Header Ads



ரணில், சஜித் ஒற்றுமையை மக்கள் எதிப்பார்த்து, தற்போது அது நிறைவேறியுள்ளது - ரோஸி சேனாநாயக்க

நாட்டை அபிவிருத்தி பாதைக்கிட்டு செல்லும் நோக்குடன், தூரநோக்கு கொள்கையை கொண்ட தலைவரான ரணில் விக்கிரமசிங்கவையே ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம் என கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் லக் வனிதா அமைப்பின் தலைவருமான ரோஸி சேனாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் வறுமையை போக்க ஐ.தே.கட்சியினாலேயே முடியும். எனவே மக்களின் துயரத்தை போக்க அனைவரும் ஒன்றுப்பட்டு ராஜபக்ஷ அரசாங்கத்தை தோல்வியடைய செய்வோம் என்றும் தெரிவித்தார்.

லக் வனிதா பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று நேற்று சிறிகொத்தாவில் இடம் பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டு சட்டமூலத்தில் வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்துவதற்கே அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு இதனூடாக ராஜபக்ஷ குடும்பத்திற்கு 40 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் நாட்டின் அபிவிருத்தியின் முக்கியத்துறையான கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு குறைந்தளவு நிதித்தொகையே ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமடையும். தற்போது நாட்டு மக்கள் மூவேளை உண்ண உணவின்றி வாழ்கின்றனர். பதுளை மக்களின் வாழக்கை இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும். நாம் ஊவாவில் பல பிரதேசங்களுக்கு விஜயம் மேற்கொண்ட போது இதனை கண்கூடாக கண்டுக்கொண்டோம். ஒரு சீருடையை இரண்டு சகோதராகள் பரிமாறிக்கொள்ளும் நிலைமையே பதுளையில் காணப்படுகிறது.

நாட்டில் யுத்தம் நிறைவடைந்து ஐந்து வருடங்கள் கடந்தும் நாட்டு மக்கள் நிம்மதியின்றி வாழ்கின்றனர். நாட்டில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரித்த வண்ணமே காணப்படுகின்றது. பெண்களுக்கான உரிமைகள் பறிக்கப்படுகின்றது. இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையையும் அரசு முன்னெடுக்கவில்லை.

எனவே நாட்டின் அபிவிருத்திற்கு தற்போது மாற்றம் அவசியம். ஐ.தே.கட்சியின் ஆட்சியை மக்கள் எதிர்ப்பார்க்கின்றனர். 1977 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்திற்கு வழிவகுத்தது பெண்களேயாகும். கட்சியில் ரணில்,சஜித் ஒற்றுமையை மக்கள் எதிப்பார்த்தனர். தற்போது அது நிறைவேறியுள்ளது. எனவே நாம் ஒன்றுப்பட்டு ஐ.தே.கட்சியின் வெற்றிக்கு துணைப்புரிய வேண்டும்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சியின் வேட்பாளராக ரணில் விக்கிரமசிங்கவை களமிறக்கவுள்ளோம். எனவே இந்நாட்டின் அபிவிருத்திற்கு அவருடைய தூர நோக்கு கொள்கையே அவசியமெனவும் அவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.