Header Ads



'பேருவளை கலவரத்தின் மூலம் கறுப்பு ஜூலையை உருவாக்கும் முயற்சியில் தோல்வி'

(vi)

பேருவளையில் நடைபெற்ற இனக்கலவரத்தின் மூலம் மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை உருவாக்க முயற்சித்த அரசின் பங்காளிகள் இன்று மீண்டும் ஒரு கறுப்பு ஜூலை வேண்டாம் எனும் தொனிப்பொருளில் அனுஷ்டானங்களை மேற்கொள்வதாக நவசமசமாஜக் கட்சியின் தலைவரும் தெஹிவளை நகர சபை உறுப்பினருமான கலாநிதி கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன தெரிவித்தார்.

இதேவேளை மீண்டும் ஒரு இனக்கலவரத்தின் மூலம் கறுப்பு ஜூலையை உருவாக்கும் முயற்சியில்  தோல்வி அடைந்த இவர்கள் நாட்டின் இனங்களுக்கு இடையே முரண்பாடுகளை தோற்றுவிப்பது மட்டுமல்லாது சிறுபான்மை மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளையும் பூர்வீக சொத்துக்களையும் கைப்பற்றும் செயல்களில் மும்முரமாக ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார். 

கொழும்பில் அமைந்துள்ள நவசமாஜக் கட்சியின் தலைமை காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே விக்கிரமபாகு கருணாரத்ன மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்;

1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற இனப்படுகொலையின் போது பெரும்பான்மை இனவெறியர்களால் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டு அவர்களின் சொத்துக்களும் உடமைகளும் அழிக்கப்பட்டது. அந்த கோரச் சம்பவம் நடந்து  சுமார் 31 ஆண்டுகள் ஆகியும் இதற்கிடையே உலகில் எத்தனை மாற்றங்கள் ஆட்சி மாற்றங்கள் நாடுகளில் கொள்கைகளில் மாற்றங்கள் அரசியல் பண்பாட்டில் மாற்றங்கள் இவ்வாறான மாற்றங்கள் நாட்டில் நிகழ்ந்த போதிலும் சிறுபான்மை மக்களின் உரிமைகளும் உடமைகளும் குறிப்பாக ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளும் உடமைகளும் சில பேரினவாத சக்திகளால் பறிக்கப்பட்டு வருகின்றது.

இன்றைய ஜனாதிபதி கூட சர்வாதிகார ஆட்சியின் மூலம் நிறைவேற்று அதிகாரத்தை தம்மிடம் வைத்து கொண்டு சிறுபான்மை மக்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த மறுக்கின்றார். ஜனாதிபதியின் செயல்களிலிருந்து ஒன்று மட்டும் நன்றாக புரிகின்றது. நாட்டின் சர்வதேச விசாரணை ஒன்று இடம்பெற வாய்ப்பு இல்லை. 13வது திருத்த சட்டத்தை அமுல்படுத்தல் தொடர்பிலும் ஜனாதிபதி விரும்பவில்லையென தெரிகின்றது.

அமெரிக்காவை பொறுத்த வரை அமெரிக்க அரசுடன்  ஒன்றுபட்டு செயற்பட்டால் மனித உரிமை விசாரணைகள் இல்லை. ஒன்றுபட்டு செயற்படாவிட்டால் மனித உரிமை விசாரணை  வேண்டும் எனும் நிலைப்பாட்டிலேயே அவ் அரசு செயற்படுகின்றது. 

No comments

Powered by Blogger.