Header Ads



தலைமை என்பது, சில சந்தர்ப்பங்களில் குரலற்றதாகவும் செயற்பட வேண்டும் - அமைச்சர் அதாஉல்லா

(எம்.ஏ.றமீஸ்)

தலைமை என்பது சமூகம் சார்ந்த குரலாக இருப்பதோடு சில சந்தர்ப்பங்களில் குரலற்றதாகவும் இருந்து இராஜதந்திரத்துடன் மக்கள் நன்மைக்காக செயற்பட வேண்டும். தலைவர் அஷ்ரஃப் அவர்கள் பேசுகின்ற ஒவ்வொரு சொல்லும் பெருங்காற்றிலே தூற்றி எடுக்கப்பட்ட நெல்மணிகளைப் போல் பெறுமதியானது என உள்ளுராட்சி மகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா தெரிவித்தார்.

மறைந்த மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களின் 14வது நினைவேந்தல் நிகழ்வு பாலமுனை அல்-ஹிதாயா வித்தியாலயத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் அவர் உரை நிகழ்த்துகையில், மறைந்த மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்களிடமிருந்து நாம் பல விடயங்களைக் கற்றிருக்கின்றோம். அவரது பேச்சு, ஆற்றல், நற்பண்பு, அறிக்கைகள் போன்றன எம் சமூகத்தின் நன்மைக்காக இருந்திருக்கின்றன.

மக்கள் பிழையாக விளங்கிக் கொள்வார்கள் என்பதற்காக தலைமைத்துவம் பிழையான முடிவை எடுக்கக் கூடாது. எங்கோ ஓரிடத்தில் பிரச்சினை எழுகின்றபோது உடனடியாக வீர வசனம் பேசி அறிக்கையிடுவதில் அர்த்மில்லை. நாம் எதைப் பேசுவது, நாம் எதைப்பற்றி அறிக்கையிடுவது இதனால் எமது மக்கள் எதிர்நோக்வுள்ள பாதிப்பென்ன என்பதைப்பற்றி நன்கு சிந்தித்த பின்னரே தலைமைகள் பேச வேண்டும். சில தலைமைகள் எடுத்த எடுப்பில் பேசி மாட்டிக்கொண்டு தடுமாறுவதை நாம் பார்க்கின்றோம்.

எமது சமூகத்தில் பல்தரப்பட்டவர்கள் உள்ளனர். அவர்கள் அனைவரையும் ஒன்றாகக் கட்டியணைத்து எல்லோருடைய அபிலாஷைகளையும் பெற்றுத்தரக் கூடிய வகையில் தலைமைகள் செயற்பட வேண்டும். தலைமைகள் சிறுபிள்ளைத்தனமாக பேசக் கூடாது. பேச வேண்டியதை பேச வேண்டிய இடத்தில் பேசி எமக்கானவற்றை நாம் பெற்றுக்கொள்ளும் வகையில் தலைமைகள் இயங்க வேண்டும். அதனை தலைவர் அஷ்ரஃப் அவர்கள் எமக்கு நிறையவே கற்றுத் தந்திருக்கின்றார்கள் அவர் காட்டித் தந்த வழியிலேயே நாம் பயணிக்கின்றோம். அதனால் நாம் பல விடயங்களைச் சாதிக்கக் கூடியதாக உள்ளது.

காலத்திற்குக் காலம் எமது நாட்டில் பல்வேறான பிரச்சினைகள் எழுந்துள்ளன. அச்சந்தர்ப்பங்களில் அப்போதிருந்த தலைமைகள் எவ்வாறு அப்பிரச்சினைகளை சரி செய்திருக்கின்றார்கள் என்பதை ஒத்துப்பாராமல் தடுமாறி எடுத்த எடுப்பில் அறிக்கைகள் விடுவதில் எதுவுமே நடந்து விடப்போவதில்லை. எண்பது சதவீதத்துடன் பெரும்பான்மையாக வாழ்கின்ற சிங்களவர்களுடன் சிறுபான்மையினத்தவர்கள் எவ்வாறு நடந்து கொண்டு தமக்கானவற்றைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை தலைவர் அஷ்ரஃப் அவர்கள் செய்து காட்டியிருக்கின்றார்கள். தம்மிடம் அமைச்சுப் பொறுப்பில்லாமல் அவர் பாராளுமன்றத்தில் பிரவேசித்த முதல் ஐந்து ஆண்டுகளிலே அரசின் பங்காளியாக இருந்திருக்கின்றார். அவர் ஆட்சியினை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து செயற்பட்டிருக்கின்றார். காலம் கனிகின்ற வரை பொறுமையாக இருந்து நமது சமூகத்திற்காக பல விடயங்கைளப் பெற்றுக் கொடுத்திருக்கின்றார்.

வெளி மாவட்டத்தவர்கள் எமது பிராந்திய மக்கள் பிரதிநிதிகளாக இருந்த வரலாறுகள் நிறையவே இருந்திருக்கின்றன. எமது மக்களின் பிரச்சினைகளை அறிந்து செயற்படக் கூடியவர்களாக அவர்கள் இருக்கவில்லை. பாராளுமன்ற உறுப்புரிமைக்காகவும், அமைச்சுப் பொறுப்புகளுக்குமாகவே அவர்கள் இங்கிருந்திருக்கின்றார்கள. அவர்களுடைய பாராளுமன்ற உறுப்புரிமை அவர்களிடமிருந்து நழுவிப் போகின்றதோ அப்போது அவர் நமக்கு யாருமில்லாத அந்நியர்களைப்போலாகி விடுகின்றார்கள். சில சந்தர்ப்பங்களில் அவ்வாறானவர்களை எமது மக்களால் துரோகிகளாக அடையாளம் கண்ட சரித்தரிங்களும் பல இருக்கின்றன.

மறைந்த மாமனிதர் மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரஃப் அவர்கள் உயிருடன் இருக்கின்ற சந்தர்ப்பங்களில் தலைவர்களை உருவாக்கும் விடயத்தை பலர் பல சந்தர்ப்பங்களில் கேட்டிருக்கின்றார்கள் அப்போது நாம் பல தலைமைகளை உருவாக்கியிருக்கின்றோம். அத்தலைமைகள் தொடர்ச்சியாக இந்த சமூகத்தினை வழி நடத்தி மக்களுக்கு நன்மை பெற்றுக்கொடுக்கும் என்று கூறியுள்ளார் என்றார். 

No comments

Powered by Blogger.