Header Ads



முஸ்லிம்களை நேர்ச்சை செய்துவிட்ட கோழிகள் என்று நினைக்கிறார்கள் - ரவூப் ஹக்கீம்

தமிழ் அரசியல் தலைமைகள் ஓரணியில் ஒன்றுபட்டிருக்கும் நிலையில், தமிழ் தலைமைகள் முஸ்லிம் அரசியல் தலைமைகளையும் அரவணைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வரும் நிலையில், முஸ்லிம்களுக்கு எதிராக இத்துணை அநியாயங்களும், அட்டூழியங்களும் நடக்கும் பொழுது எமது தலைமைகள் ஏன் ஒற்றுமைப்பட முடியாது என்ற கேள்வி எழுந்ததுள்ளது என தெரிவித்த ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம்  ஆகையால்  தான் ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் மக்கள் காங்கிரஸோடு இணைந்து போட்டியிடத் தீர்மானித்ததாகவும், கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க கூடாது என்ற மனோபாவம் பலரிடத்திலும் இருந்தாலும், இந்த இக்கட்டான காலகட்டத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் கூறினார். 

ஊவா மாகாண சபைத் தேர்தலில், பதுளை மாவட்டத்தில் ஜனாநாயக ஐக்கிய முன்னிணியின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வெலிமடைத் தொகுதியில் சில்மியாபுரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.  அக் கூட்டத்தில் உரையாற்றும் போது அமைச்சர் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,    

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டத்தில் தனது மரச் சின்னத்தில் அல்லாது ஜனாநாயக ஐக்கிய முன்னணியின் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிடுவது குறித்து பலவிதமான விமரிசனங்கள் எழுந்துள்ளன. எங்களது கட்சிக்குள்ளேயே இதனை ஜீரணக்க முடியாதவர்கள் பலர் இருக்கின்றார்கள். 

தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்தே பதுளை மாவட்டத்தில் உள்ள  பள்ளிவாசல்களில் ஊர் மக்களுடனும், உலமாக்களுடனும் நடாத்திய கலந்தாலோசனையின் போது ஏனைய முஸ்லிம் கட்சிகளையும் இணைத்துக்கொண்டு அரசாங்கத்தோடு அல்லாமல் வேறாக போட்டியிடுமாறு எங்களிடம் வலியுறுத்தப்பட்டது. 

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும், அரசாங்கத்தின் தலைமைகளும் தனித்துப் போட்டியிடுவது என்ற எங்களது நிலைப்பாடு குறித்து அச்சப்படுகின்ற ஒரு நிலவரம் உருவாகியிருக்கிறது. அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் இப்போதைக்கு இதுவொரு சாதகமான விடயமாகத் தென்படலாம். அரசாங்கத்திற்கு சார்பாகவே நாங்கள் இங்கு போட்டியிடுகிறோம் என்று இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் இருவரே கூறி, எங்களைப் கொச்சப்படுத்துகின்ற முயற்சியில் இறங்கியிருந்தனர். 
முஸ்லிம்களின் ஒற்றுமை குறித்த விடயத்தில் இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் மத்தியில் நடைபெற்ற கருத்தாடலொன்றின் போது அடுத்து வரவிருக்கின்ற தேசிய மட்டத் தேர்தலின் போது முஸ்லிம்களின் அரசியல் பேரம் பேசும் சக்தியை அதிகரிப்பதற்கான ஒரு முன் ஆயத்தமே எமது இந்த முயற்சி என்று அவர்களுக்குள்ளேயே ஒருவிதமான அச்சம் மேலோங்கியிருப்பதாக தெரிய வருகின்றது. 

அந்தப் பின்னணியில் தான் இன்று ஐக்கிய தேசியக் கட்சியினர் எங்களைப் பற்றி விமர்சிப்பதாகவும் தெரிகிறது. ஐக்கிய தேசியக் கட்சியினரைப் பொறுத்தவரை இந் நாட்டு முஸ்லிம்களை தங்களது கட்சிக்கு நேர்ச்சை செய்துவிட்ட கோழிகள் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். 

இவ்வாறு முஸ்லிம்களின் வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு கிடைக்காமல் போனால், அவர்களால் ஏனைய மக்களின் வாக்குகளை திரட்டுவது அறவே இயலாத காரியம்   என்ற முடிவுக்கு வந்து அதில் பிழைப்பு நடத்துகின்ற கட்சியாக அது மாறியிருக்கிறது. முஸ்லிம்களின் வாக்குகளை சூறையாடுவதற்காக பலவிதமான அணிகளை ஐக்கிய தேசியக் கட்சியினர் களமிறக்கியிருக்கிறார்கள். 

எந்தக் காரணத்தைக் கொண்டும்  தனது சின்னத்தை விட்டுக்கொடுக்க விரும்பாத முஸ்லிம் காங்கிரஸ் பதுளை மாவட்டத்தில் இந்த முடிவுக்கு வந்ததற்கான காரணம், அதுவும் இந்தக் கட்டத்தில் வந்திருப்பதற்கான காரணம் முஸ்லிம்களின் அரசியல் செல்வாக்கை சிதறடிக்க விடாமல், அடுத்து வருகின்ற ஒரு தேசியத் தேர்தலின் போது நாங்கள் பெறுமானமுள்ள ஒரு சக்தியாக மாற வேண்டும் என்பதனால் ஆகும். குறிப்பாக அண்மைக்காலமாக முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் அட்டகாசங்களை பார்க்கும் போது அரசாங்கம் இதற்கு அனுசரணை வழங்குகின்ற பாங்கில் நடந்து கொள்ளுகின்றது என்பதை நாங்கள் தெளிவாகப் பார்க்கிறோம். 

அந்தப் பின்னணியில் அதனை முறியடிப்பதற்கு நாங்கள் இதுவரையும் இந்த அரசாங்கத்திற்குள் ஓர் எதிர்க்கட்சியாக செயல்பட்ட ஒன்றாகத்தான் முஸ்லிம் காங்கிரஸ் தன்னை அடையாளப்படுத்தி வந்திருக்கிறது. அதனை இன்னொரு படி மேற்கொண்டு சென்று அரசாங்கத்தோடு இதுவரை ஒத்துழைத்து வந்த முஸ்லிம் அமைச்சர் இன்னொருவரை வெளியில் கொண்டு வந்திருக்கிறோம் என்ற விடயம் அடுத்த கட்டமாக எல்லா முஸ்லிம் தலைமைகளையும் ஒற்றுமைப்படுத்துவதற்கான ஆரம்ப வித்தைதான் இங்கு விதைத்திருக்கிறோம். 

ஆனால், இதை சந்தேகக் கண்கொண்டு பார்க்கின்ற ஓரு நிலவரம் குறிப்பாக அரசாங்கம் தனது அணியில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை நிறுத்தாததன் காரணமாக எழுந்துள்ளது. அரசாங்கத்தால் முஸ்லிம் ஒருவரை வேட்பாளராக நிறுத்த முடியாமல் போனது அதனது வங்குரோத்து தனத்தை தான் காட்டுகிறது. 

முஸ்லிம் காங்கிரஸ், மக்கள் காங்கிரஸ் என்ற கட்சிகளின் அமைச்சர்கள் தமது வேட்பாளர்களை பதுளையில் கூட்டாக களமிறக்கியிருப்பது அரசாங்கத்திற்கு எதிராக முஸ்லிம்கள் இருக்கிறார்கள் என்பதால் அந்த வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சிக்கு போகாமல் தடுக்கின்ற ஒரு வியூகமாகத்தான் இதனை அரசாங்கமே செய்திருக்கின்றது என்ற குற்றச்சாட்டை பலரும் சொல்லி வருகிறார்கள். 

அரசியல் விமர்சகர்கள் இதனை வித்தியாசமாக கூறுகிறார்கள். அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவால் சாதிக்க முடியாது போன எங்களை ஒற்றுமைப்படுத்தும் முயற்சியை மேற்கொண்ட சக்தி எதுவென்று கேள்வியெழுப்பியிருக்கிறார்கள். 

முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் அட்டகாசங்களையும் அடாவடித்தனங்களையும் கண்டும் காணாமல் இருக்கும் அரச தலைமையின் அலட்சியப்போக்கு மற்றும் அனுதாபத்தையாவது தெரிவிக்க வக்கில்லாமல் இருக்கின்ற ஆட்சித் தலைமையின் போக்கு என்பன முஸ்லிம்களை ஆத்திரமடையச் செய்துள்ளது. 

தமிழ் அரசியல் தலைமைகள் ஓரணியில் ஒன்றுபட்டிருக்கும் நிலையில், தமிழ் தலைமைகள் முஸ்லிம் அரசியல் தலைமைகளையும் அரவணைத்துக்கொண்டு செல்ல வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வரும் நிலையில், முஸ்லிம்களுக்கு எதிராக இத்துணை அநியாயங்களும், அட்டூழியங்களும் நடக்கும் பொழுது எமது தலைமைகள் ஏன் ஒற்றுமைப்பட முடியாது என்ற கேள்வி எழுந்தது. அதனால் தான் இவ்வாறான முடிவை எடுப்பதற்கான நிலைமை ஏற்பட்டிருக்கிறது. கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் சேர்க்க கூடாது என்ற மனோபாவம் பலரிடத்திலும் இருந்தாலும், இந்த இக்கட்டான காலகட்டத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஒற்றுமைப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கிறது. 

இதற்கு பதுளை மாவட்ட முஸ்லிம்கள் வழிகோலி இருக்கிறார்கள் என்ற விடயம் தேசிய மட்டத்தில் எமது ஒற்றுமைக்கு  காரணமாக இருக்கப் போகிறது. இனிமேலும் வரட்டு கௌரவத்திற்காக நாங்கள் ஒன்று படாமல் இருக்க முடியாது. 

அரசாங்கத்தைப் பொறுத்தமட்டில் நேற்று பதுளையில் நடந்த கூட்டத்தில் ஜனாதிபதி இஸ்லாமிய நாடுகளில் உருவாகி வரும் பயங்கரவாதத்தைப் பற்றி கூறியிருக்கிறார். இஸ்லாமியத் தீவிரவாதம் மிக மோசமான நிலைமை ஏற்படுத்தியிருக்கின்றது என்று பதுளை மாவட்டத்தில் வந்து அவர் பேச வேண்டியதன் பின்னணியைப் பார்க்க வேண்டும். அவரது சகோதரர் நடத்துகின்ற பாதுகாப்பு மாநாடுகளில் இந்த நாட்டுக்குள் இஸ்லாமியத் தீவிரவாதம் ஊடுருவி விட்டதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட நிலையில் அதை பகிரங்கமாக எதிர்த்து நான் அறிக்கை விட்டிருந்தேன். இந்த நாட்டுக்குள் அவ்வாறான இஸ்லாமியத் தீவிரவாதம் இருந்தது கிடையாது. ஆனால், எங்களைத் தீவிரவாதிகளாக காட்டினால் தான் மிக மோசமான முன்னெடுப்புகளை பல சக்திகளும் செய்து கொண்டிருக்கின்ற நிலைமையில் அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுவது பற்றி சர்வதேச நாடுகள் அச்சப்பட வேண்டும் என, ஏனென்றால் எதற்கெடுத்தாலும் மேற்குலகம் தான் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது என்ற உண்மை நிலையை திசை திருப்பிவிட வேண்டும் என்பதற்காக மிக அபாண்டமான விடயங்களையும், அடிப்படையே இல்லாத விசயங்களையும் நாட்டுத் தலைமையே பேசுவது என்னைப் பொறுத்தவரையில் மிகவும் ஆபத்தான சூழல் என்பதை நாங்கள் உளம் கொள்ள வேண்டும். 

இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிராக நடந்த செயல்களை ஆராய்வதற்காக இஸ்லாமிய நாடுகள் அடுத்த மாதம் ஒரு விசாரணைக் குழுவை அனுப்புவதற்கான முன்னெடுப்புகளை முஸ்லிம் காங்கிரஸ் மேற்கொண்டிருக்கின்ற நிலையில் முஸ்லிம்களின் ஒற்றுமை மிக முக்கியமானது. அரசியல் ரீதியாக  பிரிந்திருப்பதால் நாம் எதையும் சாதிக்க முடியாது. 

தேர்தலில் போட்டியிட்டு பின்னர் அதில் வெற்றி பெறுகின்ற உறுப்பினரை கொண்டுபோய் அரசாங்க பக்கத்தில் அமர்த்தப் போகிறார்கள் என்றுதான் ஐக்கிய தேசியக் கட்சியினரும், அவர்களின் அடிவருடிகளும் பேச ஆரம்பித்தார்கள். அதற்காகத்தான் எமது வேட்பாளர்களை அவ்வாறு நடக்க மாட்டாது என பதுளை உலமாக்கள் மத்தியில் வாக்குறுதி செய்ய வைத்தோம். அதைக் கூட இப்பொழுது சில சில்லறை இயக்கங்கள் விமர்சிக்கின்றனர். 

அதாவது, காத்தான்குடியைத் தளமாகக் கொண்ட ஒரு சில்லறை இயக்கம், குட்டி இயக்கத்தினர் தாங்கள் ஏதோ அரசியல் சித்தாந்திகள் மாதிரி வேதாந்தம் பேசிக்கொண்டு பதுளையில் எங்களுக்கு எதிராக வீடு வீடாக துண்டுப் பிரசுரங்களை விநியோகித்துக்கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சி இவ்வாறான சில்லறைக் கூட்டத்தோடு போய் உடன்படிக்கை செய்கின்ற அளவுக்கு வங்குரோத்து நிலைமைக்கு வந்தது குறித்து பரிதாபப்படுகிறோம். ஆனானாப்பட்ட கட்சிக்கு இதைவிட கேவலம் இருக்க முடியாது. யாரோடு போய் உடன்படிக்கை செய்கிறோம் என்று தெரியாமல், காத்தான்குடி நகரசபையிலேயே உருப்படியாக எதையும் சாதிக்க முடியாத கூட்டம் தேசிய மட்டத்தில் பெரிய சக்தி என்று காட்டிக்கொண்டு ஐக்கிய தேசியக் கட்சி தலைவர், செயலாளர்  ஆகியோருடன் ஒன்றாக உட்கார்ந்து கைச்சாத்திடுகின்ற நிலைமைக்கு வருவதானால் அந்தக் கட்சி எந்தளவு வங்குரோத்து நிலைமைக்கு போய் இருக்கின்றதென்பதை பார்த்துக்கொள்ளுங்கள். 

வெற்றி பெற்றால் ஊவா மாகாணத்தில் பதுளை மாவட்டத்தில் தங்களுக்கொரு போனஸ் ஆசனத்தை தரவேண்டுமென இந்தச் சில்லறை இயக்கம் கேட்டிருக்கிறது. ஐக்கிய தேசியக் கட்சி வெல்லப் போவதில்லை என்று தெரிந்து மிக சந்தோசமாக அவர்கள் கேட்டதை எழுதிக் கொடுத்திருக்கிறார்கள்.  என்னைப் பொறுத்தமட்டில் புத்தளத்திலும், குருநாகலிலும் ஐக்கிய தேசியக் கட்சியால் ஒரு முஸ்லிம் வேட்பாளரை வெல்ல வைக்க முடியாது விட்டால், அவற்றை விடக் குறைந்த முஸ்லிம் வாக்குகளைக் கொண்ட பதுளையில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவரை அந்தக் கட்சியால் எவ்வாறு வெல்ல வைக்க முடியும். ஆனால், புத்தளத்திலும், குருநாகலிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டு வடமேல் மாகாண சபையில் இரண்டு ஆசனங்களைப் பெற்றிருக்கிறோம். 

சென்ற மேல் மாகாண சபைத் தேர்லிலும், தென் மாகாண சபைத் தேர்தலிலும் அரசாங்கத்திற்கு 18 ஆசனங்கள் குறைந்தன. அந்தப் 18 ஆசனங்களும் ஜே.வி.பிக்கும் சரத் பொன்சேகாவின் கட்சிக்கும் தான் சென்றன. |ஐக்கிய தேசியக் கட்சி ஓர் ஆசனத்தையாவது கூட்டிக்கொள்ள முடியவில்லை.  நாம் தொடர்ந்தும் கூறி வருவது போன்று அரசாங்கத்தைப் பலப்படுத்துவதோ, அல்லது ஐக்கிய தேசியக் கட்சியையோ, வேறெந்தக் கட்சிகளையோ பலவீனப்படுத்துவதோ எமது நோக்கமல்ல. முஸ்லிம்களை பலப்படுத்துவதே எமது ஒரே நோக்கமென்பதை  திட்டவட்டமாக கூறிக்கொள்கிறேன் என்றார்.   

2 comments:

  1. திருவாளர் ஹகீம் அவர்களே, மிகவும் மட்டமான பேச்சு. அவர்கள் சில்லறைகள் அல்ல. உங்களதும் உங்களை சுற்றி இருக்கும் சுயநல கும்பல்களினதும், பணத்துக்கும் பதவிக்கும் சோரம் போய் முஸ்லிம்களின் உரிமைகளை சலுகைகளாக மாற்றி சூடு சுரணை அற்று அரசியல் நடத்தும் உங்களுக்கான மாற்று இயக்கம் என்பதை கவனத்தில் கொள்ளவும்.

    ReplyDelete
  2. மஹிந்தாயின் ""கபடி ""அரசியல் தந்திரம் ....

    சிலாவத்தில் மண்ணெண்ணை உயர்வுக்கு போராட்டம் வெடி வைத்தார்கள் .. ...கட்டுநாயகாவில் போராட்டம் வெடி வைத்தார்கள் .. ..ஆனால் வூவாவில் ஒட்டுக்காக பெற்றால் விலை குறைப்பு அதுவும் ஐந்து ரூபாய் ..சால்வை தேர்தல் வெண்டால் நிச்சயம் விலயை கூட்டுவார்கள் ..தோல்வி யடைந்தால் இன்னும் குறைப்பார்கள் ..... இதை தலைக்கு எடுத்து உங்கள் வாக்குகளை வெத்திலைக்கும் டபல் வெத்திலைக்கும் எதிராய் போட்டால் சரி...

    ReplyDelete

Powered by Blogger.