Header Ads



கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரின் முன்னெடுப்புகளை முன்வைப்பதிலுள்ள விமர்சனங்கள்..!

(நவாஸ் சௌபி)

'கிழக்கு மாகாணத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி 242 பேர் மனநோயாளர்களான நிலையில் ஆசிரியர்களாக கடமையாற்றிக்கொண்டிருக்கிறார்கள்.'

மட்டக்கள்ப்பு மாவட்ட செயலகத்தில் மாவட்ட கல்வி அபிவிருத்தி தொடர்பாக ஆராயும் விஷேட கூட்டத்தில் உரையாற்றும்போது மேற்படி கருத்தினை கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் எம்.ரீ.ஏ.நிஸாம் தெரிவித்திருக்கிறார்.

பத்திரிகையில் வெளியான மாகாணக் கல்விப் பணிப்பாளரது மேற்படி உரையைக் கண்டித்து இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் விமர்சன நோக்கிலான கண்டனத்தையும் விடுத்துள்ளது.

கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் முன்னேற்றகரமான செயற்திட்டங்களை வகுக்கக்கூடிய ஒரு சிறந்த நிர்வாகி. முற்போக்கான சிந்தனையாளர். இருந்தும் அவரது சிந்தனைகளிலிருந்து உருவாக்கப்படுகின்ற செயற்திட்டங்களையும் நிர்வாக நடைமுறைகளையும் முன்னெடுப்பதில் பல்வேறுவிதமான எதிர் விமர்சனங்களை அண்மைக்காலமாக அவர் எதிர்கொண்டுவருகிறார்.

கிழக்கு மாகாண ஆசிரியர் வளச் சமப்படுத்தல் என்ற திட்டத்தில் மேலதிக ஆசிரியர்களை இடமாற்றம் செய்தமை, கிழக்கு மாகாண அதிபர் ஆசிரியர்களின் விபரத்திரட்டை ஒரு தகவல் மையத்தின் கீழ் கொண்டுவருவதாக தொகை மதிப்பீட்டு படிவம் வழங்கியமை போன்ற விடயங்களில் இத்தகைய விமர்சனங்களை மாகாணப் பணிப்பாளர் பெரிதும் எதிர்கொண்டார்.

மேலதிக ஆசிரியர்களை இடமாற்றம் செய்யும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் ஆரம்ப கட்டத்தில் 'யார் தடுத்தாலும் இந்த இடமாற்றம் நடந்தே தீரும்' என்று உரத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர் கருத்து தெரிவித்திருந்தார். இதனால் கிழக்கு மாகாண அரசியல்வாதிகள் அதனை ஒரு சவாலாகக் கருதியும் இடமாற்றத்தை விரும்பாத ஆசிரியர்களின் வேண்டுகோள்களை நிறைவேற்றுவதாக வெளிப்படுத்தியும் தங்களது அரசியலை செய்ததில் இடமாற்றச் செயற்திட்டத்தை மாகாணக் கல்விப் பணிப்பாளரினால் முழுமையாக முன்னெடுக்க முடியாது போய்விட்டது. 

அதிபர் ஆசிரியர் தொகை மதிப்பீட்டுப் படிவம் தொடர்பாக விளக்கமளிக்கும்போது '42 ஆசிரயர்கள் இரட்டைச் சம்பளம் பெற்று வந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் சிலர் தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்கு பதிலாக தொலைபேசி இலக்கத்தைக் குறிப்பிட்டுள்ளார்கள். பட்டப்படிப்பின் போது விவசாயத்தினை ஒரு பாடமாக கற்றுக்கொண்டவர் தன்னை ஒரு விஞ்ஞான பட்டதாரி என்று தகவல் தந்துள்ளார். ஆனால் அவர் ஒரு கலைப் பட்டதாரியாவார். இன்னும் சில ஆசிரியர்கள் திருமணம் முடித்தவர் தன்னை திருமணம் முடிக்கவில்ல என்றும் திருமணம் முடிக்காதவர் தான் திருமணம் முடித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்கள்' இவ்வாறு ஆசிரியர்களின் குறை நிலை பற்றி வெளிப்படையாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நிலையில் இதற்கும் பல தொழிற்சங்க ஆசிரிய அமைப்புக்கள் கடுமையான எதிர் விமர்சனங்களை முன்வைத்தன.

இவற்றின் பின்னணிகளை உற்றுநோக்கும் போது மாகாணப் பணிப்பாளர் தனது முன்னேற்றகரமான செயற்திட்டங்களை முன்வைக்கும் முறையில்தான் இத்தகைய எதிர்விமர்சனங்கள் ஏற்படுகிறதோ? என்றும் எண்ணத் தோணுகிறது. இதற்கமைய  இப்போது மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்தியை ஆராயும் கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் 242 மனநோயாளர்களான ஆசிரியர்கள் இருப்பதாக ஆராய்ந்த தகவலை மாகாணக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்திருக்கிறார். 

இக்கருத்தினை அவர் மனநோயாளர்கள் என்ற வார்த்தைப் பிரயோகத்தால் குறிப்பிடாது, கற்பித்தல் நடவடிக்கைகளில்  முற்றாக ஈடுபட முடியாதவர்களாக இருப்பவர்கள் என்பது போன்ற சொற்பிரயோகங்களால் குறிப்பிட்டிருக்கலாம். அவ்வாறில்லாது ஆசிரியர்களை நேரடியாகத் தாக்கும்படியாகவும் அவர்களை அவமதிப்பது போன்றும் கருதக்கூடியவகையில் மனநோயாளர்கள் என்ற சொற்பிரயோகத்தினால் கூறி இருப்பது இதற்கும் எதிர் விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.

இவ்வாறு ஆசிரியர்களை குறைகாண்பதும் குற்றஞ்சாட்டுவதும் போன்ற தோற்றத்தை தரக்கூடிய சொற்களின் ஊடாக கருத்துக்களை ஊடகங்களில் வரும்படியாக, வெளிப்படையான கூட்டங்களில் முன்வைக்கும் போது தனது முன்னேற்றகரமான செயற்திட்டங்களை முன்னெடுக்க முடியாத விமர்சனங்களுக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஆளாகின்றார். எனவே இங்கு முன்னெடுக்கும் செயற்பாடுகளை முன்வைக்கும் விதம்தான் விமர்சனங்களை உருவாக்குகிறது.

பொதுவாக கிழக்கு மாகாணத்தின் ஆசிரியர் வளம்பற்றி அதன் வினைத்திறன், விளைதிறன் பற்றி மாகாணப் பணிப்பாளர் ஆய்வு செய்து அறிக்கைப்படுத்துவதன் மூலம் கல்வி அபிவிருத்தி நடவடிக்கைகளை திட்டமிடவும் வழிநடத்தவும் பயனுடையதாக இருக்கும். அந்தவகையில் ஆசிரியர்களை பால் அடிப்படையில், வயது நிலைக்கேற்ப, கல்வித் தகைமை நோக்கில், திருமண நிலை, உடல் உள ஆரோக்கியம் என்று பல்வேறு விதமாகவும் ஆராய்ந்து அறிக்கை பெற்றிருப்பது இன்றியமையாத ஒரு நிர்வாகத் தேவையாகும். 

இதன்படி, கிழக்குமாகாணத்தில் மனநோயாளர்களாக கருதிய ஆசிரியர்களின் விபரத்தினை மாகாணப் பணிப்பாளர் கண்டுபிடித்திருப்பது, பாடசாலைகளில் ஏற்படும் கற்றல் கற்பித்தல் அசோகரியங்களைத் தவிர்ப்பதற்கும் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் உதவும். 

அத்துடன் பாடசாலைகளில் உள்ள ஆளணி விபரம் இத்தகைய ஆசிரியர்களையும் உள்ளடக்கியே கணக்கெடுக்கப்படுகிறது. இதனால் கற்றலுக்கு உதவாத இவ்வாசிரியர்கள் அவ்வாறே இருக்க, பயனுடைய ஆசிரியர்கள் மேலதிகம் என்ற அடிப்படையில் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இதனால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றது. இதனைத் தவிர்க்கவும், இவ்வாறானவர்களைக் கழித்து பாடசாலைகளின் உண்மை ஆளணி விபரத்தை அறியவும் இக்கணக்கெடுப்பு முக்கியமான ஒன்றுதான். 

இருந்தும் முக்கியமான இவ்விடயத்தை வெளிப்படையான ஒரு கூட்டத்தில் மனநோயாளர்கள் என பகிரங்கமாக முன்வைத்தமைதான் இதற்கான எதிர் விமர்சனங்களை உருவாக்கி இருக்கிறது.

மனநோயாளர்களாக அதிக ஆசிரியர்கள் இருப்பது குறித்தும் அதனால் ஏற்படும் பிரச்சினைகள் அதனைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் எவை என்றெல்லாம்  இவ்விடயம் குறித்து கல்விப் புலத்திலுள்ள அதிகாரிகள் பணிப்பாளர்களுடன் உள்ளே வைத்து ஆராய்ந்து முடிவுகளை எடுக்கும் ஒரு விடயமாகவே இது இருந்திருக்க வேண்டும். மாறாக இது வெளிப்படையான கூட்டங்களில் சுட்டிக்காட்டப்படுகின்ற போது ஆசிரியர் சமூகத்தை அவமானப்படுத்தியதாகவே கருதப்பட்டு எதிக் கணைகள் தோன்றுகின்றன. அத்துடன் முக்கியமான ஒரு விடயம் முன்வைப்பதிலுள்ள முறையால் முக்கியமற்றுப் போகிறது?

மாகாணக் கல்விப் பணிப்பாளரது மேற்படி கருத்தினை அடிப்படையாக வைத்து ஆசிரியர்கள் பாரதூரமான சில குற்றங்களைச் செய்துவிட்டு அதற்கு காரணமாக 'மன நோய்' என்று பதிலளித்தால் அவர்களைச் சட்டப்படியும் நிர்வாகப்படியும் தண்டிக்க முடியாது என்பதும் இதில் மறைமுகமாகவுள்ள ஒரு விடயமாகும்.

எது எவ்வாறு இருப்பினும், எங்கே ஒரு சந்தர்ப்பம் வருகிறது என்று எதிர்பார்த்திருந்து தாக்குவதுபோல், இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் இதுவிடயத்தில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் கூறிய கருத்துக்களுக்கு அப்பால் சென்றும் சில விடயங்களைக் குறிப்பிட்டு வாதாடியிருப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒன்றல்ல. 

1 comment:

  1. அவரது கூற்று உண்மையாயின் இதை கவனமாக ஆராய வேண்டும். ஆசிரியர்களுக்குள்ள வேதனக்குறைபாடு, வாழக்கைச்செலவு நெருக்கடி, பொருளாதார நிலைமை காரணமாக எழும் சமூக அபிப்பிராயம் இவற்றோடு ஆசிரியர்கள் பற்றிய பாராமுகம், அசமந்தப்போக்கு, பாரபட்சம், அதிகார துஷ்பிரயோகம் கணக்கலெடுக்காமை போன்ற நெருக்டிகளால் அவர்களை மறைமுகமாக மனநோயாளர்களாக்கியவர்களும் இதே திணைக்களத்தினராகத்தான் இருக்க வேண்டும். முதலிலே திணைக்களத்திலுள்ள அதிகாரிகளுக்கும் ஊழியர் குழாமுக்கும் சிகிச்சையளிக்க வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.