Header Ads



இலங்கை அரசாங்கம் ஜிஹாத்தை எதிர்கொள்ள நேரிடலாம் - தயான் ஜயதிலக்க எச்சரிக்கை

நாட்டில் பொது பல சேன என்கின்ற பௌத்த தீவிரவாத அமைப்பானது முஸ்லீம் சமூகத்தை தேசிய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியமை மிகப் பெரிய தவறாகும். 

இவ்வாறு கொழும்பை தளமாகக் கொண்ட The Sunday Leader ஊடகத்தில் Dr Dayan Jayatilleka எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

சிறிலங்காவில் இஸ்லாம் எழுச்சி பெற்றுவருவதாலா அல்லது சிறிலங்காவில் வாழும் இஸ்லாமியர்களுக்கு எதிரான அமைப்பினதும் அதன் நடவடிக்கைகளாலா சிறிலங்காவுக்கு உண்மையான ஆபத்து ஏற்பட்டுள்ளது? 

சிறிலங்காவின் வடக்கு கிழக்கைப் பிரிப்பதற்குத் தேவையான மிகப் பெரிய மூலோபாயத் தவறைத் தற்போது சிறிலங்கா மேற்கொண்டு வருகிறது. அதாவது நாட்டில் பொது பல சேன என்கின்ற பௌத்த தீவிரவாத அமைப்பானது முஸ்லீம் சமூகத்தை தேசிய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அனுமதியை சிறிலங்கா அரசாங்கம் வழங்கியமை மிகப் பெரிய தவறாகும். இதன்மூலம் பின்வரும் நான்கு முக்கிய விளைவுகள் ஏற்படும் என எதிர்வுகூறப்படுகிறது: 

01. இஸ்லாமியத்தை எதிர்க்கும் பொது பல சேனவின் செயற்பாடுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி வழங்குவதானது சிறிலங்கா இராணுவப் படைகள் மற்றும் அரச இயந்திரப் பொறிமுறையில் பணிபுரியும் முஸ்லீம்களின் உணர்வுகளைப் பாதிக்கும். 

02. இவ்வாறான சம்பவங்கள் கிழக்கில் வாழும் முஸ்லீம் மக்களை சிங்களவர்களிடமிருந்தும், சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்தும் பிரித்து தமிழ்த் தேசியவாதிகளின் கரங்களில் வீழ்வதற்கான வாய்ப்பை வழங்கும். இதனால் நாட்டில் மீண்டும் தமிழ் பேசும் மக்களின் குரல்கள் ஓங்குவதுடன், வடக்குக் கிழக்கில் தனிநாடு அமைப்பதற்கான கோரிக்கையையும் வலுப்படுத்தும். 

03. தமது வீடுகள், சொத்துக்கள் மற்றும் குடும்பங்களைப் பாதுகாக்க வேண்டும் எனத் துடிக்கும் முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதம் தரித்தவர்களாக மாறுவதற்கும் இதனால் சிறிலங்கா அரசானது இவர்களுக்கெதிரான யுத்தத்தை முன்னெடுப்பதற்குமான ஆபத்தை உருவாக்கும். 

04. சிறிலங்கா அரசானது புலம்பெயர் தமிழர்கள், மேற்குலக மற்றும் அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள், ஐ.நா, மற்றும் தமிழ்நாடு ஆகிய சக்திகளுடன் இஸ்லாமிய உலகையும் எதிர்த்து நிற்கவேண்டிய நிலை உருவாகும். 

வடக்கு மாகாணத்தின் ஆளுநராக இராணுவத்தில் பணியாற்றிய ஜெனரல் சந்திரசிறி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளமை மற்றும் அளுத்கம விவகாரத்துடன் தொடர்புபட்ட முஸ்லீம் எதிர்ப்பு வன்முறைகளைத் தடுத்து நிறுத்தத் தவறியமை போன்றன ஒன்றாக இணையும் போது தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் அதிகம் வாழும் வடக்கு கிழக்கில் சிறிலங்கா அரசு தனக்கான ஆதரவைப் பலப்படுத்த முடியாது. இதன் விளைவாக சிறிலங்கா அரசாங்கத்திற்கான ஆதரவு வடக்கு கிழக்கில் குறைந்து செல்லும். 

இலங்கையர்களாகிய நாமும் எமது இராணுவத்தினரும் முப்பதாண்டு காலமாகத் தொடரப்பட்ட யுத்தத்தின் போது அதியுச்ச இழப்புக்களைச் சந்தித்துள்ளோம். அரசியல்வாதிகளின் மதவாத சிந்தனைகள் நாட்டில் வாழும் சிறுபான்மைத் தமிழ் மக்களுடன் முரண்பாட்டைத் தோற்றுவித்ததால் உள்நாட்டு யுத்தம் முப்பது ஆண்டுகளாகத் தொடர்ந்தன. உலகெங்கும் 80 மில்லியன் வரையான தமிழ் மக்கள் பரந்து வாழ்கின்றனர். தற்போது நாட்டில் முன்னணியிலுள்ள தீவிர மதவாதிகளும், தற்போதைய அரசியல்வாதிகளும் முஸ்லீம்களுடன் முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளனர். 

ஒரு பில்லியன் வரையான முஸ்லீம் மக்கள் உலகெங்கும் பரந்து வாழ்கின்றனர். கடந்த காலங்களில் ஐரோப்பாவில் கத்தோலிக்கர்கள் தமக்கிடையே மோதிக் கொண்டது போல், தற்காலத்தில் உலகிலுள்ள சில பகுதிகளில் முஸ்லீம்கள் தமக்கிடையே மோதிக்கொள்வதால் படுகொலை செய்யப்படுகின்றனர். ஆனால் சிறிலங்காவில் சுன்னி –சியா முஸ்லீம்கள் இல்லை. முஸ்லீம் மக்கள் மத்தியில் ஆயுதம் தரித்த குழுக்கள் செயற்பட்டாலும் கூட, இவர்கள் சிங்களவர்களுக்கு எதிராக இதுவரை எவ்வித வன்முறைகளையும் மேற்கொள்ளவில்லை. 

இந்த நிலை மாறலாம். தமது மதத்திற்காகக் கொலை செய்வதற்குத் தயாராகவும் ஆனால் மாவீரர் ஆவதற்குத் தயாராக இல்லாத சமூகங்களைப் போலல்லாது, முஸ்லீம்கள் தமது மதத்திற்காகப் பிற உயிர்களைக் கொல்லாது, தமது உயிர்களை அர்ப்பணிப்பதற்குத் தயாராகவுள்ளனர். அனைத்துலகில் தம்மைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு தமிழர்கள் மிகவும் கடினப்பட்டது போலல்லாது, பல பத்தாண்டுகளாக உலகெங்கும் வாழும் முஸ்லீம் சமூகங்கள் ஆயுதக் குழுக்களைக் கொண்டுள்ளன. இக்குழுக்கள் ஆயுதங்களையும் ஆயுதப் பயிற்சிகளையும் பெற்றுள்ளன. தமிழ் ஆயுதக் குழுக்கள் தமக்கான ஆயுதங்களைப் பெற்றதை விட, முஸ்லீம் ஆயுதக் குழுக்கள் மிக இலகுவாக இவற்றைப் பெறக்கூடிய ஏதுநிலையில் உள்ளனர். 

சிறிலங்காவில் முதன்முதலாக 1958ல் இடம்பெற்ற தமிழர் எதிர்ப்புக் கலகங்களின் விளைவாக பிரபாகரன், தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்றமை போன்றன தோற்றம் பெற்றன. இந்நிலையில் அளுத்கம விவகாரம் மற்றும் சிறிலங்காவில் தற்போது வலுப்பெற்று வரும் முஸ்லீம் எதிர்ப்பு வன்முறைகளால் எத்தகைய ஆபத்துக்கள் தோற்றுவிக்கப்படும் என்பதை நாம் அறிவோமா? 

சிறிலங்கா அரசிற்குள்ளும் வெளியேயும் பல பத்தாண்டுகளாகச் செயற்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதமானது மிதவாத தமிழ்த் தேசியவாதிகளைக் கொண்ட தமிழ்க் கட்சியையும் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி போன்றவற்றை உருவாக்கி அதன் மூலம் நாட்டில் பயங்கரவாதத்தை வலுப்படுத்த வழிவகுத்தது. அப்போது தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி தமிழ் மக்களுக்காகச் செயற்பட்டது. தற்போது முஸ்லீம் காங்கிரஸ் கட்சி முஸ்லீம் சமூகத்திற்காகச் செயற்பட வேண்டிய நிலையிலுள்ளது. இன்று சிறிலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சி மற்றும் சிறிலங்கா சுதந்திரக் கட்சி ஆகியவற்றிலுள்ள பிரதான முஸ்லீம் அரசியல்வாதிகள் உண்மையில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் சமூகத்திற்காகக் குரல் கொடுக்கவில்லை. இவர்கள் முஸ்லீம் இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்காது தடுப்பதற்கான சிறந்த தடைக்கற்களாகச் செயற்பட முடிகின்ற போதிலும், நாட்டின் முன்னணி முஸ்லீம் அரசியல்வாதிகள் இதனைச் செய்யத் தவறுவதற்கான அவர்களின் பலவீனம் என்ன? 

சிறிலங்கா அரசாங்கத்தின் பரப்புரைகள் போன்று புலிகள் தற்கொலைக் குண்டுதாரிகளை உலகிற்கு அறிமுகப்படுத்தவில்லை. ஆனால் இதனை மத்திய கிழக்கைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மேற்கொண்டனர். லெபனானிலிருந்த அமெரிக்காவின் கடற்படைத் தளம் ஒன்று வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட ட்ரக் வண்டி ஒன்றினால் மோதி அழிக்கபட்டது. இத்தற்கொலைக் குண்டுத்தாக்குதலில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இதன் விளைவாக அமெரிக்கா, லெபனானிலிருந்து பின்வாங்கியது. இந்தச் சம்பவமானது, சிறிலங்காவின் வடமராட்சியில் புலிகள் அமைப்பைச் சேர்ந்த கப்டன் மில்லர் தற்கொலைக் குண்டுத் தாக்குதலை மேற்கொள்வதற்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்றது. 

உலகளவில் 80 மில்லியன் மக்களின் ஆதரவை மட்டுமே கொண்ட தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் தோற்றம் பெற்ற பயங்கரவாதத்தைத் தோற்கடிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு முப்பது ஆண்டுகள் எடுத்ததாயின், உலகளவில் ஒரு பில்லியன் வரையான மக்களின் ஆதரவைக் கொண்ட முஸ்லீம் மக்கள் மத்தியில் தோற்றம் பெறும் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு எவ்வளவு காலம் எடுக்கும்? 

ஏற்கனவே போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கமானது வடக்கில் வாழும் தமிழ் மக்களிடமிருந்தும் மேற்குலகிலிருந்தும் 70 மில்லியன் வரையான மக்களைக் கொண்ட இந்தியாவின் தமிழ்நாட்டிலிருந்தும் எதிர்ப்புக்களைப் பெற்றுள்ள நிலையில், உச்ச அளவில் தூண்டப்பட்டுள்ள 'ஜிகாத்' மாவீரத்துவத்திற்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது? 

கிராண்ட்பாசிலும் அளுத்கமவிலும் 'காவிகளின் பயங்கரவாதத்தை' முன்னெடுத்த தீவிர சிங்கள பௌத்தவாதிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் நட்புறவைப் பேணிவருகிறது. இதனால் தீவிரவாத முஸ்லீம் இளைஞர்கள் அரசாங்கத்தை எதிர்ப்பதற்குத் தூண்டப்படுகின்றனர். இதன்விளைவாக, சிறிலங்காவின் தீவிரவாத முஸ்லீம் இளைஞர்கள் வெளியுலகில் இடம்பெறும் இஸ்லாமிய ஆயுதக் குழுக்களால் கவரப்படுவதற்கான வாய்ப்புக்கள் தோன்றும். இதனால் சிறிலங்கா அரசாங்கமானது ஜிகாதிசத்தை எதிர்கொள்ள வேண்டியேற்படும். 

இந்திய மாக்கடலில் சீனா தனது செல்வாக்கைச் செலுத்துவதற்கு சிறிலங்கா ஆதரவாக உள்ளதால் ஏற்கனவே இந்தியா மற்றும் அமெரிக்காவின் வெறுப்புகளுக்கு ஆளாகியுள்ள நிலையில், இனிவருங் காலங்களில் இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் சிறிலங்காவில் செயற்பட்டால் அதனால் ஏற்படுகின்ற ஆபத்துக்களைக் களையுமாறு சிறிலங்கா அரசாங்கம் மீது இந்தியா மற்றும் அமெரிக்காவால் அழுத்தங்கொடுக்கப்படலாம். இதனால் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் இலக்காக சிறிலங்கா மாறக்கூடும். இது புலம்பெயர் தமிழ் மக்களுக்கும் தமிழ்நாட்டில் வாழும் மக்களுக்கும் சிறந்ததொரு வாய்ப்பாக அமையும். புலம்பெயர் தமிழ் சமூகமும் தமிழ்நாடும், சிறிலங்காவுக்கு எதிராகவும், தென் சிறிலங்காவில் நிலவும் அரச மதவாத எதிர்ப்புணர்வை எதிர்ப்பதற்காக நாட்டின் வடக்குக் கிழக்கில் தமிழீழத்தை அமைப்பதற்கும் இந்திய-அமெரிக்காவிடம் தூண்டுதலளிக்க முடியும்.

No comments

Powered by Blogger.