Header Ads



சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத்தின் கருப்பு பெட்டி ஒப்படைப்பு


உக்ரைனில் 298 பயணிகளுடன் சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானத் தின் கருப்பு பெட்டிகளை மலேசிய அதிகாரிகளிடம் ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஒப்படைத்தனர்.நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியாவின் கோலாம்பூர் நோக்கி 298 பயணிகளுடன் சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் கடந்த 17ம் தேதி உக்ரைன் வான்வெளியில் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் நெதர்லாந்தை சேர்ந்த 150 பயணிகள் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களே விமானத்தை தாக்கியதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டி வருகிறது. ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களோ, இந்த தாக்குதலுக்கு உக்ரைன் அரசு தான் காரணம் என குற்றம் சாட்டி வருகின்றனர். 

உக்ரைன் கிழக்கு பகுதியில், ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் வசம் இருக்கும் இடத்தில் இருந்து பயணிகள் உடல்களை மீட்கவும், தடயங்களை சேகரிக்கவும் கிளர்ச்சியாளர்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என உலக நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கிடையில், விமான தாக்குதல் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஆஸ்திரேலியா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அதில், ‘ஆஸ்திரேலியாவை சேர்ந்த குழந்தைகள் உள்பட 28 பேர் பலியாகியுள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உண்மையில் என்ன நடந்தது என்று தெரிவிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் அரசுக்கு உள்ளது. எனவே இதுகுறித்து சர்வதேச விசாரணைக்கு அழைப்பு விட வேண்டும்‘ என்று கோரியுள்ளது. விமானம் விழுந்த இடத்தில் சர்வதேச குழுவினர் சுதந்திரமாக ஆய்வு செய்ய கிளர்ச்சியாளர்கள் அனுமதிக்க வேண்டும் என 15 பேர் அடங்கிய ஐநா உயர்மட்ட குழு கோரிக்கை விடுத்துள்ளது. 

இந்நிலையில், மீட்கப்பட்ட 282 உடல்களை குளிர்பதன ரயில் மூலமாக டோரஸ் ரயில் நிலையத்தில் இருந்து டோன்ஸ்க் நகருக்கு கிளர்ச்சியாளர்கள் கொண்டு சென்றனர். அவர்கள் சம்மதத்தின் பேரில், நெதர்லாந்து நிபுணர்கள் உடல்களை பரிசோதனை செய்தனர். இந்த உடல்கள் ரயில் மூலமாக உக்ரைன் அரசு வசம் உள்ள கிர்கிவ் கொண்டு செல்லப்படுகிறது. அதன் பிறகு நெதர்லாந்து அனுப்பி வைக்கப்பட உள்ளது. இதற்கிடையில்,  வீழ்த்தப்பட்ட விமானத்தின் 2 கருப்பு பெட்டிகளையும் கிளர்ச்சியாளர்கள் மலேசிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர். டோன்ஸ்க் நகரில் இன்று காலை மலேசிய குழுவினரிடம் பெட்டிகளை ஒப்படைத்தனர்.  அந்த பெட்டிகள் நல்ல நிலையில் இருப்பதாக மலேசிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக, ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்களின் தலைவர் அலெக்சாண்டர் போரோடாய் கூறுகையில், ‘கருப்பு பெட்டிகளை ஒப்படைத்ததன் மூலம், விமான தாக்குதலில் கிளர்ச்சியாளர்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என்பதை வலியுறுத்தி கொள்கிறோம். தாக்குதலுக்கு உக்ரைன் அரசே முழுக்க முழுக்க காரணம்‘ என்றார். விமானத்தின் கருப்பு பெட்டி மூலம் பல்வேறு முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்பதால் விசாரணை சூடுபிடித்துள்ளது.

No comments

Powered by Blogger.