Header Ads



'காவிகளின் பாசிசம்' - சிறிலங்காவை வழிநடத்தும் சிங்கள பெளத்த பேரினவாதம்

முஸ்லீம்களின் உயர் பிறப்பு விகிதம், முஸ்லீம் வர்த்தக சமூகத்தின் வெற்றிகரமான நடவடிக்கைகள் போன்றன சிங்களவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் இதனாலேயே பொது பல சேன என்கின்ற தீவிர பௌத்த அமைப்பு தோற்றம் பெற்றதாகவும் சரவணமுத்து கூறுகிறார். 

இவ்வாறு CNN ஊடகத்திற்காக Tim Hume எழுதியுள்ள கட்டுரையில் குறித்துள்ளார். அதனை புதினப்பலகைக்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. 

கடந்த மாதம் முஸ்லீம்கள் அதிகம் வாழும் சிறிலங்காவின் அளுத்கமப் பகுதியில் பௌத்த காடையர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னர், அங்கு கூடியிருந்த பெருந்திரளான மக்கள் முன்னிலையில் உரையாற்றுவதற்காக தலைமுடி வெட்டப்பட்ட, கண்ணாடி அணிந்திருந்த ஒரு மனிதன் நின்றிருந்தார். முஸ்லீம் இளைஞர்களுக்கும் பௌத்த காடையர்களுக்கும் இடையில் விவாதம் இடம்பெற்ற பின்னர் இடம்பெற்ற ஊர்வலம் காணொலியில் பதியப்பட்டுள்ளது. 

அளுத்கம ஊர்வலத்தில் உரையாற்றிய குறித்த நபர், சிறிலங்கா இராணுவம் மற்றும் காவற்துறையினர் சிங்களவர்கள் எனவும், சிறிலங்காவின் 20 மில்லியன் மொத்த சனத்தொகையில் நான்கில் மூன்று பங்கினர் பெரும்பான்மை சிங்கள பௌத்தர்களே எனவும் குறிப்பிட்டார். பின்னர் இவர் தனது கையை உயர்த்தி தனது குரலை உயர்த்தி முஸ்லீம்கள் எவ்வாறான ஆபத்தைச் சந்திப்பார்கள் என்பதை விபரித்தார். தனியொரு முஸ்லீம் சிங்களவர்கள் மீது கைவைத்தால் அதுவே முஸ்லீம்களுக்கான அழிவாகக் காணப்படும் எனவும் ஆவேசமாகக் கூறினார். இது காணொலியில் பதிவாகியுள்ளது. 

இவ்வாறு ஆவேசமாகக் கூறிய நபர் பௌத்த பிக்குகள் அணியும் காவி உடையுடன் காணப்பட்டதே இங்கு முக்கியமானதாகும். இவர் வேறு யாருமல்லர். இவர் தான் பௌத்த அதிகார சக்தி என நன்கறியப்படும் பொது பல சேனவின் பொதுச் செயலரும் பௌத்த பிக்குவுமான கலகொட அத்தே ஞானசார ஆவார். 

சிறிலங்கா காவற்துறையின் கண்காணிப்பு உள்ள பிரதேசங்களில் பொது பல சேன பல்வேறு தாக்குதல்களை மேற்கொள்வதானது தற்போது பிரச்சினைக்குரிய விடயமாகும். அண்மையில் அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போதும் சிறிலங்கா காவற்துறையினர் பிரசன்னமாகியிருந்ததாகப் பலர் சுட்டிக்காட்டுகின்றனர். "இவ்வாறான சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. ஆனால் பொது பல சேன இவ்வாறான மீறல்களில் இடம்பெறுவதானது மிகப் பெரிய தாக்கத்தை உண்டுபண்ணும்" என அளுத்கமவில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களைக் கண்டிக்கும் சமூக ஊடகச் செயற்பாட்டாளரும் வர்த்தகருமான மொகமட் ஹிசாம் கூறுகிறார். 

பொது பல சேனவின் பொதுச் செயலர் ஞானசார தேரர் தனது உரையை நிறைவு செய்து சிறிது நேரத்தின் பின்னர் அளுத்கமவில் உள்ள முஸ்லீம் வர்த்தக நிலையங்கள் மற்றும் வீடுகளில் பௌத்த காடையர்கள் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டனர். இதில் மூன்று முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், 16 முஸ்லீம்கள் மிக மோசமான காயங்களுக்கு உள்ளாகினர். இரண்டு நாட்கள் இடம்பெற்ற வன்முறைகளில் இவ்வாறான அழிவுகள் இடம்பெற்றதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். 

அளுத்கம வன்முறை இடம்பெற்று ஒரு மாத காலம் கடந்த நிலையில், இந்த வன்முறையானது இந்நாட்டில் பல ஆண்டுகளின் பின்னர் இடம்பெற்ற வன்முறைகளாகக் காணப்படுவதாகவும், இந்த வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புபட்ட 135 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். 

இச்சம்பவம் இடம்பெற்ற தினமன்று உண்மையில் என்ன நடந்தது என்பது தொடர்பாக ஞானசார தேரர், காவற்துறையிடம் விளக்கமளித்த போதிலும் இதுவரையில் இவருக்கெதிராக எவ்வித குற்றங்களும் முன்வைக்கப்படவில்லை. அளுத்கம வன்முறைச் சம்பவத்துடன் ஞானசார தேரர் தொடர்புபட்டுள்ளாரா என்பது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும், அளுத்கமவில் இடம்பெற்ற ஊர்வலத்தில் உரையாற்றியதன் மூலம் ஞானசார தேரர், இவ்வாறான வன்முறைகள் இடம்பெறுவதற்கான தூண்டுதலை வழங்கினாரா என்பதை விசாரணை செய்வதாக சிறிலங்கா காவற்துறையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

பொது பல சேனவின் தலைவரால் உரை நிகழ்த்தப்பட்ட பின்னர் ஊர்வலத்தைத் தொடர்வதற்கு அதிகாரிகள் அனுமதித்தாலேயே இவ்வாறான வன்முறைகள் தோன்றியதாக ஹிசாம் தெரிவித்தார். ஆனால் பொது பல சேனவுக்கும் அளுத்கம வன்முறைக்கும் இடையில் எவ்வித தொடர்புமில்லை என ஞானசார தேரர் மறுத்துள்ளார். "இவ்வாறான வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் எம்மீது தொடர்ந்தும் பழிசுமத்தப்படுவதுடன் நாங்கள் சிங்களத் தீவிரவாதிகள் எனவும் முத்திரை குத்தப்படுகிறோம். இது நீதியற்றது. பொய்யான குற்றச்சாட்டாகும்" என ஞானசார தேரர் குறிப்பிட்டார். 

"இவ்வாறான வன்முறைகள் இடம்பெற்ற போது, முஸ்லீம் இளையோர் குழுவினால் எமது பௌத்த பிக்கு ஒருவர் தாக்கப்பட்டபோது எழுந்த மோதல் நிலையைத் தணிப்பதற்கு பொது பல சேன முயற்சி எடுத்தது. ஆனால் நாங்கள் தான் இந்த வன்முறைகளை மேற்கொண்டதாக எம்மீது குற்றம் சுமத்தப்படுகிறது" என ஞானசார தேரர் குறிப்பிட்டார். 

அளுத்கம சம்பவம் தொடர்பில் பொது பல சேன மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன், பௌத்தமதத்தை அவமதிக்கும் விதமாக செய்திகள் வெளிவந்துள்ளதை எதிர்த்து கடந்த புதன்கிழமை அன்று வெகுசன ஊடகம் மற்றும் தகவற்துறை அமைச்சிடம் முறையீடு செய்யும் முகமாக அமைச்சு பணியகத்திற்குச் சென்ற புத்த பிக்குகளில் ஞானசார தேரரும் ஒருவராவார். 

அளுத்கம சம்பவத்தை அடுத்து ஞானசார தேரரின் அமெரிக்காவுக்கான பயணம் நிறுத்தம் செய்யப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட பொது பல சேனவின் இணையத்தளத்தில், இந்த வன்முறைச் சம்பவத்தை பொது பல சேன வன்மையாகக் கண்டிப்பதாகவும், பொது பல சேனவின் பிரதிநிதிகள் "சிங்கள பௌத்தர்களைப் பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளதாக வலியுறுத்தி உணர்ச்சிகரமான பேச்சுக்களை மேற்கொள்வதாகவும்" இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

பௌத்த பிக்குகளால் முன்னெடுக்கப்படும் முஸ்லீம் எதிர்ப்பு வாதங்கள் வரவேற்கப்படத்தக்கவை அல்ல என அரசியல் விஞ்ஞானியும் சிறிலங்காவின் முன்னாள் இராஜதந்திரியுமான டயான் ஜெயதிலக சுட்டிக்காட்டியுள்ளார். பொது பல சேனவின் அரசியல் செயற்பாடுகள் 'காவிகளின் பாசிசம்' என டயான் ஜெயதிலக விபரித்துள்ளார். 

பொது பல சேனவைச் சேர்ந்த புத்த பிக்கு ஒருவர் கொழும்பிலுள்ள வர்த்தக அமைச்சில் காவற்துறை ஒருவருடன் கடந்த ஏப்ரலில் கைகலப்பில் ஈடுபட்டிருந்தார். பௌத்த பிக்குகள் மத்தியில் செல்வாக்கைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் செயற்படும் ஒரு தீவிரவாத அமைப்பே பொது பல சேன என ஜெயதிலக குறிப்பிட்டுள்ளார். 

"அளுத்கமவில் பொது பல சேனவால் பல்வேறு வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டன. இவர்கள் குற்றச் செயல்களிலும் ஈடுபட்டிருந்தனர். ஆனால் இவர்கள் இன்னமும் தண்டிக்கப்படவில்லை. இந்த நிலையானது பொது பல சேன அரசாங்கத்தின் மிகப் பலமான ஆதரவைப் பெற்ற ஒரு அமைப்பாகும் என்பதை அறியமுடிகிறது" என சிறிலங்கா மாற்றுக் கொள்கைகள் மையத்தின் நிறைவேற்று இயக்குனர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். 

பௌத்த அதிகாரிகளிடமிருந்தும் சிறிலங்கா அரசிடமிருந்தும் பொது பல சேனவின் செயற்பாடுகளைக் கண்டித்து எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை எனவும் பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டார். "பௌத்தத்தின் பெயரால் பௌத்தத்தின் நியமங்களை மீறி நிற்கின்றவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" என சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார். 

சிறிலங்காவின் பொது பல சேனவைப் போன்று மியான்மாரில் முஸ்லீம் எதிர்ப்பு பௌத்த அமைப்பு ஒன்று செயற்படுகிறது. இது 969 அமைப்பு என அழைக்கப்படுகிறது. முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறையைக் கைவிடுமாறு தலாய்லாமா தனது பிறந்த நாள் உரையின் மூலமாக பொது பல சேனவிடம் வேண்டுகோள் விடுத்தார். 

"பௌத்த தீவிரவாத ஆயுதக் குழு தோற்றம் பெற்றுள்ளதானது ஆச்சரியப்படத்தக்கதல்ல. பல ஆண்டுகளாக சிங்கள பௌத்தர்களின் மத்தியில் மத வெறி என்பது தீவிரம் பெற்றுள்ளது. 1959ல் அப்போதைய பிரதமராக இருந்த S.W.R.D பண்டாரநாயக்க, பௌத்த பிக்கு ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்" என ஜெயதிலக சுட்டிக்காட்டுகிறார். 

பௌத்த பிக்குக்களின் சிங்கள தேசியக் கட்சியான ஜாதிக ஹெல உறுமயவிலிருந்து ஞானசார தேரர் வெளியேறிய பின்னர், 2012ல் சிங்கள பௌத்தத்தைப் பாதுகாப்பதற்கான பிறிதொரு ஊடகமாக பொது பல சேனவைத் தோற்றுவித்தார். இதற்கு முன்னர் ஞானசார தேரர், ஜாதிக ஹெல உறுமயவின் அரசியல் வேட்பாளாராக இருந்தார். இக்கட்சியானது ஆளும் மகிந்த ராஜபக்சவின் கூட்டணிக்கட்சியாகும். பொது பல சேன தோற்றம் பெற்ற பின்னர், மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் சிறிலங்கா பௌத்தர்கள் மிகமோசமாக நடாத்தப்படுவதாவும், பங்களாதேசில் இடம்பெற்ற பௌத்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் குற்றம் சுமத்தியது. 

ஆனால் பொது பல சேனவின் ஒட்டுமொத்த இலக்காக சிறிலங்கா வாழ் முஸ்லீம் சமூகத்தினராவார். முஸ்லீம்களால் பின்பற்றப்படும் ஹலால் உணவுத் தரக்கட்டுப்பாட்டு முறைமையுடன் பௌத்த எதிர்ப்பு வலுப்பெறத் தொடங்கியது. சிறிலங்கா அரசாங்கத்திற்கும் தமிழ்ப் புலிகளுக்கும் இடையிலான யுத்தம் 2009ல் முடிவடைந்த பின்னரே முஸ்லீம் எதிர்ப்பு உணர்வானது பௌத்த பிக்குகள் மத்தியில் தோற்றம் பெற்றதாக ஜெயதிலக கூறுகிறார். 

"போர் முடிவுற்ற பின்னர், சிங்களவர்கள் தமது நிலையை சீர்தூக்கிப் பார்த்த போது, நாட்டின் இரண்டு மிகப் பெரிய சமூகங்கள் போரால் சின்னாபின்னமாக்கப்பட்ட போது, முஸ்லீம் சமூகம் எவ்வித சேதங்களுமின்றி சமாதானமாகவும் அமைதியாகவும் நாட்டில் வாழ்வதை அவதானித்தனர். நாட்டில் பல பள்ளிவாசல்கள், வர்த்தக நிலையங்கள், சிறந்த கல்வி வாய்ப்பைப் பெற்ற முஸ்லீம் இளையோர் என முஸ்லீம்கள் வளர்ச்சியுற்றிருப்பதை சிங்களவர்கள் உணர்ந்தனர். இதனால் பௌத்தர்கள், முஸ்லீம் எதிர்ப்பு யுத்தத்தைக் கட்டவிழ்த்து விட்டனர்" என்கிறார் ஜெயதிலக. 

முஸ்லீம்களின் உயர் பிறப்பு விகிதம், முஸ்லீம் வர்த்தக சமூகத்தின் வெற்றிகரமான நடவடிக்கைகள் போன்றன சிங்களவர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியதாகவும் இதனாலேயே பொது பல சேன என்கின்ற தீவிர பௌத்த அமைப்பு தோற்றம் பெற்றதாகவும் சரவணமுத்து கூறுகிறார். 

பொது பல சேனவின் செயற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் உத்தியோகபூர்வமாகக் கட்டுப்படுத்த வேண்டும். ஆனால் இதனைக் கடைப்பிடிக்க அரசாங்கம் தவறிவிட்டது. சிறிலங்கா அரசாங்கத்தின் அதிகாரம் மிக்க பாதுகாப்புச் செயலரும் மகிந்த ராஜபக்சவின் சகோதரருமான கோத்தபாய ராஜபக்ச கடந்த ஆண்டு காலியில் பொது பல சேனவுடன் தொடர்புபட்ட கல்லூரி ஒன்றைத் திறந்துவைத்தார். இத்திறப்பு விழாவில் கோத்தபாய, ஞானசார தேரரின் அருகில் நின்றதை ஒளிப்படம் சாட்சிப்படுத்துகிறது. 

ராஜபக்சவுக்கும் பொது பல சேனவுக்கும் எவ்வித தொடர்புமில்லை எனவும், மதிப்பிற்குரிய தேரர் ஒருவரின் அழைப்பிதழைப் புறக்கணிக்க முடியாது கோத்தபாய ராஜபக்ச காலித் திறப்பு விழாவில் கலந்து கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு உட்பட்டிருப்பர் என சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு மற்றும் நகர அபிவிருத்திக்கான பேச்சாளர் பிரிகேடியர் றுவாண் வணிகசூரிய தெரிவித்துள்ளார். இத்திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்த பல பிக்குகளின் மத்தியில் ஞானசாரவும் ஒருவராக இருந்திருப்பார் எனவும் வணிகசூரிய குறிப்பிட்டுள்ளார். 

சிறிலங்காவானது ஒரு ஜனநாயக நாடு எனவும் இங்கு எந்தவொரு மதமும் சுதந்திரமாகச் செயற்பட முடியும் எனவும் இதனால் கோத்தபாய ராஜபக்சாவால் எதுவும் கூறமுடியாதிருந்திருக்கலாம் எனவும் வணிகசூரிய தெரிவித்தார். 

"கோத்தபாய ராஜபக்ச உட்பட எந்தவொரு அரசாங்க அதிகாரிகளிடமிருந்தும் பொது பல சேனவுக்கு பாதுகாப்போ சிறப்புக் கவனிப்போ வழங்கப்படவில்லை. நாட்டின் சட்டத்தை மீறும் எவரும் தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர்" என சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கான பேச்சாளர் மோகன் சமரநாயக்க தெரிவித்துள்ளார். 

பொது பல சேனவின் பொதுச் செயலர் மீது அளுத்கம சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது எனவும் விசாரணைகள் தற்போதும் தொடரப்படுவதால் இதன் தீர்வு என்ன என்பதை எதிர்வுகூறமுடியவில்லை எனவும் சமரநாயக்க தெரிவித்தார். பொது பல சேனவானது சிறிலங்கா அரசாங்கத்திடமிருந்தோ அதிபர் மகிந்த ராஜபக்சவிடமிருந்தோ எவ்வித ஆதரவுகளையும் பெறவில்லை என ஊடகங்களிடம் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். 

ராஜபக்ச அரசாங்கத்திற்கு பொது பல சேன அமைப்பானது சில அரசியல் நலன்களை வழங்கியிருந்தாலும் தற்போது இது மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக ஜெயதிலக கூறுகிறார். அளுத்கமவில் வழங்கிய உரையில் ஞானசார தேரர் சிறிலங்கா அதிபரையும் விமர்சித்திருந்தார். அதாவது சிங்களவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஒரு ஆளுமையான தலைமை நாட்டில் காணப்படவில்லை என குறிப்பிட்டிருந்தார். பொது பல சேன, இராணுவத்தினர் மற்றும் காவற்துறையினருடன் நேரடித் தொடர்புகளைப் பேணிவருவதாக ஜெயதிலக சுட்டிக்காட்டியுள்ளார். 

"தண்டனை வழங்காது சுதந்திரமாகச் செயற்படுவதற்கான உரிமையை வழங்குவதானது நாட்டில் மேலும் வன்முறைகளைத் தோற்றுவிக்கும். சட்ட ஆட்சிக்குக் கட்டுப்படும் எந்தவொரு நாடும் அதனை மீறுபவர் எவராயிருந்தாலும் அவர்கள் கள்வர்களாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும்" என பாக்கியசோதி சரவணமுத்து குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.