Header Ads



'பேரம்பேசும் சக்தி இருந்தும்கூட, சொகுசுக்காக முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் ஒட்டி உறவாடுகிறது'

அதிகாரம் கையிலிருந்தும் அரசின் அடாவடி செயற்பாடுகளுக்கு துணை போகும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு ஊவா மாகாண சபை தேர்தலில் பதுளை வாழ் முஸ்லிம் மக்கள் தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

கிழக்கு மாகாண முஸ்லிம் காங்கிரஸின் பூரணமான ஆதரவுடன் செயற்பட்டுக்கொண்டிருந்தாலும் அப்பகுதி முஸ்லிம்கள் இக்கட்டான சூழ்நிலையிலே வாழ்ந்து கொண்டிருப்பது இன்று நாடே அறிந்த விடயமாகும்.  அந்த வகையில் அவர்களின் பூர்வீக காணி நிலங்களை இராணுவம் பலவந்தமாக அபகரித்து தம் வசப்படுத்திக் கொள்வதை பற்றியும் பெரும்பான்மையின மக்கள் அங்கு அரச ஆதரவோடு அத்து மீறிக் குடியேறுவதைப் பற்றியும் அதன் பிரதிபலனாக முஸ்லிம்களை தமது பாரம்பரிய பிரதேசங்களிலேயே சிறுபான்மையினராக்குவதற்கு மேற்கொள்ளப்படும் சூழ்ச்சிகளைப் பற்றியும் திருமலை மாவட்டத்தில் பள்ளிவாசலொன்று இடித்துத் தரை மட்டமாக்கப்பட்டதைப் பற்றியும் பல வருடங்களுக்கு முன்னர் சவூதி அரசினால் சுனாமியால் பாதிக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகள் இதுவரையிலே அவர்களுக்கு வழங்கப்படாமல் இருப்பதைப் பற்றியும் கல்முனைக்கு ஒரு தமிழ்பேசும் சிறுபான்மையின பிரதேச செயலாளரை நியமிக்க முடியாமல்  போனதைப்பற்றியும் தமக்கு பேரம் பேசும் சக்தி இருந்தும் கூட தட்டிக்கேட்க முடியாமல் தமது சொகுசு வாழ்வுக்காகவும் சுக போகங்களுக்காகவும் அரசாங்கத்தோடு ஒட்டி உறவாடிக் கொண்டு முஸ்லிம்களுக்கு பொய் முகம் காட்டும் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தின் திட்டத்தோடு இம்முறை ஊவா மாகாண முஸ்லிம்களை ஏமாற்ற மீண்டும் களமிறங்கி இருக்கிறார்.

பதுளை வாழ் முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்றுத் தருவதாக ஒப்பந்தம் செய்து கொண்டு பசுத்தோல் போர்த்திய புலியாக ஒன்றும் செய்யாதவர்போல பதுளை மாவட்டத்தில் பட்டிதொட்டியெல்லாம் சுற்றி முஸ்லிம்களின் வாக்குகளை வேட்டையாட வந்திருக்கும் ரவூப் ஹக்கீமுக்கு இம்முறை நல்லதோர் பாடத்தை புகட்ட வேண்டும் என்றார்.

No comments

Powered by Blogger.