Header Ads



எபோலா அபாயம்...! தப்பிப்பது எப்படி..?

சென்ற நூற்றாண்டில் எய்ட்ஸ் என்னும் எமன் வந்து உலக நாடுகளை ரொம்பவே மிரட்டியது. அதற்கு கடிவாளம் போட்டு ஒரு வழியாகக் கட்டு ப்படுத்திவிட்டோம். அந்த மகிழ்ச்சியைக் கொண்டாடுவதற்குள் ‘எபோலா’ (ணிதீஷீறீணீ) என்னும் புதிய எமன் வந்து இந்த நூற்றாண்டில் நம்மை மிரட்டத்  தொடங்கிவிட்டது. நதிக்கரையில் பிறந்த நோய்!

எபோலா வைரஸ் நோய் 1976ல் சூடான் மற்றும் காங்கோ நாடுகளில் ஒரே நேரத்தில் தோன்றியது. காங்கோ நாட்டின் எபோலா நதிக்கரையில்  முதன்முதலில் இது பரவிய காரணத்தால், இந்த நோயை ஏற்படுத்துகின்ற வைரஸ் கிருமிக்கு ‘எபோலா வைரஸ்’ என்று பெயரிடப்பட்டது. உகாண் டா, கேபான், சூடான், காங்கோ உள்ளிட்ட பல ஆப்பிரிக்க நாடுகளில் அவ்வப்போது இந்த நோய் பரவுவதும்,இடையிடையே பதுங்குவதுமாக உள்ளது.

மீண்டும் தாக்கும் எபோலா!

2013 டிசம்பரில் கினி நாட்டின் தென்கிழக்கு வனப்பகுதியில் இந்த நோய் மீண்டும் தலைதூக்கியது. அங்கிருந்து லைபீரியா, நைஜீரியா, சியாரா  லியோன் ஆகிய மேற்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு வேகமாகப் பரவி இருக்கிறது. உலக சுகாதார நிறுவனத்தின் கணக்கின்படி, ஆகஸ்ட் 6ம் தேதி வரை  2 ஆயிரத்துக்கும் அதிக நபர்களுக்கு இந்த வைரஸ் தொற்றியிருக்கிறது. இவர்களில் 961 பேர் சிகிச்சை பலனில்லாமல் இறந்துவிட்டனர். இந்தியா உள் ளிட்ட மற்ற நாடுகளுக்கும் இது பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த நோய் வந்துவிட்டால்  90 சதவிகிதம் இறப்பு உறுதி என்பதால், உலக நாடுகள் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது என்றும் அந்த நிறுவனம் எச்சரித்துள்ளது. 

எபோலா வைரஸ் எப்படி இருக்கும்?

பார்ப்பதற்கு நாகப்பாம்பு படம் எடுத்த மாதிரி இருக்கின்ற எபோலா வைரஸ் கிருமி ‘ஃபிளோ வைரஸ்’ குடும்பத்தைச் சேர்ந்தது. இதில் ஐந்து வகைச்  சிற்றினங்கள் (Species) உள்ளன. இவற்றில் மூன்று வகை மட்டும் மிகுந்த ஆபத்தானவை. ஒரு வைரஸ் கிருமி 80 நானோமீட்டர் விட்டம் கொண்டது. இதை  மின்னணு நுண்ணோக்கி வழியாகவே பார்க்க முடியும்.  பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மேற்கு ஆப்பிரிக்காவில் பரவிய இந்தக் கிருமிகள் ஆரம்பத்தில் ஆடு, மாடு, பன்றி, மான், எலி, குரங்கு போன்ற  விலங்குகளுக்குப் பரவின. பிறகு, இவை மனிதர்களையும்  விட்டுவைக்கவில்லை. 1976 ஆகஸ்ட் 26 அன்று சூடான் நாட்டில் ஒரு பள்ளி ஆசிரியரை  முதன்முதலில் கொன்ற இந்த வைரஸ் நோய், இதுவரை உலக அளவில் 2,600க்கும் மேற்பட்டவர்களைப் பலிவாங்கியுள்ளது. எபோலா வைரஸ் ஏற்ப டுத்தும் இந்தக் கொடிய நோய்க்கு ‘கிரிமியன் காங்கோ ரத்தப்போக்குக் காய்ச்சல்’ என்றுதான் ஆரம்பத்தில் பெயர் வைத்திருந்தனர். 2002லிருந்து  இதற்கு ‘எபோலா வைரஸ் காய்ச்சல்’ (Ebola Virus Disease) என்று பெயரிட்டுவிட்டனர்.

எப்படிப் பரவுகிறது?

ஆப்பிரிக்கக் காடுகளில் வௌவால் கறிக்காக வேட்டையாடப்படும்போது எபோலா காய்ச்சல் பரவுகிறது. இந்த நோய்க் கிருமிகள் பாதித்த கால்ந டைகளை உண்ணுதல் மற்றும் அவற்றின் கழிவுகள் உடலில் படுதல் வழியாகவும் இது மனிதர்களுக்குப் பரவுகிறது. இந்தக் கிருமித் தொற்றுள்ள சிம் பன்சி குரங்கு, கொரில்லா குரங்கு போன்றவையும் எபோலா நோயைப் பரப்புகின்றன. இந்த நோயால் பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிப் பழகி னால், அவருடைய இருமல், சளி, தும்மல், உமிழ்நீர், சிறுநீர், ரத்தம், மலம், வியர்வை, விந்து போன்ற உடல் திரவங்கள் மூலம் மற்றவர்களுக்கும் இது  பரவி விடும். இந்த நோய் வந்தவருக்கு உதவுகிறவர்கள், சிகிச்சை தரும் மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணி உதவியாளர்களுக்கும் இந்த நோய் பரவ அதிக வாய்ப்புண்டு. நோயாளியை மருத்துவம னைக்கு அழைத்து வருபவர்கள் மற்றும் வீட்டில் வைத்துப் பராமரிக்கிறவர்களுக்கும் இந்த நோய் தொற்றிவிடலாம். இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்கள், அது தெரியாமல் வெளிநாடுகளுக்குச் சென்றால், அவர்கள் மூலம் இந்த நோய் அந்த நாடுகளுக்கும் பரவ வாய்ப்புகள் அதிகம்.

அறிகுறிகள் என்னென்ன?

இந்த வைரஸ் கிருமிகள் உடலில் நுழைந்தால், அதன் விளைவுகள் வெளியில் தெரிய2 முதல் 21 நாட்கள் வரை ஆகும். திடீரென கடுமையான காய்ச்சல் ஏற்படும். கடுமையான தலைவலி, மூட்டுவலி, தசைவலி, தொண்டைவலி, அதீத  களைப்பு போன்றவை நீடிக்கும். நோய் தீவிரமடையும்போது, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, அம்மைக் கொப்புளங்கள், கடுமையான இருமல்,  நெஞ்சுவலி போன்ற தொல்லைகளும் உண்டாகும். இறுதியாக, கல்லீரல், சிறுநீரகம், ரத்த செல்கள் போன்றவை பாதிக்கப்பட்டு, வாய், காது, மூக்கு, ஆசனவாய், சிறுநீர்ப்புறவழி போன்ற உடலின் ஒவ்வொரு துளையிலிருந்தும் ரத்தம் வெளியேறும். இதுதான் மிகவும் ஆபத்தானது... உயிருக்குஉலை வைப்பது.

என்ன பரிசோதனை?

இதன் அறிகுறிகள் சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களின் அறிகுறிகளை ஒத்திருப்பதால் ஆரம்ப நிலையில் இதைக் கண்டு பிடிப்பது  சற்றே சிரமம்தான். என்றாலும், எலிசா, பிசிஆர், கல்ச்சர் மற்றும் ஆன்டிஜென் பரிசோத னைகள் மூலம் இந்த நோயை உறுதிப்படுத்தலாம். தமிழகத்தில் இந்தப் பரிசோதனைகள் நகர்ப்புறங்களில் உள்ள சிறப்பு மருத்துவமனைகளில் மட்டுமே சாத்தியம். இவற்றுக்கான செலவும் அதிகம். இந்தியாவில் புனேயில் இருக்கும் ‘நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் வைராலஜி’யில்தான் இந்த நோயை நூறு  சதவிகிதம் உறுதி செய்ய முடியும். இதற்கு சில நாட்கள் ஆகும். அதற்குள் நோய் முற்றி நோயாளியின் உயிருக்கு ஆபத்து நெருங்கலாம்.

என்ன சிகிச்சை?    

இந்த நோயால் பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை அளிக்க அங்கீகரிக்கப்பட்ட மாத்திரை மருந்தோ, ஊசியோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.  இதற்குத் தடுப்பூசியும் இல்லை. எனவே, இதற்குச் சிகிச்சை தருவது என்பதும் சிக்கலானது. இப்போதைக்கு நோயாளியின் அறிகுறிகளைக் குறைப்பது  மட்டுமே இதன் சிகிச்சை முறையாக உள்ளது. காய்ச்சலைக் குறைக்க மருந்துகள் தருகிறார்கள். உடலில் திரவங்கள் குறைந்தால், குளுக்கோஸ் ஏற்றுகி றார்கள்.  ரத்த அழுத்தம் சீராக இருக்க சலைன் ஏற்றுகிறார்கள்...  ரத்தம் இழப்பு உண்டானவர்களுக்கு ரத்தம் செலுத்துகிறார்கள். மூச்சுத்
திணறல் உள்ளவர்களுக்கு ஆக்ஸிஜன் செலுத்துகிறார்கள். ஆன்டிபயாடிக் மருந்துகளைத் தருகிறார்கள். என்றாலும், இப்போது பரவியுள்ள வைரஸ் வகை மிகவும் உக்கிரமானது என்பதால்,  இந்தச் சிகிச்சைகளுக்கெல்லாம் பலன் கிடைப்பதில்லை... நோயாளிக்கு மரணம் நெருங்குவதைத் தடுக்க முடிவதில்லை.

தப்பிப்பது எப்படி?

இந்த நோய்த்தொற்று இருப்பவருடன் நெருங்கி உடல் ரீதியாக எந்த உறவும் வைத்துக்கொள்ளக் கூடாது.  கை குலுக்கக் கூடாது. கைகளை சோப்பி னால் அடிக்கடி சுத்தமாகக் கழுவ வேண்டும். ஆடு, மாடு, பன்றி, பிற கால்நடைகள், குரங்கு, எலி போன்ற விலங்குகள் கடிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இவற்றின் இறைச்சியை சாப்பிடக் கூடாது. கால்நடைப் பண்ணைகளையும் பன்றிப்பண்ணைகளையும் சுத்தமாகப் பராமரிக்க வேண்டும். இந்த நோய்த் தாக்குதலால் பலியானவரின் உடலை மருத்துவரின் தகுந்த அறிவுரையுடன் அப்புறப்படுத்த வேண்டும். இந்த நோய்க்கு சிகிச்சை தரும் மருத்துவர்கள் மற்றும் உதவியாளர்கள் கையுறைகள், முகக் கவசம், உடலை மூடும் உடைகள்,  சுத்திகரிப்புத் திரவம் போன்றவற்றைப் பயன்படுத்துவது மிக அவசியம்.  அரசின் கடமை! 

எபோலா உள்ளிட்ட வைரஸ்களை உடனடியாகக் கண்டறியக்கூடிய அதிநவீன பரிசோதனைக் கூடங்களை தமிழகத்தின் முக்கிய நகரங்களில் நிறுவ வேண்டும். மக்களிடம் இந்த நோய் குறித்து விழிப்புணர்வு ஊட்டி, நம்பிக்கை அளிக்க வேண்டும். ஊடகங்கள் இந்தக் காய்ச்சல் பற்றி பீதி கிளப்புவதைத் தடுக்க வேண்டும். உயர் மருத்துவக் குழுவை உடனடியாக அமைத்து,  வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகளை முறையாகப் பரிசோதிப்பது, நோய் அறிகுறிகள் தெரிந்தால், அவர்களை தனி வார்டுகளில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிப்பது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட வேண்டும். அரசின் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளை அதிகப்படுத்தியும் மேம்படுத்தியும் எபோலாவை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்க வேண்டும். இல்லையென்றால், சிக்குன்குனியாவைப்  போலவோ, டெங்குவைப் போலவோ வேதனையான விளைவுகளைத் தமிழகம் சந்திக்க வேண்டியது வரும்.

பொதுநல மருத்துவரான டாக்டர் கு.கணேசன், ராஜபாளையத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கிளினிக் நடத்தி வருகிறார். நோயாளிகளுக்குச் செய்யும்  மருத்துவ சேவையுடன், மருத்துவ அறிவியல் வளர்ச்சிக்கும் அதிக அளவில் தொண்டாற்றி வருகிறார். ஆங்கில மருத்துவச் செய்திகளைப் பாமரரும்  புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக எழுதுவது இவருக்குரிய சிறப்பு. இதுவரை 28 மருத்துவ நூல்களைத் தமிழில் எழுதியுள்ளார். இவருடைய இடைவிடாத மருத்துவ அறிவியல் தமிழ்ப் பணியைப் பாராட்டி, கோவை பாரதியார் பல்கலைக்கழகம் ‘மகாகவி பாரதி அறிவியல் தமிழ் விருது’ வழங்கி சிறப்பித்துள்ளது. 

இவர் தமிழ்நாடு எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக் கழகம் தமிழில் தயாரிக்கும் ‘மருத்துவக் கலைச்சொல் பேரகராதி’யில் கலைச்சொற்களைத் தயா ரிக்கும் பணி மற்றும் வல்லுநர் குழு உறுப்பினர். தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம் ஏற்பாடு செய்துள்ள மருத்துவ நூல்களைத் தமிழில் தயாரிக்கும் பணியில் வல்லுநர் குழு உறுப்பினர் மற்றும் நூல்களை எழுதும் நூலாசிரியர். ஆரோக்கியம் குறித்துப் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அதிக அக்கறை உள்ளவர். அதன் வெளிப்பாடு தான் இந்தத் தொடர்!

No comments

Powered by Blogger.