Header Ads



உண்ணாமல், பருகாமல் 12 மணித்தியாலங்களும் எழுதிக் கொண்டிருக்கும் அனிஸ்டஸ் ஜெயராஜாவின் கின்னஸ் சாதனை (படங்கள்)

கரன்சி இல்லாத உலகம் என்ற தலைப்பில் தொடந்து 12 மணிநேரம் எழுதும் ஒரு உலக சாதனைக்காக இலக்கியத்தில் ஒரு மாபெரும் முயற்சி அனிஸ்டஸ் ஜெயராஜினால் இன்று (30.08.2014) திருமலை புனித சூசைப்பர் கல்லூரியில் காலை 8.00 மணிக்கு மிகவும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. 

இலக்கியத்தை வரலாறு ஆக்குவதில் அனிஸ்டஸ் ஜெயராஜாவின் இச் சாதனை முயற்சி ஈழத்து இலக்கிய உலகிற்கு ஒரு மகுடத்தை வைத்தாற் போன்று அமைந்திருக்கிறது. இன்று இம்முயற்சியை ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பத்தி, கிழக்குமாகாண சபையின் எதிர்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி, திருமலை நகர பிதா க. செல்வராசா, கிழக்கு மாகாண விவசாய அமைச்சின் பிரதம கணக்காளர் ரகுராம், வண தந்தை நோயல்,  தந்தை நிதிதாசன், ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளர், கு. திலகரட்ணம்,  ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையும் வாழ்த்துரைகளையும் வழங்கினர். 

கிழக்கு தமிழர் ஊடகவியலாளர் ஒன்றியம் ஏற்பாட்டில் ஆரம்பமாகியிருக்கும் இச்சாதனை எழுத்தை இன்று காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணிவரை உண்ணாமல் பருகாமல் 12 மணித்தியாலங்களும் எழுதிக் கொண்டிருக்கும் உறுதியுடன் சாதனையாளர் ஜெயராஜ் தன் சாதனைப் பேனாவைப் பிடித்திருக்கிறார். 

தற்போது ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கும் 75 தொடக்கம் 95 சொற்களையும், 5 நிமிடம் தொடக்கம் 7 நிமிடத்திற்குள் ஒரு பக்கத்தையும் என்ற அடிப்படையில் தனது எழுத்தின் வேகத்தை சாதனைக்குள் நகர்த்திவருகிறார் ஜெயராஜ்.

ஜெயராஜின் கின்னஸ் சாதனை இலக்கியத்திற்கு மட்டுமல்லாது எமது இலங்கைத் திரு நாட்டுக்கும் எழுத்தாளர்களுக்கும் பெருமையும் புகழையும் சேர்க்கும் ஒரு உண்ணத பணியாகவும் அமைந்திருக்கிறது அவரது சாதனை வெற்றியுடன் நிறைவு பெற திருமலைப் பிரதேச கல்விச் சமூகமும், இலக்கிய ஆர்வலர்களும், இலக்கியவாதிகளும் பிரார்த்தித்திருக்கின்றார்கள். நாமும் அதற்கான பிரார்த்தனைகளை ஜெயராஜிற்காக வழங்குவோம். 


No comments

Powered by Blogger.