Header Ads



இஸ்ரேலுக்கு அமெரிக்கா போன்று, இலங்கைக்கு சீனா..!

"சீன ஆட்டச்சீட்டை' அதிகளவுக்கு விளையாடும் போக்கை இலங்கையின் கொள்கை வகுப்பாளர்கள் கொண்டிருப்பதாக ஜெனீவாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக தெரிவித்துள்ளார்.

இந்தியாவுக்கு சமனான எதிரிடையாக சீனா செயற்படுமென்ற   எண்ணப்பாட்டை இலங்கையின் பாதுகாப்பு நிர்வாகத்துறை கொண்டிருப்பதாக தோன்றுகிறது என்று அவர் கூறியுள்ளதாக "இந்து' பத்திரிகை நேற்று புதன்கிழமை தெரிவித்திருக்கிறது. "அந்தப் புரிந்துணர்வில்  மிகைப்படுத்தல் இருக்கிறது' என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

"கடந்த சில வருடங்களாக இந்திய  சீன உறவுகள் மேலெழுந்து வருகின்ற நிலைமையில், "சீன ஆட்டச்சீட்டின்' பருமன் வேகமாக குறைவடைந்து வருகிறது. குறிப்பாக பிரதமர் நரேந்திரமோடி  பொறுப்பேற்றுக்கொண்டபின்  பருமன் சுருங்கி வருகிறது' என்று அவர் கூறியுள்ளார். இலங்கையானது மற்றொரு பாகிஸ்தானாக விளங்குமென்ற அதாவது பொருளாதார, அரசியல் வாழ்க்கையிலும் பார்க்க இராணுவ விடயங்கள் மேலோங்கியதாக இருக்குமென்ற எண்ணப்பாட்டை பாதுகாப்பு நிர்வாகம் கொண்டிருந்ததாகவும் அல்லது இஸ்ரேலுக்கு அமெரிக்கா  போன்று இலங்கைக்கு சீனா இருக்கிறது என்ற எண்ணப்பாட்டை கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை சீனா வழங்க முன்வந்துள்ள உதவியின் தன்மையையும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன்

அபிவிருத்தி தொடர்பான பொருளியலாளரும் யாழ்ப்பாணத்தை தளமாகக் கொண்ட பருத்தித்துறை அபிவிருத்தி நிறுவனத்தின் தலைமை ஆய்வாளருமான முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் கூறுகையில், சீனாவுடனான இலங்கையின் செயற்பாடுகள் குறித்து நம்பிக்கையீனத்தையே கொண்டிருப்பதாக, கூறியுள்ளார்.
பொருளாதார அவசரத் தேவைப்பாடுகளை அரசியல் ரீதியான அவசரத் தேவைப்பாடுகள்  மேவிச் சென்றுவிடுமென நம்பிக்கையீனத்தை அவர் கொண்டிருக்கிறார்.

அதிகளவிலான பொருளாதார நடவடிக்கைகள் அரசியல் மயமாக்கப்பட்டிருந்தமை தொடர்பான அவதானிப்பைக் கொண்டிருக்கும் அவர், மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களித்ததையடுத்து 2012 இலிருந்து இந்தியத் திட்டங்களின் முன்னேற்றம் தாமதம் அடைந்ததாக  கூறியுள்ளார்.

"வீடமைப்புத்திட்டம் 2010 இல் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் அதன் முன்னேற்றம் மெதுவாகவே உள்ளது. அதேபோன்று வடக்கு புகையிரதப்பாதையை பூர்த்தி செய்வதையும் அரசாங்கம் வேண்டுமென்றே தாமதப்படுத்துகின்றதாகத் தோன்றுகிறது' என்று அவர் கூறியுள்ளார். 2014 இல் தீர்மானத்தில் வாக்களிப்பதை இந்தியா புறக்கணித்திருந்தது. இலங்கை  இந்திய இராஜதந்திரத்தை மீளச்சரி செய்வதற்கான செயற்பாடாக ஆய்வாளர்கள் இதனை வகைப்படுத்துகின்றனர்.

பொருளாதார ரீதியான நடவடிக்கைகள் மிகக் கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டுமென்று சர்வானந்தன் அழுத்தி உறைத்திருக்கிறார். சீனாவின் வர்த்தகக் கடன்கள் அதிக வட்டிவீதத்தை கொண்டவையெனவும், அதேசமயம் இந்தியாவின் உதவியானது கணிசமான  அளவு மானியத்தை உள்ளடக்கியதாக இருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"எமது (இலங்கையின்) வளர்ச்சி, கடன் தொடர்பாக பாரதூரமான சிக்கல்கள் உள்ளன' என்று அவர் கூறுகிறார். 2013 டிசம்பரில் சீனாவுக்கான இலங்கையின் நிலுவையான கடன்  196 பில்லியன் ரூபாவென "சண்டேரைம்ஸ்'பத்திரிகை தெரிவித்திருந்தது.

சீனாவுடன் முழு அளவில் செயற்பாடுகளில் ஈடுபடுவது தொடர்பாக தயான் ஜயதிலக கூறுகையில்; "சீனாவின் அங்கமாக தந்திரோபாய செயற்பாட்டில் ஈடுபடுவதன் மூலம் இலங்கை அதனை வெளிப்படையாக அனுபவிக்க முடியாது என்பதை இலங்கையின் தீர்மானம் மேற்கொள்வோர்  விளங்கிக் கொள்வதற்கான காலம் இதுவெனத் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவோ  சீனாவோ  ஒருவரின் நலன்சார்ந்த விடயங்களில் மற்றவர் உள்நுழைவதில்லை என்பது அவர்களின் அடிப்படை தந்திரோபாயம் என்பதையும் இலங்கை  புரிந்துகொள்ள வேண்டும் என்று தயான்  ஜயதிலக தெரிவித்திருக்கிறார்.

No comments

Powered by Blogger.