Header Ads



தேர்தல் காலத்தில் மாத்திரம் நினைவுகூரப்படும் மறைந்த மாமனிதர்..!

(ஜவாஹிர் சாலி)

இன்று போல் இருக்கிறது, கடந்த 2000,செப்ரம்பர் 16, அப்போது அக்குறணை ஸாஹிரா தேசிய பாடசாலையில் அதிபராக கடமையாற்றிக் கொண்டிருந்தேன், அன்று கட்டுகஸ்தொட ஸாஹிரா மஹாவித்தியாலயத்தில் மத்திய மாகாண முஸ்லிம் பாடசாலை அதிபர்களுக்கான கருத்தரங்கில் பங்குபற்றிக் கொண்டிருந்தோம், வெளியில் நடக்கும் எந்த சம்பவங்களும் தெரியாதநிலையில் இருந்த எங்களின் வகுப்புக்குள் சிவபூஜையில் கரடி நுழைந்ததைப்போல முன்னாள் மத்திய மாகாணசபை உறுப்பினர் மர்ஹூம் றவூப் ஹாஜியார் தனது பரிவாரங்களுடன் உள்ளே நுழைந்தார், தேர்தல் காலம் என்பதால் இது முன்திட்டமிட்ட வரவு என்பதை அங்கிருந்த அதிகாரிகளினதும் , வால்பிடிக்கும் ஒருசில அதிபர்களினதும் செயற்பாடுகளிலிருந்து அறிந்து கொண்டேன், பேய்கள் ஆட்சி செய்தால் பிணம் தின்னச் சட்டம் வரும் என்பதை ஏற்றவனாக ஏதோ நடக்கட்டும் என்ற மனநிலையில் அங்கு நடந்த தேர்தல் பிரச்சாரத்தை ஒன்றரை மணி நேரம் சகித்துக் கொண்டிருந்தேன், கடைசியாக முடிக்கும்போது அந்த அரசியல்வாதி இன்று ஒரு துக்ககரமான சம்பவம் நடந்துள்ளது 12.45 செய்தியைக் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு சர்வசாதாரணமாக சென்று விட்டார், செய்தியை செவிமடுத்த போதுதான் , முஸ்லிம் சமுகத்தின் விடுதலைக்காக தன்னையே அர்ப்பணித்த அந்த மாபெரும் தலைவனின் அகாலமறைவு எங்களுக்குத் தெரிந்தது. சம்பவம் தெரிந்திருந்தும் தனது சுயநல அரசியலுக்காக இரண்டு மணித்தியாலங்கள் ஒரு சமுகத்தலைவனின் மரணச்செய்தியை மறைத்து பிரச்சாரம் செய்துவிட்டு சென்றுவிட்ட அவரை திட்டிவிட்டு ஹெம்மாத்தகம சென்ற போதும் எதையும் காணமுடியவில்லை.

அந்த எதிர்பாராத இழப்பு என்னுள் ஏற்படுத்திய தாக்கமே சொந்த ஊரிலே எப்படியும் கல்குடாவின் பிரதிநிதித்துவத்தை பெற்றுவிட வேண்டுமென்ற வேட்கையையும் மிஞ்சி கண்டியில் நுஆ கட்சி சார்பாக போட்டியிட்ட புதிய தலைவர் றவூப் ஹக்கீம் அவர்களை வெல்ல வைக்க அதிபர் என்பதையும் மீறி எனது பாடசாலையை தளமாக வைத்து எனக்கு ஏனைய கட்சிகளாலும் , கல்வித்திணைக்களத்தாலும், பொலிசாரினாலும் வந்த தடைகள் ,அழுத்தங்கள் எல்லாவற்றையும் தூசாக நினைத்து ,தேர்தல் தினத்திலும் அதே பாடசாலையி்ல் இரத்தமும் சிந்தி தலைவரை வெல்ல வைத்தோம் (கடந்த கிழக்குமாகாண சபைத்தேர்தலில் தலைவர் திட்டமிட்டு என்னைத் தோற்கவைத்தது வேறு விடயம்). அதனைத்தொடர்ந்து எனது பாடசாலையில் இடம்பெற்ற தேசிய மீலாத் விழாவில் வடக்கு கிழக்குக்கு வெளியே முதன்முதலாக மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் பெயரை அக்குறணை ஸாஹிரா கல்லூரியின் கேட்போர் கூடத்திற்கு வைத்தேன்.

இவை என் நினைவுகள், ஆனால் இப்போது நடப்பது என்ன,

அஷ்ரப் அவர்களுக்கு முன்னால் கூனிக்குறுகி உட்கார்ந்தவர்கள், அவரிடம் தலைசொறிந்து நல்லவர்களாகக் காட்டி தேசியப்பட்டியலி்ல் பாராளுமன்றம் சென்று அதன் மூலம் அந்தஸ்தைப் பெற்றவர்களெல்லாம் தேர்தல் காலத்தில் மாத்திரம் அவரை தங்கள் சுயநலத்திற்காக ஞாபகப்படுத்துவதைக் காணக்கூடியதாக இருக்கிறதே. முஸ்லிம் காங்கிரஸை விட்டு பதவிகளுக்காக பிரிந்து சென்றவர்களும் கூட அடுத்து வரப்போகும் தேர்தல்களை மையப்படுத்தி மறைந்த தலைவரை புகழ்பவர்களாகவும் அவரோடு தங்களுக்கிருந்த அந்நியோன்யத்தை விளக்குபவர்களாகவும் உள்ளனரே.

தற்போதும் என்ன நடக்கிறது,

மர்ஹூம் அஷ்ரப் அவர்கள் எதிர்க்கட்சியில் இருந்த போதும், ஆளும்கட்சியில் அமைச்சராக இருந்தபோதும் தனியொருவராக சமுகத்தின் தேவையறிந்து அதற்காக பேசியோ அல்லது போராடியோ பெற்றுக்கொண்டவை பல, ஆனால் அவரின் பாசறையில் வளர்ந்தவர்களென பீற்றிக் கொள்பவர்கள் தங்கள் தேவைக்காக, இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக காலத்திற்குக்காலம் வித்தியாசமான வடிவில் மக்களை ஏமாளிகளாக்குவது பரிதாபத்துக்குரியது.

இதற்கு மிக நல்ல உதாரணம் ஊவா தேர்தலும், கிழக்கு தேர்தலும். 

கடந்த கிழக்கு மாகாணசபைத்தேர்தலில் மறைந்த தலைவர் 2012 ஐ மையப்படுத்தி கண்ட கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் என்ற கனவு பலிக்கப்போவதாகப் பொருள்பட தவிசாளர் பஸீர் சேகுதாவூத் அவர்கள் போஸ்டர் மாத்திரம் அடித்து ஒட்ட வைத்துவிட்டு அமைதியாகிவிட தலைவரோ அரசாங்கத்துடன் இருந்து கொண்டே  தைரியமாக அரசை விமர்சிப்பதாக பாசாங்கு காட்டி முஸ்லிம் முதலமைச்சர் என்ற ஆசையை போராளிகளுக்கு ஊட்டிப்பெற்ற வெற்றியின் பின் தாருஸ்ஸலாமில் நடைபெற்ற மர்ஹூம் அஷ்ரப் நினைவு வைபவத்தில் தலைவரவர்கள் தனதுரையில் இம்முறை கிழக்கு மாகாணத்தில் அதிகமான முஸ்லிம் உறுப்பினர்கள் தெரிவாகி உள்ளதால் நிச்சயமாக ஒரு முஸ்லிம் முதலமைச்சர் நியமிக்கப்படுவார் எனக்கூறினாரே தவிர முஸ்லிம் காங்கிரஸ் முதலமைச்சர் என்று கூறவேயில்லை, அதன்படியே எந்தக்கட்சியை ஆட்சியமைக்கும்படி ஆளுநர் கோருகிறாரோ அவர்கள் யாருடன் சேர்ந்து ஆட்சியமைத்தாலும் பிரச்சினையில்லை ஆனால் ஆட்சியமைக்கும்படி கோரப்பட்ட கட்சிச் சின்னத்தில் போட்டியிட்ட ஒருவரே முதலமைச்சராக முடியும் என்ற சட்ட ஆலோசனைப்படியே நஜீப் அப்துல் மஜீத் அவர்கள் நியமிக்கப்பட்டார், இது நீதியமைச்சருக்குு தெரியாமல் நடக்கவில்லை ஆனாலும் முதலமைச்சர் தொடர்பில் எழுதாத ஒப்பந்தம் இருப்பதாகச் சொல்லி அந்த நேரத்தில் சமாளித்துக் கொள்ளலாம் என தலைவர் எண்ணிக் கொண்டிருக்கிறார், உண்மையில் இது ஒரு சொல்லமுடியா ஒப்பந்தமே. இப்போது கூட இந்த ஒற்றுமையை நிரூபிக்க, தொடர்ச்சியான வெற்றிக்காக அமீரலி அவர்களை முதலமைச்சராக்கலாமே, இதில் சட்டப்பிரச்சினையும் வராது, சமுக ஒற்றுமையும் ஏற்படும். 

தற்போது ஊவாவில் சமுகத்திற்காக ஒற்றுமைப் பட்டுள்ளோம், ஊவாவில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை காப்பாற்றப்போகிறோம் என்று கூறிக் கொண்டு ஸ்ரீ.ல.மு.காங்கிரஸும் அ.இ.ம.காங்கிரஸும் ஒன்று பட்டுள்ளதாகவும் கூறுகிறார்கள், இந்த ஒற்றுமை வேடம் புதியமுறை ஏமாற்று வகை என்பது எல்லோருக்கும் தெரியும்,   ஒற்றுமை  தேவையென்றால் மரச்சின்னத்தில் போட்டியிட்டிருக்கலாமே, அமைச்சர் றிஸாத் பதியுதீன் அவர்கள் அங்கிருந்து போனவர்தானே, பிரிந்து சேர்ந்த ஜோடிகள் வாழ்ந்த வீட்டில் வாழ்ந்தால்தான் அது ஒற்றுமை அதை விடுத்து வேறு எங்கோ போய் வாழ்ந்தால் ஏதோ ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்கான நாடகம் என்பதே யதார்த்தம், அதுபோலத்தான் இதுவும் ஒரு காலத்தில் மரச்சின்னத்தை பாவிப்பதற்கே தடையாக இருந்த மாகாண அமைச்சர் நஸீர் அஹமட்டின் துஆ கட்சியில் போட்டியிடுவதன் மர்மம் என்ன, இதனால்தான் தவிசாளரை ஊவாவில் காணமுடியவில்லையோ அல்லது தலைவரைப்போல பொய்யாக அரசாங்கத்திற்கு அவரால் ஏசமுடியாதோ, அநியாயம் சுயேச்சையாக தனிக்குடித்தனம்  போயிருக்கலாம், எது எப்படியோ இந்தக் கூட்டு ஒரு உறுப்பினரையாவது பெற வேண்டும், ஏனென்றால் வென்றால்தான் அரசாங்கத்துடன் சேர்ந்து தங்கள் வேஷத்தை வெளிக்காட்டிவிடுவர், இல்லாவிட்டால் அப்பாவி முஸ்லிம்களை அடுத்த தேர்தலிலும் ஏமாற்றி விடுவர்.

இறுதியாக நல்லதொரு தலைவரை நினைவுகூர்ந்தால் அவரது நல்ல தன்மைகளும் அவரைப்போன்ற செயல்திறனும் நமக்கு வரும், கடந்த பதினான்கு வருடங்களாக தற்போதிருப்பவர்கள் உண்மையாக அவரை நினைவுபடுத்தியிருந்தால் அவர் சாதித்தவற்றைப்போல் ஒருசிலவற்றையாவது சாதித்திருப்பர், உதாரணமாக,

1. விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையில் பாராளுமன்றத் தேர்தலில் வெட்டுப்புள்ளி என்றால் என்னவென்று இன்னும் தெரியாமல் பல அரசியல்வாதிகள் இருக்கையில் 1988ம் ஆண்டிலேயே சிறுகட்சிகளின் நன்மைக்காக 12.5 ஆகவிருந்த  வெட்டுப்புள்ளியை 5 ஆக அரசியலமைப்பின் 15ஆம் திருத்தத்தின் மூலம் மாற்றியமை.

2. இனப்பிரச்சினை காலத்தில் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் தமிழ் பிரதேச பல்கலைக்கழகங்களில் கற்பதில் இருந்த பிரச்சினையைத் தீர்க்க தனியாளாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை உருவாக்கியமை.

3. முஸ்லிம்களின் பொருளாதார வளத்தை கருத்தில் கொண்டு ஒலுவில் துறைமுக வேலைகளை ஆரம்பித்தமை.

4. ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் அகில இலங்கை இஸ்லாமிய ஐக்கிய முன்னணி, இஸ்லாமிய சோஷலிச முன்னணி, முஸ்லிம் ஐக்கிய முன்னணி, முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி, போன்ற முஸ்லிம் கட்சிகள் இருந்திருந்தாலும் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் வந்ததன் பின் முழு அங்கீகாரத்தையும் முஸ்லிம் சமுகம் ஸ்ரீ.ல.மு.காங்கிரஸுக்கே வழங்கியது , ஆட்சியில் இருந்த அரசாங்கங்களும் குறைந்த தொகை பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தபோதும் தலைவரையும் கட்சியையும் நாடி நின்றன, உரிமைகள் வழங்கப்பட்டன, ஆனால் தலைவரின் மறைவுக்குப்பின் பல கட்சிகள் உருவாகின, முஸ்லிம் அமைச்சர்கள் அதிகரித்தனர்,  பாராளுமன்ற உறுப்பினர்கள் பெருகினர் ஆனால் தலைவர்களே அரசாங்கங்கத்தை தேடிச் சென்றனர், உரிமைகள் மறுக்கப் படுகின்றன.

எனவே தேர்தல் காலங்களில் மாத்திரம் தலைவரை நினைப்பவர்களாக இல்லாமல் எப்போதும் நினைவு கூர்பவர்களாக இருப்போம்.

அல்ஹம்துலில்லாஹ்

2 comments:

  1. There is no doubt that marhoom Ashraff was a great leader. May Allaah bless him to enter Jennathul Firdouse. Aameen.

    ReplyDelete

Powered by Blogger.