் இணைந்து செயற்படும் காலம் பிறந்துள்ளது என நாம் நம்புகின்றோம். இந்த வகையில் இந்நாட்டு நலனில் கரிசனைக் கொண்ட சகவாழ்வையும் சமாதானத்தையும் நேசிக்கின்ற அனைத்து சமூகங்களோடும் இணைந்து செயல்பட நாம் தயாராக உள்ளோம் என்பதையும் இங்கு பொறுப்புடன் குறிப்பிட்டுக்கொள்ள விரும்புகின்றோம். 

அஷ்-ஷைக் பாழில் பாரூக்
செயலாளர் - ஊடகப் பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments

Powered by Blogger.