Header Ads



காரைதீவு விபுலானந்த சதுக்கத்தில் பள்ளிவாசலா..?

(டாக்டர் என். ஆரிப்)

காரைதீவு விபுலானந்த சதுக்கத்தில் முஸ்லிம் பள்ளிவாசல் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு பொதுபல சேனா உதவ வேண்டும் என்றும் ஸ்ரீலங்கா இந்து சம்மேளனத்தின் தலைவர் என். அருண்காந்த் சுகததாச உள்ளக அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற பொதுபல சேனா அமைப்பின் தேசிய மாநாட்டில் உரையாற்றுகையில் தெரிவித்ததாக ஊடகங்கள் வாயிலாக அறியமுடிகின்றது. 

குறித்த பிரச்சினை என்னவென்று தெரியாமல், அதன் வரலாறு தெரியாமல், முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சுப்போடுவது போல அருண்காந்த் உரையாற்றியிருக்கிறார். சம்பந்தப்பட்ட  இடத்திலே அண்மைக்காலம் வரை ஸியாரமும், பள்ளிவாசலும் அமைந்திருந்தது என்ற உண்மை தெரியாதவராக அல்லது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு முயற்சித்திருக்கிறார். 

அங்கிருந்த ஸியாரமும், பள்ளிவாசலும் கடந்த காலத்தில் நிலவிய பயங்கரவாதப் பிரச்சினையை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு சில பிற்போக்கு எண்ணம் கொண்ட விசமிகளால் அழிக்கப்பட்டது என்பதை காரைதீவு தமிழ் சகோதரர்களே சாட்சி கூறுவார்கள்.

இதற்குப் பிரதானமான ஆதாரம் தான் வயதானாலும் ஞாபகசக்தியில் தொய்வில்லாத நடுநிலையான முற்போக்கு சிந்தனையுள்ள காரைதீவு தமிழ் சகோதர பெரியார்கள். அவர்களிடம் கேட்டுப்பார்த்தாலே போதும். குறித்த காணியில் ஸியாரத்துடனான பள்ளிவாசலும் கடைகளும் இருந்தன என்பதையும், அவ்விடத்தில் தமது நேரத்தை எவ்வாறு கழித்தார்கள் என்ற தமது பசுமையான நினைவுகளையும் தமது மனங்களில் வஞ்சகமில்லாதவர்களாக கொட்டித் தீர்ப்பார்கள். ஆனாலும், இந்த உண்மைகளைச் சொல்வதற்கு தீவிரப்போக்குடைய பிற்போக்கு சிந்தனையுடைய சில அதிகாரமிக்கவர்கள் விடுவார்களா என்பது சந்தேகம் தான்.

மேலும், காரைதீவு முச்சந்தி தைக்காப்பள்ளி சில விசமிகளால் தாக்கப்பட்டமை தொடர்பாக 01.10.1983ல் கல்முனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர், சாய்ந்தமருது ஜூம்மாப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை உறுப்பினர்கள் மற்றும் மாவடிப்பள்ளி, நிந்தவூர், சம்மாந்துறை பள்ளிவாசல்கள் நம்பிக்கையாளர் சபையினரும், தமிழ் தரப்பில் காரைதீவு கோவில் தர்மகர்த்தாக்களும், ஊர்ப்பிரமுகர்களும் கலந்து பேசிய விடயம் சம்பந்தமாக 12.04.1984ம் திகதி தினகரன் பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்தியில், காரைதீவு கிராமசபை முன்னாள் தலைவரும், அம்பாறை மாவட்ட முன்னாள் அபிவிருத்தி சபை உறுப்பினருமான இ. விநாயகமூர்த்தி மற்றும் முன்னாள் காரைதீவு கிராமசபைத் தலைவரும் வைத்தியக்கலாநிதியுமான திரு. எம். பரசுராமன் ஆகிய இருவரும் பேசிய உரையின் தொகுப்பு வருமாறு. 'பக்கீர்ச் சேனைத் தைக்கா மற்றும் காரைதீவு முச்சந்தித் தைக்கா ஆகிய இரண்டும் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலால் பல நூறு வருடங்களாக நிருவகிக்கப்பட்டு வந்துள்ளதாகவும், அத்தைக்காக்களில் நடைபெற்ற விழாக்களில் தாங்களும் கலந்துகொண்டதாகவும, சாய்ந்தமருது மற்றும் காரைதீவு மக்கள் ஆரம்ப காலத்தில் இருந்தே ஒற்றுமையாக வாழ்ந்து வந்ததாகவும் எடுத்துக்கூறி குறித்த தைக்காப்பள்ளிகளை திரும்பக் கட்டிக்கொள்ள சாய்ந்தமருது பள்ளி நிருவாகத்துக்கு எந்தவித தடையும் இல்லை எனவும், மேலும் எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காமல் இருக்க எங்களால் இயன்ற ஒத்துழைப்பைத் தருவோம்' எனவும் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக, காரைதீவைச் சேர்ந்த தமிழ் சகோதரர்களே குறித்த காணி சம்பந்தமான உண்மைத்தன்மையை தங்களது நூலிலேயே அண்மையில்  எழுத்துருவிலே கொணர்ந்துள்ளதையும் யாரால் தான் மறுதலித்திட முடியும்.

காரைதீவு பிரதேச செயலகத்தின் பிரதேச கலாசார பேரவையினால் 20.08.2009ம் திகதி நடைபெற்ற காரைதீவு பிரதேச கலாசார விழாவினை முன்னிட்டு வெளியிடப்பட்ட 'காரணீகம்' எனும் சிறப்ப மலரில் மேற்படி ஸியாரம் சம்பந்தமாக தமிழ் சகோதரர்களால் எழுதப்பட்டுள்ள சில விடயங்கள் வருமாறு,

காரைதீவு ஆலயங்களின் வரலாறு எனும் தொடரில் இந்த மலரின் 192ம் பக்கத்தில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது;. ' .......1830.10.18ம் திகதிய உறுதிப்படி சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலுக்குச் சொந்தமான காரைதீவு முச்சந்தி உள்ள காணியில் இச்சியாரம்  இருந்தது. இங்கு ஆரம்பத்தில் இந்தியாவிலிருந்து வந்த மெஹர்பான் அலிசா கலீபா கலாபத் வலியுல்லாஹ் அவர்கள் குடிசையமைத்து வாழ்ந்து வந்துள்ளார்கள். இவர் மரணமானபின் இவரின் ஜனாஸா இவ்வளவில் அடக்கம் செய்யப்பட்டு ஸியாரமும் அமைக்கப்பட்டது. இதனைப் பராமரிக்க பக்கீர்மார்கள் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலினால் நியமிக்கப்பட்டனர். தற்போது  இக்கட்டிடங்கள் யாவும் அழிந்து சில தென்னமரங்கள் மட்டும் காணப்படுகின்றன'.

மேலும் அந்த சிறப்பு மலரில், 'காரைதீவின் விவசாயப் பாரம்பரியம்' எனும் தலைப்பிலான தனது கட்டுரையில், விவசாயப் போதனாசிரியரான இரா. விஜயராகவன் என்பவர் 103ம் பக்கத்தில் 'அக்காலப்பகுதியிலே இவ்வாறு வண்டில் மாட்டின் மூலம் நெல்லை ஏற்றிவரும் போது தங்கி தேனீர் அருந்த காரைதீவு தைக்கா சந்தியிலே ஒரு பிரபலமான தேனீர்சாலையும் இருந்துள்ளது மூத்த விவசாயிகளின் ஞாபகத்தில் உள்ளது' என்று எழுதியுள்ளார். 

இத்தகைய வலுவான ஆதாரங்கள் இருக்கின்ற போது, ஏதோ அந்த இடத்தில் புதிதாக பள்ளிவாசலொன்றை முஸ்லிம்கள் அமைக்க முனைகின்றார்கள் என்று ஆதாரமற்ற உண்மைக்குப் புறம்பான விடயத்தை அருண்காந்த் சொல்லியிருப்பதன் மர்மம தான்; என்னவோ. 

மேலும், அந்த இடத்தில் ஸியாரமும் பள்ளிவாசலும் இருந்தன என்பதற்கான வலுவான ஆதாரங்கள் இருக்கின்ற போதிலும், இதுவரை சாய்ந்தமருது ஜூம்மாப் பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபையினரோ அல்லது வேறு எந்த முஸ்லிம் தரப்பினரோ குறித்த இடத்தில் பள்ளிவாசலை மீள அமைக்கப்போகிறோம் என்று எந்த சந்தர்ப்பத்திலும் தெரிவித்ததாக ஆதாரங்கள் எதுவுமில்லை. ஆகவே, அருண்காந்த் அவர்கள் எந்தத் தகவல்களின் அடிப்படையில் தமிழ், முஸ்லிம் உறவுகளில் விரிசலை ஏற்படுத்தக்கூடியவாறான கருத்துக்களைத் தெரிவித்தார் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். 

பிரச்சினையைத் திசை திருப்பும் நோக்கில் கற்பனையான கதைகளை அவிழ்த்து விட்டு ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற இப்பகுதி தமிழ், முஸ்லிம் மக்களிடையே குழப்பத்தையும், பிரச்சினையையும் உண்டுபண்ணி அதில் குளிர்காய நினைக்கிறார்கள் என்பதை இரண்டு சமூகமும் நன்றாக உணர்ந்து கொள்ள வேண்டும்.

1 comment:

  1. அப்பம் பங்கிட குரங்கிடம் சென்ற பூனைகளின் கதை தெரியுமா...? இங்கு ஒரு வேறுபாடு என்னவென்றால் இரு பூனைகளுக்குப் பதிலாக ஒரு பூனை மட்டும் குரங்குகளை நாடியிருக்கின்றது.

    நியாயமான ஆதாரங்களோடு நிறுவப்படப்போகும் பள்ளிவாசலை இல்லாமல் செய்வதற்கு இந்தப் பூனை, வஞ்சக குணம் கொண்ட பொதுபலசேனவிடம் சென்று உதவி கேட்பதைப் பார்த்தாலே புரியவில்லையா..அதன் இனக்குரோத உணர்வை?

    அதேவேளை நிந்தவூரில் முன்னர் இருந்து யுத்தகாலத்தில் அழிந்துபோன இந்துக்களின் கோயில்களையும் புனரமைத்து நமது சகோதர இனத்தவர்கள் தடையின்றி வழிபடுவதற்கு நம்மவர்கள் இடம்தரவேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.